Thursday, September 27, 2012

மதுவை வெறுத்த ஒரு மானஸ்தன்

பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர் -  ஹாஷிம் அம்லா.
----------------------------------------------------------------------------------------------------------

பகட்டும் படாடோபமும் நிறைந்தது கிரிக்கட் உலகம். கோடிக் கணக்கில்
பணம் புரளுவதால்,ஒரு வேளை, அப்படி இருக்கலாம். அதன் சாபக்
கேடுகளில் ஒன்று மது விருந்துகள். அத்தகையவற்றில் மூழ்கி விடாமலும்,
சுடு மூஞ்சியாய் ஒதுங்கி விடாமலும் சுயம் காத்து நிற்கும் ஓர் அற்புதமான
மனிதர் தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் வீரர்.  முகம்மது ஹாஷிம் அம்லா ! உலகத்
 தர வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர். தென் ஆஃப்ரிக்க அணியின்
 தூண் - துவக்க ஆட்டக்காரர்.

மொட்டைத் தலை - முகம் நிறையத் தாடி - செக்கச்செவேல் என்ற  நிறம் -
உயரத்தாலும் ஒழுக்கத்தாலும் கூட மிக உயர்ந்த மனிதர் இவர். பேட் செய்யும்
நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழுகையின் ‘வக்து’ வந்தால் அந்தந்த
இடங்களிலேயே தொழுது விடுவார். ஆடவேண்டிய நாட்களிலும் தவறாது
நோன்பு நோற்பார் இந்திய,குஜராத் மாநில, சூரத் நகரை பூர்வீகமாகக் கொண்டவர்
முகம்மது ஹாஷிம் அம்லா ! .நல் வழி நடப்பவர். நபி வழியை பேணுபவர். கிழம்
அல்ல.பூத்துக் குலுங்கும் இளமைக்குச் சொந்தக்காரர்.

தென் ஆஃப்ரிக்காவுக்காக ஆடும் வீரர்களின் சட்டையில் ஒரு மதுபான விளம்பரம்
இடம் பெற்றிருக்கும் அதற்காக தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் அமைப்புக்கும் கோடிக்
கணக்கில் வருமானம் வருகிறது. அதிலிருந்து லட்சக் கணக்கில் பணம் வீரர்களுக்கும்
வழங்கப் படுகிறது.

அம்லா தென் ஆஃப்ரிக்க அணிக்காக ஆடத் தேர்ந்தெடுக்கப் பட்ட போது இத்தகைய
ஒரு சட்டையை அணிந்து கொள்ளும்படி கேட்கப்பட்டார். மதுபான விளம்பரம்
இருப்பதால் முடியாது என்று மறுத்தார். அப்படியானால் காசு கிடைக்காது என்றார்கள்.
பரவாயில்லை என்றார். அணியை விட்டே நீக்கப் பட நேரிடலாம் என்பது வீசப் பட்ட
அடுத்த குண்டு...! கொள்கைய விட்டுள்ள புகழ் வேண்டாம். கண்ணை விற்றும் சித்திரம்
வேண்டாம் என்றார் உறுதியாக..!

ஆரம்பத்தில் அணி வீரர்கள் கூட கிண்டலும் கேலியும் செய்தார்கள். அம்லா அதை
பொறுமையுடனும் புன்னகையுடனும் சகித்துக் கொண்டார். ஆனால் இன்று நிலை வேறு.
அவரை ஒரு ஞானிபோல் மதித்துப் போற்றுகிறார்கள். இந்த மொட்டைத் தலை மனிதர்
இன்று மட்டை ஆட்சியில் மன்னர்.  !