ஆந்திர முதல்வர் மரியாதைக்குரிய ராஜசேகரரெட்டி அவர்களின் அகாலமரணம் நாம் அறிந்த ஒன்றே! திரு ரெட்டி அவர்கள் மதசார்பற்ற சிறந்த ஜனநாயகவாதியாக திகழ்ந்தார். தனது மாநில மக்களில் அனைத்து தரப்பாரும் உயரவேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருந்தார். அதனால் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த முஸ்லீம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக தனி இடஒதுக்கீடு வழங்கினார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை பொறுக்க முடியாத சங்க்பரிவார சக்திகள் சட்டரீதியாக தடைபோட முயற்சித்தபோது அதை சாதுர்யமாக எதிர்கொண்டு முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டின் பயனை அடைய வழிவகை செய்தார். அவரது மரணம் உள்ளபடியே மிகமிக வருத்தத்திற்குரிய ஒன்றாகும். அதே நேரத்தில் அவரது மரணத்தையடுத்து தொடரும் அவரது அபிமானிகளின் உயிரிழப்புகள் கவலையளிப்பதாக உள்ளது. இதுவரை சுமார் 170 க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியாலும்- தற்கொலையாலும் உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒருவர் மீதான அபிமானம் உயிரைவிடும் அளவுக்கு கொண்டு செல்வதற்கு காரணம் மரணம் தொடர்பான தெளிவின்மைதான்.இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகமாக நிகழும் மாநிலம் கேரளமாகும். இங்கே தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் சதவிகிதம் மிகமிக குறைவானதாகும். ஏனென்றால், முஸ்லிம்களுக்கு இஸ்லாம் உயிர் விசயத்தில் தெளிவான வழிகாட்டியிருக்கிறது. முதலாவதாக நம்முடைய நேசத்திற்குரிய ஒருவர் மரணித்துவிட்டால் செய்யவேண்டியது என்ன என்பதை இஸ்லாம் சொல்லிக்காட்டுகிறது. கணவன் இறந்து விட்டால் அவனது மனைவி நான்கு மாதம் துக்கம் அன்ஷ்டிக்கலாம். மற்றவர்கள் அவர்கள் பெற்றவர்களே ஆனாலும் மூன்று நாட்களுக்கு மேலாக துக்கம் அனுஷ்டிக்க இஸ்லாம் தடைவிதிக்கிறது. காரணம் மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இன்று நமது நேசத்திற்குரியவர்களுக்கு வந்த மரணம் நாளையோ-அடுத்த வாரமோ- அடுத்த வருடமோ- அல்லது சில ஆண்டுகளிலோ நமக்கும் வரத்தான் போகிறது. இதில் நம் கையில் ஒன்றும் இல்லை.
மனிதனை படைத்த அல்லாஹ் கூறுகின்றான்;நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே![அல்-குர்ஆன்;4:78 ]
அனைத்து மாந்தருக்கும் மரணம் உறுதி என்ற இறைவன், தன் புறத்திலிருந்து அந்த உயிர் கைப்பற்ற படுவதற்கு முன்பாக யாருக்காகவும்- எதற்காகவும் அந்த உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [நூல்;புஹாரி 1364]
ஒரு முஸ்லிமின் இலக்கு சுவனத்தை அடைவதுதான். அந்த சுவனத்தை அடைவதற்கு தடைக்கல்லாக தற்கொலை இருப்பதால்தான் முஸ்லிம்கள் யாருக்காகவும் தற்கொலை செய்வதில்லை. இதற்கு சான்றாக ஒன்றை கூறலாம். முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய ஒரே தலைவர் நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மரணித்தபோது அவர்களுக்காக யாரும் தன் உயிரை நீத்துக்கொள்ளவில்லை. மாறாக ஒரு சில நபித்தோழர்கள் நபியவர்கள் இப்போது மரணிக்கவில்லை என்ற எண்ணத்தில் இருந்த போது நபியவர்களின் உற்ற தோழர் அபூபக்கர்[ரலி] அவர்கள் சொன்னார்கள்;
'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார்.[புஹாரி]
லட்சக்கணக்கான மக்கள் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய நபியவர்கள் இறந்தபோது, அவர் மனிதர்தான்; அவர் மரணிக்கக்கூடியவர்தான். அவரை படைத்த அல்லாஹ் மட்டுமே மரணத்திற்கு அப்பாற்பட்டவன் என்று ஆணித்தரமாக எப்படி அந்த நபித்தோழரால் கூறமுடிந்தது..? ஒருவர் மீது நாங்கள் உயிரினும் மேலாக நேசம் கொண்டாலும் அவரை நாங்கள் கடவுளாக கருதமாட்டோம். கடவுளின் தன்மை[சாகாவரம்] அவருக்கு இருக்கிறது என்று நம்பமாட்டோம் என்ற கொள்கைதான் இஸ்லாம். அந்த இஸ்லாம்தான் ஒருவரது மகிழ்ச்சியில் தடம் புரளாமல் இருக்கவும், ஒருவரது துக்கத்தில் நிலைகுலையாமல் இருக்கவும் வழிகாட்டும் என்பது நிதர்சனமாக அன்று நபியவர்கள் காலத்திலும் நிரூபிக்கப்பட்டது. இன்றும் எத்துணையோ முஸ்லீம் மன்னர்கள் மரணித்தபோதும் அவர்களுக்காக எந்த முஸ்லிமும் தன் உயிரை விடமாட்டான் என்பதை இன்றும் நிரூபிக்கிறது. ஆம்! இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம்.
குறிப்பு; சில முஸ்லிம்கள் தற்கொலை செய்கிறார்களே என்ற கேள்வி வருமாயின், அவர்கள் இஸ்லாத்தை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்பதே காரணம்.
No comments:
Post a Comment