Saturday, May 28, 2011

காட்டுக்குள்ளே திகில் பங்களா!


--
யற்கை எழிலும் மிரட்டல் த்ரில்லும் கலந்த சுற்றுலா உங்கள் சாய்ஸா..? பரம்பிக்குளம் உங்களை வரவேற்கிறது. பொள்ளாச்சியில் இருந்து 39 கி.மீ தொலைவில், கேரள எல்லையில் பரவிப் படர்ந்து இருக்கிறது இந்த அழகிய பசுமைப் பிரதேசம்.
ஆணைப்பாடி என்ற இடத்தில் அமைந்து இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்துக்கு, பேருந்து வசதி உண்டு. காடு முழுமைக்கும் ஏசி போட்டது போல, ஆண்டு முழுவதும் குளுகுளு சூழல். மது, சிகரெட், பிளாஸ்டிக் பை என சுற்றுச்சுழலைப் பாதிக்கும் பொருட்களுக்கு இங்கு தடா! 
வனத் துறை அலுவலகத்தினரே சுற்றுலா வழிகாட்டியாக நம்மை வழிநடத்து கிறார்கள். காட்டுக்குள் கூடாரக் குடில் வீடுகள் உண்டு. உள்ளே குளியல் அறை, படுக்கை அறை, கட்டில், பீரோ வசதிகள் உண்டு. விடுமுறை நாட்களில் இரண்டு நபர்கள் அங்கு தங்குவதற்கு  4,000 கட்டணம். மற்ற நாட்களில்  3,500. மூன்று வேளை உணவு, தேநீர், படகுச் சவாரி அனைத்தும் அந்தக் கட்டணத்தில் அடக்கம்.
ஆணைப்பாடியில் இருந்து பரம்பிக்குளம் 25 கி.மீ தூரம். அடர்ந்த வனத்துக்கு நடுவே இருக்கும் சாலையில் பயணிக்கும்போது, இரண்டு பக்கங்களிலும் சுதந்திரமாக உலவும் மான் கூட்டம் நம் கவனம் கவர்கின்றன. காட்டு எருமைகளையும் காண முடிகிறது. தொலைவில் இரை தேடும் செந்நாய் கூட்டம் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ச்சுகிறது. அடிக்கடி கரை கடக்கிறது யானைக் கூட்டம். அவற்றுள் குட்டிகள் மட்டும் காரைத் தடவி, பின்புறத்தை கார் மீது தேய்த்து சேட்டை செய்கின்றன. நாம் அமைதியாக ரசிக்கும்பட்சத்தில், ஆபத்து இல்லை. இந்த வனத்தில் இருக்கும் சுமார் 20 புலிகளில் ஏதேனும் ஒன்று, அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் கண் களுக்குச் சிக்கும். அதே புலிக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அதன் டைனிங் டேபிளில் நீங்கள் இருப்பீர்கள்... உஷார்!
பரம்பிக்குளத்தில் மூன்று அணைகளும் கடல்போல் காட்சி அளிக்கும் பிரமாண்ட ஏரியும் உண்டு. கரையோர விலங்குகளை ரசித்துக்கொண்டே படகுச் சவாரியில் லயிக்கலாம். ஏரியின் நடுவே ஆங்காங்கே சில தீவு கள்... குன்றுகள். ஒரு தீவில் இருக்கும் குன்றின் உச்சியில் ஒரு பிர மாண்ட பங்களா இருக்கிறது.
அப்படியே 'சந்திரமுகி’ திகில் பங்களாபோலவே மிரட்டுகிறது. துணிச்சல் பேர்வழிகள்கூட அங்கு தனியாகத் தங்க யோசிப்பார்கள். கரையில் இருந்து இந்த தீவுக்குச் செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. அந்த பங்களாவில் ஐந்து பேர் தங்க  5,000 வாடகை. மதியம் 3 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை தங்கலாம். மின்சாரம், குடிநீர், உணவு எதுவும் கிடையாது. கையோடு எடுத்துச் செல்லும் உபகரணங்களே துணை.
சில கி.மீ. உள்ளே சென்றால், கன்னிமாரா தேக்கு மரம் இருக்கிறது. காட்டுக்குள் ஆங்காங்கே மரத்தின் உச்சியில் வீடு கட்டிவைத்து இருக்கிறார்கள். தேனிலவுத் தம்பதியர் ஸ்பெஷல். ஆனால், எவரும் தங்கலாம். ஐந்து பேர் தங்குவதற்கு வாடகை  5,000. பௌர்ணமி இரவு மட்டுமே அனுமதி. வழிகாட்டி, பாதுகாவலர் உண்டு.
பரம்பிக்குளத்தில் இருந்து காட்டுக்குள் எட்டு கி.மீ. பயணித் தால், தெல்லிக்கால் பங்களாவை அடையலாம். இங்கும் மதியம் 3 மணியில் இருந்து மறுநாள் காலை 8 மணி வரை தங்கலாம். ஐந்து பேர் தங்கக் கட்டணம்  4,000. ஓர் உயர்ந்த கோபுரத்தில் அமைந்து இருக்கும் வாட்ச் டவரில், ஒரு சின்னக் கட்டடம் உண்டு. அதில், மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை தங்குவதற்கு,  3,500 கட்டணம். வன விலங்குகள் மிக அதிகம் இருக்கும் பகுதி என்பதால், ஏராளமான வன விலங்குகளை இங்கு இருந்து பார்த்து, ரசிக்க முடியும்!
என்ன... கிளம்பிட்டீங்களா பரம்பிக்குளத்துக்கு!
-

sahulDubai
+971504753730

No comments:

Post a Comment