Monday, January 24, 2011

பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரத்தியாகம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரத்தியாகம்!

தனது படுக்கையில் அமர்ந்து சுபையா மூசா அபு ரஹ்மே அவரது சமீபத்திய இழப்பைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். இறந்து போன அவரது மகனை நினைவுபடுத்தும் விளம்பர அட்டைப்படங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று அவரது சொந்த கிராமத்தில் நடந்த‌ இஸ்ரேல் தடுப்புச் சுவருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் அவரது 35 வயது மகள், ஜவஹர் இறந்து போனார். இஸ்ரேல் ராணுவம் உறுதியாக மறுத்தாலும், கண்ணீர் புகையை அளவுக்கதிகமாக சுவாசித்ததாலேயே அவர் இறந்து போனதாக ஜவஹரின் குடும்பத்தினர் உறுதிபட‌க் கூறுகிறார்கள்.

“எனக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்கிறார் வலுவற்ற குரலில் அபு ரஹ்மே. தலையில் ஒரு வெண்ணிறத் துணியை சுற்றியிருக்கிறார். கண்களில் வெறுமை படர்ந்திருக்கிறது.அவரது குடும்பத்திற்கு இழைக்கப்பட்டிருப்பதை,அவரது குடும்பத்தின் மீது தொடர்ந்து நிகழ்ந்துவரும் பயங்கரங்களை அவரால் முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. மேற்குக்கரை ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீன போராட்டத்திற்கான உருவகமாக அமைந்து விட்டது.

கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அபு ரஹ்மேவின் மகன் பாசாம்,கேஸ் குண்டுவெடிப்பில் இறந்து போனார். அவர் “வன்முறையற்ற எதிர்ப்பு” ஒன்றை ஒருங்கமைத்திருந்த கமிட்டிகளில் ஒரு துடிப்புமிக்க உறுப்பினராக இருந்தார். எஞ்சியிருப்பது அவரது அடுத்த மகன், அஷ்ரப். ஒரு இஸ்ரேல் ராணுவ வீரன் இரும்புத் தோட்டாக்களால் சுட்டதால் அவரும் காலில் காய‌த்துடன் தப்பியிருக்கிறார்.

இப்போது, ஜவஹர்.

“அவள் மிகவும் அருமையான பெண். இங்கிருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவள். இந்த தடுப்புச் சுவர் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டது. இப்போது,எனது பிள்ளைகளும் என்னை விட்டு போய் விட்டனர்.என்னிடம் இப்போது எதுவும் மீதமில்லை.” என்கிறார் 55 வயதான விதவை, அபு ரஹ்மே.

“ஆனால், எங்கள் பிரியத்துக்குரியவரை இழக்கும் ஒவ்வொரு தடவையும் ஆக்கிரமிப்புக்கெதிராக போரிடும் பலத்தைத்தான் பெறுகிறோம்.” மேலும் கூறுகிறார் “இது எங்கள் நிலம். அதற்காக எதிர்த்துப் போராடுவோம். அந்தச் சுவரை தகர்த்தெறியும் வரை ஓயமாட்டோம்”.

ஜவஹருக்கு துக்கம் கொண்டாட வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில்,ஆண்கள் கூடியிருக்கிறார்கள்.பேரிச்சம் பழத்தை சாப்பிடுகிறார்கள். மசாலா காபியை அருந்துகிறார்கள்.தொடர்ந்து புகை பிடிக்கிறார்கள் – ஆனால், யாரும் பேசவில்லை. அவ‌ர்க‌ளது ம‌ர‌புப்ப‌டி பெண்க‌ள் த‌னிய‌றையில் அம‌ர்ந்திருக்கிறார்க‌ள். அருகிலிருந்த‌ ர‌ம‌ல்லாவைச் சேர்ந்த‌ இரு மாற்றுத்திற‌னாளிக‌ளுக்கு உத‌வி செய்துக கொண்டிருந்த‌ இர‌க்கம் வாய்ந்த‌‌ ஒரு இள‌ம்பெண்ணுக்கு த‌ங்க‌ள் அனுதாபத்தைத் தெரிவிக்க‌ அர‌சு அதிகாரிக‌ள்,ந‌ண்ப‌ர்க‌ள்,உற‌வின‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌ள்ளிச்சிறார்க‌ள் என்று அனைவ‌ரும் வந்து செல்கிறார்க‌ள்.

இஸ்ரேலிலிருந்து பால‌ஸ்தீனப் ப‌குதிக‌ளைப் பிரிக்கும் த‌டுப்புச் சுவ‌ர் அபு ர‌ஹ்மேவின் வீட்டிற்கு வெளிப்புறத்திலிருந்து பார்த்தால் தெளிவாக‌த் தெரிகின்ற‌து. இந்த‌ த‌டுப்புச் சுவ‌ர் எழுப்ப‌ப்ப‌டுவ‌த‌‌ற்கெதிராக‌ அக்க‌ம்ப‌க்க‌த்து வீட்டாருட‌ன் சேர்ந்து அவர்கள் ஐந்து ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ போராட்ட‌த்தில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர். ஆனால், இந்த‌ப் போராட்டம் அந்த‌ கிராம‌த்திலேயே வேறெந்த‌க் குடும்ப‌த்தையும் விட‌ அதிக‌மான‌ இழ‌ப்பை இக்குடும்பத்திற்கு கொண்டு வ‌ந்திருக்கிற‌து. மேலும், க‌ட‌ந்த‌ வார‌த்தில் ஜ‌வ‌ஹ‌ரின் ம‌ர‌ணம் அவ‌ர்கள் குடும்பத்தை மீண்டும் த‌லைப்புச் செய்திக‌ளுக்குக் கொண்டு வ‌ந்திருக்கிற‌து.

பில்லிங்கில் ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தின்போது இஸ்ரேல் ராணுவ‌ வீர‌ர்க‌ள் போட்ட‌ கண்ணீர்ப் புகை குண்டுக‌ளை சுவாசித்த‌தாலேயே அவ‌ர் உயிரிழ‌ந்தார் என்று அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ர் உறுதியாக‌ச் சொல்கிறார்க‌ள். ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னை அறிக்கைக‌ள் உட்பட, பால‌ஸ்தீன‌ அறிக்கைக‌ளின் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை இது கேள்விக்குள்ளாக்குகின்ற‌து. ராணுவ‌ விசார‌ணை இன்னும் முடிவுக்கு வ‌ர‌வில்லையென்றாலும், “இது போன்ற‌ ஒரு சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் உண்மையென்று ஏற்றுக்கொண்டாலும், ஜவஹரின் ம‌ர‌ண‌ம் க‌ட‌ந்த‌ வெள்ளிக்கிழ‌மை ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தோடு முற்றிலும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டாத‌ ஒன்று” என்றும் கூறுகிற‌து.

ஆனால், முற்றிலும் சோர்வடைந்த நிலையிலிருக்கும் சுபையா முசா அபு ரஹ்மேவுக்கு எந்த‌ ச‌ந்தேக‌மும் இல்லை. “ராணுவ‌ வீர‌ர்க‌ள் புகைக் குண்டுக‌ளை போட ஆர‌ம்பித்த‌போது, மோத‌ல் ந‌ட‌ந்த‌ ப‌குதிக்கு ச‌ற்றுத்த‌ள்ளி நான் என் ம‌க‌ளுட‌ன் இருந்தேன்.” என்று நினைவு கூர்கிறார்.”காற்றில் வ‌ந்த‌ புகையினால் நாங்க‌ள் அவ‌திக்குள்ளானோம். இத‌ற்குமேல் என்னால் தாங்க‌ முடிய‌வில்லை என்று எனது ம‌க‌ள் சொன்ன‌தோடு வாந்தியெடுக்க‌வும் ஆர‌ம்பித்தாள்”. ச‌மீர் இப்ராஹிம், 34 வ‌ய‌தான‌ ஜ‌வ‌ஹ‌ரின் ம‌ற்றொரு ச‌கோத‌ர‌ர் ஆம்புல‌ன்சை அழைத்த‌தையும், ம‌ருத்துவ‌மனைக்குச் செல்லும் வ‌ழியிலேயே த‌ன‌து ச‌கோத‌ரி மரணமடைந்த‌‌தையும் நினைவு கூர்கிறார்.

“அவ‌ள் மிக‌வும் மோசமான‌ நிலையில் இருந்தாள்” என்கிறார். “அவ‌ர்க‌ள் அவ‌ளை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்க‌ள்.அவ‌ள் வாயிலிருந்து நுரைநுரையாக‌ வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள். நான்கைந்து நிமிட‌ங்க‌ளில் ஒரு ஆம்புல‌ன்சு வ‌ந்த‌து. புகைமூட்டம் காரணமாக‌ அவ‌ளுக்கு போதுமான ஆக்சிஜ‌ன் கிடைக்க‌வில்லை என்று ம‌ருத்துவ‌ர்க‌ள் கூறினார்கள்”

ச‌மீர், த‌டுப்புச்சுவ‌ருக்கெதிராக‌ ந‌டைபெறும் ஆர்ப்பாட்ட‌த்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மையும் க‌ல‌ந்துகொள்கிறார். தொடர்ச்சியாக பாலஸ்தீனிய‌ர்க‌ள் க‌ற்க‌ளை வீசுவ‌து,ராணுவ‌ம் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளை வீசுவ‌து என போராட்ட‌த்தில் மோத‌ல்க‌ள் நிக‌ழ்வ‌து சாதார‌ணமான‌துதான். அருகாமையில் உள்ள‌ கிராம‌ங்களுக்குக் கூட சில நொடிக‌ளில் அட‌ர்புகை ப‌ரவிவிடுகிற‌து. க‌ண்ணீர் புகையினால் க‌ண்க‌ளில் எரிச்ச‌ல் ஏற்ப‌டுவ‌தும், வீதிக‌ளில் ம‌க்க‌ள் வாந்தியெடுப்ப‌தும் சாதார‌ண‌மான‌துதான். ஆயினும் ச‌மீர், அவ‌ர‌து குடும்பம் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்கள் இதற்கு ப‌ணிய‌ ம‌றுத்து தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிக்கிறார்க‌ள்.

“நாங்க‌ள் எங்க‌ள் பாதிப்பை அவர்களுக்கு காண்பிக்க‌ச் செல்கிறோம்” என்கிறார்.” எங்க‌ளது நில‌ங்களை அவ‌ர்கள் வ‌ன்கொடுமைக்குள்ளாக்குகின்றார்க‌ள் என்ப‌தை முடிவு வ‌ரை சொல்வ‌த‌ற்கான‌ எங்களுடைய‌ வ‌ழி இது.” அவ‌ர‌து குடும்ப‌ம் க‌ட‌ந்து வ‌ந்த துயரம் மிகுந்த பாதையினால் அவ‌ர்க‌ள் சிற‌ப்பான‌ இட‌த்தைப் பெற்ற‌வ‌ர்க‌ளாகிறார்க‌ளா என்ற‌ கேள்விக்கு இல்லையென்று ப‌தில‌ளிக்கிறார். “நாங்க‌ளும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளைப் போன்றவர்களே. க‌ட‌வுள் எங்க‌ளுக்கு வைக்கும் சோத‌னைதான் இது.”

பில்லிங், ஒரு விவ‌சாய‌ கிராம‌ம். ஆனால், அந்த‌ த‌டுப்புச்சுவ‌ரினால் 50 ச‌த‌வீத‌ம் நில‌த்தை பெறுவ‌திலிருந்து இக்கிராம‌த்த‌வ‌ர்க‌ள் த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். இது, அவ‌ர்க‌ளுக்காக‌ வாதாடும் மைக்கேல் ஸ்ஃபார்ட் எனும் வ‌க்கீலின் கூற்று.பாதிக்க‌ப்ப‌ட்ட‌ அபு ர‌ஹ்மே குடும்ப‌த்தாரும் நில‌மிழ‌ந்த‌வ‌ர்க‌ளுள் அட‌க்க‌ம்.

தினசரி குறிப்பிட்ட நேரம் ராணுவம் திற‌ந்துவைத்துள்ள ஒரு வாயிலை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தோட்ட‌த்துக்குச் செல்ல உப‌யோகித்துக் கொள்ள‌ முடியும். ஆனால், மைக்கேல் ஸ்பார்டு சொல்வது போல‌ ராணுவ‌ம் எப்போதும் இசைந்து கொடுக்காது.

இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டில் அடிப‌ட்ட அஷ்ர‌ப், க‌ழுத்தில் சிவ‌ப்பு வெள்ளை பாலஸ்தீனிய அங்கியை அணிந்த‌ப‌டி த‌ன‌து தாயாரையும் ச‌மீரையும் கூர்ந்து க‌வனிக்கிறார். இஸ்ரேலை சேர்ந்த மனித உரிமை அமைப்பொன்று அவர் சுட‌ப்ப‌ட்டதை ப‌ட‌மாக்கிய‌து.அந்தப் ப‌ட‌ங்க‌ள் உல‌கையே வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌. அவ‌ர் த‌ன்னை அதிர்ஷ்ட‌ம் வாய்ந்த‌வ‌ராக‌க் க‌ருதிக்கொள்கிறார். சிறு காய‌ங்க‌ளுட‌ன் த‌ப்பிய‌த‌ற்காக‌ ம‌ட்டும‌ல்ல, அவ‌ரை சுடுவ‌த‌ற்கு உத்த‌ர‌வ‌ளித்த‌ உய‌ர‌திகாரி த‌ற்போது ராணுவ‌ நீதிம‌ன்ற‌த்தால் த‌ண்டிக்க‌ப்ப‌ட்டுள்ளதாலும். ஆனால், க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌கிழ்ச்சிக்குரிய ஒன்றாக‌ இல்லை. “எங்க‌ள் குடும்ப‌ம் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து” என்ற‌தோடு “எங்க‌ள் குடும்ப‌த்தில் இந்த‌ச் சோக‌ம் நிர‌ந்த‌ர‌மாக தங்கியிருக்கும்.” என்றார்.

நன்றி: கார்டியன், மற்றும் வினவு.காம்.

அன்புடன்,
முஹம்மது முஸ்தபா.ர

No comments:

Post a Comment