Tuesday, May 29, 2012

இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான்


இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான்

Ameer Khan S Satyameva Jayate Effect Mp Health Dept
 
 
“மக்களை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்” இது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் விவாதம் செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் வைத்த கோரிக்கை.

ஸ்டார் ப்ளஸ், டிடி, விஜய் டிவி என மூன்று சேனல்களிலும் ஞாயிறு காலை 11 மணிக்கு சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமீர்கான் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாராமும் முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு விவாதம் நடைபெறுகிறது.

முதல் வாரத்தில் பெண்கருக்கொலையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதோடு பெண் குழந்தை என்றால் அவற்றை கருவிலேயே அழிக்கும் கொடுமை பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண் கருக்கொலைக்கு காரணமான ஸ்கேன் சென்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்துறையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றியும் இந்திய மருத்துவத்துறையின் லட்சணம் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் அமீர்கான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாதிக்கப்பட்டவர்களின் கருத்து அதிர்ச்சியளிக்கும் படியாக இருந்தது. ஆபரேசன் என்று கூறி பல லட்சம் ரூபாயை கறந்து விட்டு உயிரைக்கூட காப்பாற்ற முடியாத கையாலாகாத மருத்துவர்களைப் பற்றியும், மருத்துவமனைகளைப் பற்றியும் கூறியது நெஞ்சத்தை பதை பதைக்கச் செய்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சேர்மன் பேசிய போது அவரிடம் மருத்துவர்களுக்கான கொள்ளை கோட்பாடு பற்றி அமீர்கான் கூறினார். மருத்துவம் என்பது தொழில் அல்ல எனவே மருத்துவர்கள் இதை தொழிலாக பார்க்க கூடாது. சேவையாகத்தான் செய்யவேண்டும். எந்த ஒரு மருத்துவரும் நோயாளியிடம் அவருடைய நோயைக் பற்றி பயமுறுத்தும் வகையில் கூறக்கூடாது. அதேசமயம் அவருக்கு உள்ள நோயைப் பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மருத்துவர்கள் பிற மருத்துவமனைக்கு நோயாளியை அனுப்பும் போது அதற்கு கமிசனோ வேறு எந்த அன்பளிப்போ பெறக்கூடாது என்பது கொள்கை.

இந்த கொள்கையில் ஒன்றைக்கூட தற்போது மருத்துவர்கள் பின்பற்றுவதில்லை. நோயாளிகளுக்கு நோயினால் ஏற்படும் வேதனையையும், வலியையும் விட மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்கும் பில் தொகையே அதிக வேதனை தருவதாக இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.

இதையேதான் ரமணா படத்தில் விஜயகாந்த், “ கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் கையெடுத்துக் கும்பிடுவது டாக்டர்களைத்தான். உங்களை நம்பி வந்த நோயாளிகளை பணத்துக்காக இப்படி ஏமாத்துறீங்களே” என்று கேட்பார். இன்றைக்கு பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகள் நோயாளிகளின் கழுத்தில் கத்திவைக்கும் வேலையைத்தான் செய்கின்றன. வசூல்ராஜாக்களாக செயல்படும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இன்றைக்கு பெருகி வருகின்றன.

அரசு மருத்துவமனைகளின் மீது ஏற்படும் நம்பிக்கையின்மையினாலேயே நடுத்தர வர்க்கத்தினர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவர்களின் நிலையை அறிந்த பின்னரும் நோய்க்கு ஏற்ற சிகிச்சையை மட்டுமே அளிக்காமல் மருத்துவமனையில் இருக்கும் மெஷினுக்கும் சேர்த்து மருத்துவமனை நிர்வாகங்கள் பில் போடுகின்றன. இப்படி நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அமீர்கான்.

மருத்துவர்கள்தான் இப்படி என்றால் மருந்துகளின் விலையோ யானை விலை குதிரை விலையாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு சகாயவிலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் அரசே மருந்தகங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு மருந்தை தனியார் மருந்தகங்களில் வாங்குவதற்கும் அரசு மருந்தகங்களில் வாங்குவதற்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவர்களின் கொள்ளை ஒருபக்கம் மருந்தகங்களின் கொள்ளை ஒருபக்கம் என இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து நோயாளிகள்

இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு மருத்துவமனைகளை நடத்திவரும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எவ்வளவு பெரிய நோய் என்றாலும் அதனை எளிதாக குணப்படுத்தும் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் மக்கள் இருக்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மக்களுக்காக மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் ஆர். முத்துகிருஷ்ணன் எம்.எஸ்., அவர்களிடம் சத்யமேவ ஜெயதே நிகழ்சியில் அமீர்கான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் வருத்தத்துடன் இந்த கருத்தை ஒத்துக்கொள்வதாக கூறினார்.
கார்ப்பரேட் மருத்துவமனைகள் இன்றைக்கு நோயாளிகளின் கழுத்தில் கத்தியை வைத்துதான் பணத்தை வசூல் செய்கின்றன என்பதை அவர் ஒத்துக்கொண்டார். மருத்துவத்தொழில் செய்யும் தன்னுடைய அனுபவத்திலேயே தனது சொந்தக்காரர்களுக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் உதாரணத்துடன் தெரிவித்தார்.

நடுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரி தொழில் செய்யும் ஒருவரின் மகள் அபாயமான சூழ்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை டிஸ்சார்ஜ் செய்த்தாகவும் அவர் கூறினார். கார்ப்பரேட் மருத்துமனைகள் எதுவும் மருத்துவத்துறைக்கான கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும் அவர் கூறினார். எனவே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் கூறியதைப்போல நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்வதில் தவறு எதுவும் என்றும் டாக்டர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Monday, May 28, 2012

சரியும் ரூபாய் மதிப்பு... மக்களுக்கு என்ன பாதிப்பு?


நமது பணமான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் 10 பைசா சரிந்தது அல்லது உயர்ந்தது என்றுதான் செய்தி வரும். ஆனால், இப்போது அதுவே தலைப்புச் செய்தியாக மாறுகிற அளவுக்கு ரூபாயின் மதிப்பு படுபயங்கரமாக குறைந்திருக்கிறது. டாலருக்கு எதிராக ரூபாய் கடந்த 3 மாதத்தில் 11 சதவிகிதம் குறைந்துள்ளது. சரி, ரூபாயின் மதிப்பு குறைவதால் சாதாரண மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேட்கிறீர்களா? இதே கேள்வியைத்தான் நாம் பொருளாதார பேராசிரியர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம். விளக்கமாகவே எடுத்துச் சொன்னார் அவர்.
''ரூபாய் மதிப்பு மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன், ரூபாய் மதிப்பு எப்படி சரிவடைந்தது என்பதை முதலில் பார்ப்போம். அமெரிக்கப் பணமான டாலரின் தேவை எவ்வளவு, ரூபாயின் தேவை எவ்வளவு என்பதைப் பொறுத்து ரூபாயின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. இப்போதைக்கு இந்தியாவுக்கு உள்ளே வரும் டாலரின் அளவு குறைந்துகொண்டே இருக்கிறது. அதேசமயம், இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் டாலரின் அளவு அதிகரித்தபடி இருக்கிறது. இதனால், டாலருக்கு ஏற்படும் டிமாண்ட் காரணமாக டாலரின் மதிப்பு ஏகத்துக்கு உயர, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறது.
ரூபாயின் மதிப்பு சரிய முதல் காரணம், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போவது தான். அதாவது, இந்தியாவின் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, நாம் ஆண்டுக்கு 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இந்த தங்கத்தை டாலர் கொடுத்துதான் வாங்க வேண்டும். மேலும், இந்த பற்றாக்குறையை பேலன்ஸ் ஷீட்டில் சரிசெய்ய அதிகளவு வெளிநாட்டு கரன்சிகளை கடன் வாங்குகிறோம். அதுவும் குறுகிய கால கடன்களாக.
நீண்ட காலத்தில் கடன் வாங்கினால் குறைந்த வட்டியி லாவது கடன் கிடைக்கும். ஆனால், குறுகிய காலத்தில் கடன் வாங்கினால், அதிக வட்டியைத் தரவேண்டி யிருக்கும். இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இந்தியாவை பற்றிய நம்பிக்கை குறையும்.
ஒரு தொழில் அல்லது ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்றாலே அதன் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம். நாம் அந்த நம்பிக்கையை இழந்து கொண்டே வருகிறோம். உதாரணமாக, ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி, வீடு கட்டினால் அதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால், கந்து வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டும் ஒருவரை யாராவது புகழ்ந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்றைக்கு நம்மை அப்படித் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக நமது நாட்டுக்கு வரும் அந்நிய முதலீடு குறைந்துகொண்டே வருகிறது. 2010-ம் ஆண்டு சுமார் 3,000 கோடி டாலர்கள் அளவுக்கு இந்திய சந்தையில் அந்நிய முதலீடு இருந்தது. 2011-ல் 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிலிருந்து பணத்தை வெளியே எடுத்தார்கள். டாலர் வரத்தே இல்லாமல் போனதால் ரூபாய் மதிப்பு சரிவது தவிர வேறு வழி இல்லாமல் போனது.  
அடுத்த முக்கிய காரணம், என்.ஆர்.ஐ. டெபாசிட்கள். அவர்களுக்கு அதிக வட்டி கொடுக்கிறோம் என்பதெல்லாம் சரிதான். அதற்காக அவர்கள் முதலீடு செய்வார்களா என்றால் உறுதியாகச் சொல்ல முடியாது.
ஒரு டாலர் 54 ரூபாய் இருக்கும்போது முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி கிடைக்கிறது. ஆனால், திரும்ப எடுத்து செல்லும்போது 58 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு டாலர் அவர்களுக்கு கிடைக்கும். அப்படியானால் அவர்கள் இங்கு எவ்வளவு லாபம் சம்பாதித்தார்களோ, அது அத்தனையையும் ரூபாய் மதிப்பின் சரிவின் காரணமாக இழந்துவிடுவார்கள். இதற்கு,  அவர்கள் இருக்கும் நாட்டிலே குறைந்த  வட்டிக்கு முதலீடு செய்து விடலாம். வெளிநாட்டு முதலீடு குறைவாக இருக்கிறது என்பதால்தான், இங்கிருக்கும் ஏற்றுமதியாளர்களிடம் டாலர்களை விற்க சொன்னது ஆர்.பி.ஐ.
இந்த மாதிரியான நிச்சய மின்மைகள் இருக்கும்போது, முதலீட்டாளர்கள் சந்தையி லிருந்து கொஞ்சம் ஒதுங்கி நிற்கவே விரும்புவார்கள். இதனால், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
சரி, ரூபாயின் மதிப்பு சரிந்திருப்பதால் சாமானிய மக்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்ப்போம். மேலோட்டமாக பார்த்தால், இதற்கும் சாதாரண மக்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் தெரியும். ஆனால், கொஞ்சம் ஆழமாக பார்த்தால், இதனால் சாதாரண மனிதர்களுக்கு பல பாதிப்பு ஏற்படும். காரணம், நாம் இன்னமும் பல பொருட்களை இறக்குமதி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
அதில் முக்கியமானது கச்சா எண்ணெய். ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கும் இந்த வேளையில்  உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதினால் விலை உயராமல் இருக்கிறது. ஒரு வேளை கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயரும். இது உயரும்பட்சத்தில் போக்கு வரத்துக் கட்டணம் உயரும். அதனால் நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் விலை உயர வாய்ப்பிருக்கிறது. காய்கறி விலைகள் இன்னும் உயரும்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி நாம் சமையல் எண்ணெய், ரப்பர், சர்க்கரை, உரங்கள், பேப்பர், ஸ்டீல், எலெக்ட்ரானிக்ஸ், கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான மூலப் பொருட் களை இறக்குமதி செய்கிறோம். இதில் சமையல் எண்ணெய், சர்க்கரை போன்றவை நம்மை நேரடியாகப் பாதித்தாலும், ரப்பர், உரம் போன்றவை நேரடியாக பாதிப்பு ஏற்படுத் தாமல், சுற்றி வளைத்து பாதிப்பு ஏற்படுத்துபவை.
கம்ப்யூட்டர், செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் நாம் இறக்குமதி செய்து வருவதால் அந்த பொருட்களின் விலையும் கணிசமாக உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
மேலும் விலைவாசி உயரும் போது பணவீக்கம் அதிகரிக்கும், பணவீக்கம் அதிகரிக்கும்போது வட்டி விகிதம் மீண்டும் உயரும்; இதனால் வளர்ச்சி குறையும், வேலை வாய்ப்புகள் குறையும். இப்படி பல பிரச்னைகள் உருவாகும்'' என்றார்.
ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. இனி, அதன் மதிப்பு உயர என்னதான் செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டோம். ''இரண்டு விஷயங்களால்தான் ரூபாயை உயர்த்த முடியும். முதலாவது, நம் பொருளாதாரத்தை சீர் தூக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு மிக வேகமாகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால் நமது பொருளாதாரத்தைவிட மற்ற நாடுகளின் பொருளாதாரம் மோசமாக வேண்டும். இரண்டாவது விஷயத்தைச் செய்ய நம்மால் முடியாது. முதல் விஷயத்தைச் செய்வதற்கு  வேண்டுமானாலும் முயற்சித்துப் பார்க்கலாம்! எல்லாம் நம்மை ஆளுகிறவர்களின் கைகளில் இருக்கிறது'' என்று முடித்தார் சிரித்தபடி.
எதையாவது செய்து ரூபாயின் சரிவைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். என்ன செய்யப் போகிறார்கள் நம்மை ஆளும் அரசியல்வாதிகள்?

2003-04-ம் ஆண்டில் மது விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3,639 கோடி. 2010-11-ம் ஆண்டில் ரூ.14,965 கோடி. இது நமக்கு நாமே சூட்டிக்கொள்ளும் மணிமகுடமா, முள்கிரீடமா?


மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடி வருவாய் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும்' என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது நியாயமான கருத்து போலத் தோன்றும். மது விற்பனையை அரசு செய்யாமல் தனியார் எடுத்துக்கொண்டு செய்தால், இத்தனை லாபமும் தனியாருக்கு அல்லவா போகும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இந்த மதுவைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் பணம் எவ்வளவு, இந்த மதுவின் உற்பத்திச் செலவு எவ்வளவு என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்குமேயானால், தற்போது மது விற்பனையில் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடியைக் காட்டிலும் அதிகமான வருவாயைத் தனியார் மது தயாரிப்பு நிறுவனங்கள் லாபமாக அடைந்து வருகின்றன என்கிற கசப்பான உண்மை வெளிப்படும்.
அந்நிய மதுபானத் தொழிலில் வெறும் எரிசாராயத்தைத் தண்ணீரில் கலந்து விற்பதைத் தவிர, மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் கிடையாது. பல தருணங்களில் இந்த மது புளிப்பேறும் காலஅவகாசம்கூட இல்லாமல் அப்படியே பாட்டில்களில் அடைக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. அவ்வளவு தேவை இருக்கிறது. ஆகவே, மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் மேலதிகமாகவே கிடைக்கிறது என்பது நிச்சயம். தரக்கட்டுப்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது, கலால் வரி கட்டாமல் திருட்டுத்தனமாக எவ்வளவு மது விற்பனையாகிறது என்பதெல்லாம் வெளியில் விவாதிக்கவேபடாத பிரச்னைகள்.
மதுவிலக்கை அமல்படுத்தினால் என்ன ஆகும் என்று பார்க்கலாம். தமிழக அரசுக்கு ரூ. 15,000 கோடி வருவாய் கிடைப்பது நின்றுபோகும். அதேபோல, மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்காது. இத்தனை வருமானமும் சமூகவிரோதிகளுக்குப் போகும் என்று சொன்னால், தமிழகத்தில் இப்போது விற்பனையாகும் அதே அளவுக்கு கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடினால்தான் உண்டு. பிறகு எதற்கு காவல்துறை, கண்காணிப்பு? ஏன், ஒரு ஆட்சி, அரசாங்கம் எல்லாம்? லஞ்சத்தைக் கட்டுப்படுத்த அரசால் முடியாது என்று கூறி லஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதுபோல இருக்கிறது இந்த வாதம்.


மதுவிலக்கு அமலில் இருக்கும்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் இருக்கத்தான் செய்தனர். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவர்களிடம் திருட்டுத்தனமாக சாராயம் குடித்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஊரிலும் சில நூறு பேர்தான். கள்ளச்சாராயம் குடிப்பது சமூக அவமானமாகக் கருதப்பட்டதால் 95 சதவிகித குடிமக்கள் குடிகார மக்களாக இல்லாமல் இருந்தனர்.

ஆனால், அரசு சொல்கிறது 32 மாவட்டங்களில் ரூ.66 லட்சத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தி மதுவின் தீமை குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லவிருக்கிறோம். இதுதவிர, ஆயத் தீர்வை ஆணையருக்கு ரூ.34 லட்சம் வழங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று! ஏற்கெனவே மாநிலத்தில் மதுஅடிமைகளின் புனர்வாழ்வு மையங்கள் 15 உள்ளன. இவற்றுடன் மேலும் 3 மையங்கள் திறக்கப்படும். புதிய மையத்துக்காகவும், பழைய மையங்களை மேம்படுத்தவும் ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சொல்கிறது தமிழக அரசு. கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக இருக்கிறது.

ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகிய ஆறு முதல்வர்கள், மதுவாசனையை தமிழக இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். 1991-ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, சாராயக்கடைகளை மூடி புண்ணியம் கட்டிக்கொண்டார். அதற்காக அவரைப் பாராட்டாத தாய்மார்களே கிடையாது. இப்போது அவர் ஏன் அதே மனத்திண்மையுடன் செயல்படாமல் இருக்கிறார் என்பதுதான் அவரிடமிருந்து நல்லாட்சியை எதிர்பார்ப்பவர்கள் எழுப்பும் கேள்வி.
"திமுக அரசின் இலவசத் திட்டங்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான நிதி மதுவிற்பனையில்தான் கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட முடியாத நிலை' என்று காரணம் கூறக்கூடும். அதற்கு படிப்படியாக இலவசங்களைக் குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் வழியே தவிர, மது விற்பனையை அதிகரித்து இலவசங்களை வாரி வழங்குவது சரியான முடிவாக இருக்காது.

மதுக்கடைகளில் வேலை செய்யும் சுமார் 30,000 பேரும் ஏதோ ஓர் அரசியல்கட்சியுடன் இணைவு பெற்ற டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் அமைத்துள்ளனர். பணிநிரந்தரம் செய்யக் கோரி போராடுகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் அதே அரசியல் கட்சிகள் தங்கள் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்காகக் களத்தில் குதிக்கின்றன. அரசியல் கட்சிகளின் ஆஷாடபூதிதனத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

மது விற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் இலவசங்களை அள்ளிக் கொடுக்க முடிகிறது. 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது என்பதெல்லாம் நொண்டிச் சாக்குகள். மது விற்பனையால் மக்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம் சீர்குலைகிறது. உழைக்கும் திறன் குறைகிறது. அடுத்த தலைமுறையினர் சீரழிகிறார்கள். மாலை 5 மணிக்குப் பிறகு பெண்கள் தனியாகத் தெருவில் நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரக் குறைவான தெருவோரக் கடைகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம்தான் நிஜமான விளைவுகள்.

"முதலில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளும் பார்களும் இருப்பதை பாதிக்குப் பாதியாகக் குறைப்பது அடுத்த 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை நோக்கித் தமிழகத்தை இட்டுச் செல்வது மதுக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சுயதொழில் செய்ய வாய்ப்பளித்து அந்த இளைஞர்களுக்கு நல்லதொரு வருங்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது'. இப்படியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பு.
2003-04-ம் ஆண்டில் மது விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3,639 கோடி. 2010-11-ம் ஆண்டில் ரூ.14,965 கோடி.
இது நமக்கு நாமே சூட்டிக்கொள்ளும் மணிமகுடமா, முள்கிரீடமா?

நன்றி :தினமணி