Monday, September 12, 2011

லோக்பால் ஊழலை ஒழிக்குமா?

நம் நாட்டில் லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இன்னும் லோக்பால் வராமல் இருப்பதுதான் என்பது போன்ற ஓர் அசட்டு நம்பிக்கை மத்தியதரவர்க்க மக்கள் மனதில் இப்போது பலமாக ஏற்பட்டுவருகிறது. அண்ணா ஹசாரேவை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இரு தரப்பிலும் இருக்கும் பெருவாரியானவர்களுக்கு லோக்பால் பற்றிய விவரங்களே தெரியாமலும் இருக்கின்றன. ‘ஏதோ ஊழல் ஒழிஞ்சா சரி’ என்ற மனநிலையில் ஒருசாரார். ’பத்து பேர் உண்ணாவிரதம் இருந்து அரசாங்கத்தை மிரட்டினா எது சொன்னாலும் செஞ்சிருவீங்களா?’ என்று இன்னொரு பக்கம் கேள்விகள்.


லஞ்சம் ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் சட்டம் தேவை என்ற வாதத்தின் அடிப்படை இப்போதுள்ள சட்டங்கள் போதவில்லை என்பதா? அல்லது அவை நடைமுறைப்படுத்தபடவில்லை என்பதா? இரண்டும்தான்.

பொது ஊழியர் ( பப்ளிக் சர்வண்ட்) என்ப்படும் எவரையும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து வழக்கு தொடுக்க, இந்தியன் பீனல் கோட் எனப்படும் தண்டனைச் சட்டத்திலும், ஊழல் தடுப்புச் சட்டம் (1988) என்ற சட்டதிலும் வகை செய்ய்ப்பட்டிருக்கிறது. யார் பப்ளிக் சர்வண்ட் என்பதில் சர்ச்சை எப்போதும் இருந்து வருகிறது. முதலமைச்சர் பப்ளிக் சர்வண்ட் அல்ல என்று கருணாநிதி எழுபதுகளில் அவர் மீது சர்க்காரியா கமிஷன் அறிக்கை அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டபோது வாதாடினார். ஆனால் இந்த வாதம் ஏற்கப்படவில்லை. இப்போது ஜெயலலிதா மீது இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கு , டான்சி வழக்கு போன்ரவற்றிலெல்லாம் முதலமைச்சரும் பப்ளிக் சர்வண்ட்டே என்ற அடிப்படையே பின்பற்றப்படுகிறது. நாடாளுமன்ற எம்.பிகள் பப்ளிக் சர்வண்ட்டா எனப்து பற்றியும் சர்ச்சைகள் இருந்தன. உச்ச நீதிமன்றம் நரசிம்மராவ் அரசு கவிழாமல் காப்பாற்ற எம்.பிகளுக்கு லஞ்சம் தரப்பட்ட வழக்கில், எம்.பிகளும் பப்ளிக் சர்வண்ட்தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு போடுவதற்கு முன்பு அந்த அரசின் ( மாநில அல்லது மத்திய அரசின்) அனுமதி பெறவேண்டும். இதே போல எம்.பிகள், எம்.எல்.ஏக்கள் மீது ஊழல் வழக்கு தொடுப்பதற்கு முன்பு சபாநாயகரகள், அவைத் தலைவர்கள் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று சிலர் வாதாடி வருகிறார்கள். சட்டப்படி இது தேவையில்லை என்றும் சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டால், அவைத் தலைவர், சபாநாயகர்களுக்கு தகவல் தெரிவித்தால் போதும் என்றும் எதிர்க்கருத்து உள்ளது.

அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு தொடுக்க அரசின் அனுமதி என்பது எளிதில் கிடைப்பது அல்ல. டிசம்பர் 2010 வரையில் மொத்தம் 236 அனுமதி கோரும் மனுக்களுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு வைத்திருக்கிறது. இதில் 66 சதவிகித மனுக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாகக் காத்திருப்பவை. மாநில அரசுகள் முன்பு காத்திருக்கும் மனுக்கள் எண்ணிக்கை 84.
மாநில அரசு ஊழியர்கள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிக்க கண்காணிப்பு மற்றுக்ம் ஊழல் தடுப்பு துறைகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளது. சுமார் நான்காண்டுகளில் ( 2005-2009) இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு சுமார் 13 ஆயிரம் புகார்களில் துறை ரீதியான தண்டனை வழங்கியிருக்கிறது. எச்சரித்துக் கண்டித்தல், சமபள உயர்வை வெட்டுவது, தற்காலிக வேலை நீக்கம், இடமாற்றம், வேலையிலிருந்தே நீக்குதல் போன்ற தண்டனைகள் இவை. இவற்றில் 846 புகார்களில் சமபந்தப்பட்ட ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. டெல்லி போலீஸ் சட்டத்தின் கீழ் இயங்கிவரும் மத்திய அரசின் சி.பி.ஐ எனப்படும் செண்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்ட்டிகேஷனும் லஞ்ச ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகளைத் தொடுக்கிறது.
இவை எல்லாவற்றையும் ஒரே லோக்பால் என்ற அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதுதான் லோக்பால் மசோதாவின் நோக்கம். அப்படிக் கொண்டு வரும்போது எந்த ஊழல் புகாரையும் விசாரிக்க அந்தந்த அரசின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. லோக்பால் விசாரித்து முடித்ததும் இதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை தரப்படும். பொய்ப் புகார் கொடுப்பவர்களுக்கு அபராதமோ சிறை தண்டனையோ விதிக்கப்படும்.லோக்பால் என்பது ஒரு தனி நபர் அல்ல. ஒரு தலைவரின் கீழுள்ள குழுவாக இருக்கும் . இந்த லோக்பால் குழுவை குடியரசுத் தலைவர் நியமிப்பார். யாரை நியமிப்பது என்பதை பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், நீதிபதிகள் அடங்கிய குழு முடிவு செய்யும். லோக்பால் குழுவினரை நீக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருடையது. அதை அவர் உச்ச நிதீமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் செய்வார்.

மேற்கண்ட விஷயங்களில் எல்லாம் அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதாவுக்கும் அண்ணா ஹசாரே அணியின் ஜன் லோக்பால் மசோதாவுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. நியமிக்கும் தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள், லோக்பால் குழு உறுப்பினர்களின் வயது வரம்பு, குற்றவாளிக்கான அபராதம், சிறை தண்டனையின் அளவு இவற்றிலெல்லாம் சின்னச் சின்ன வித்யாசங்கள் இருக்கின்றன. லோக்பால் உறுப்பினர் யாரும் 45 வயதுக்குக் கீழ் இருக்கக் கூடாது என்று அண்ணா குழு சொல்கிறது. 25 வருட அனுபவம் உடையவராக இருக்கவேண்டும் என்று அரசு சொல்கிறது.

முக்கியமான வேறுபாடுகள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிகள், அரசு சாராத நிறுவனங்கள், கீழ் மட்ட ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் தொடர்பானவை. பிரதமர், நீதிபதிகள் இருவரும் லோக்பால் விசாரணைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அண்ணா ஹசாரே அணியின் கருத்து. அரசு இதை ஏற்கவில்லை. பிரதமர் பதவியிலிருந்து விலகியபின் அவரை உட்படுத்தலாம் என்கிறது. எம்.பிகள் அவைக்குள் ஈடுபடும் செயல்கள் தொடர்பாக விசாரிக்க முடியாது என்கிறது அரசு. அவையும் உட்பட்டவையே என்கிறது அண்ணா அணி. பொது மக்களிடமிருந்தோ அரசிடமிருந்தோ பணம் பெறும் அமைப்புகளும் லோக்பாலுக்கு உட்பட்டவை என்கிறது அரசு. இதன்படி தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பல லோக்பாலுக்கு உட்படவேண்டி வரும். அண்னா ஹசாரே அணி அவற்றை லோக்பாலுக்கு உட்படுத்தவே இல்லை. ஏன் தொண்டு நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் விலக்களிக்கப்படவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

மத்திய அரசின் லோக்பால் மசோதா அரசு ஊழியர்கள் எல்லாரையும் லோக்பாலுக்கு உட்படுத்தவில்லை. குரூப் ஏ அதிகாரிகளும் அதற்கு மேலுள்ளவர்களும் மட்டுமே லோக்பாலின் கீழ் வருவார்கள். இதர ஊழியர்கள் விஜிலன்ஸ் கமிஷன், துறை விசாரணைகளுக்கு உட்பட்டவர்களாக்வே இருப்பார்கள். இதை அண்னா ஹசாரே அணி ஒப்புக் கொள்ளவில்லை. எல்லாரையும் லோக்பால் கீழ் கொண்டு வரச் சொல்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் சுமார் 45 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

மாநில அரசு ஊழியர்கள் பற்றி இரு லோக்பால் மசோதாகளும் நேரடியாக எதுவும் சொல்வதில்லை. மாநிலங்களில் லோகாயுக்தா ஏற்படுத்தப்படவேண்டும் என்று மத்திய அரசும் அண்ணா ஹசாரே அணியும் சொல்கிறார்கள். அந்த லோகாயுக்தாக்கள் எல்லாரும் மத்திய லோக்பாலின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பது அண்ணா அணியின் கருத்து. இதை மத்திய அரசும் ஏற்கவில்லை. மாநில அரசுகளும் எதிர்க்கின்றன. லோகாயுக்தா நியமிக்கும்படி மாநிலங்களை மத்திய அரசு வற்புறுத்த முடியாது என்பது மத்திய அரசின் கருத்து. எங்கள் ஊழியர்களை லோகாயுக்தா வழியாக லோக்பாலின் கீழ் கொண்டு செல்வது எங்கள் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பது மாநில அரசுகளின் எதிர்ப்பு.

நடைமுறையில் அண்ணா ஹசாரே அணியின் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டால், சி.பி.ஐ, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் எல்லாமே லோக்பாலின் கீழ் இயங்கும் அமைப்புகளாகிவிடும். நாடு முழுவதும் லோக்பால் இயங்குவதற்கு சுமார் பத்தாயிரம் ஊழியர்கள் தனியே புதிதாக வேலை செய்யவேண்டி வரும். இவர்கள் ஊழல் செய்யாமல், லஞ்சம் வாங்காமல் இருக்கிறார்களா என்று கண்காணிப்பது இன்னொரு தலைவலி. அவர்கள் மீது புகார் செய்தால் அந்தப் புகார் ஒவ்வொன்றும் குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் விசாரிக்கபட்டுதான் முடிவெடுக்க வேண்டி வரும். லோகாயுக்தாக்களும் லோக்பாலின் கீழ் இருந்தால், மாநில அரசுகளுக்கும் லோக்பாலுக்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நீதிபதிகளும் லோக்பாலின் கீழ் வருவார்கள் என்று அண்ணா ஹசாரே அணி சொல்லும்போது உச்ச நீதிமன்றம் முதல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வரை இருக்கும் எல்லா நீதிபதிகளுமா என்று தெளிவாக சொல்லவில்லை.

அண்ணா, அரசு இருவரின் மசோதாக்களை விட, அருணா ராயின் ஆலோசனைகள் ஓரளவு மேலானவை. அவர் ஒற்றை பெரிய அமைப்பை உருவாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார். பொய்ப் புகாரானால் புகார் கொடுத்தவருக்கு அபராதம் தண்டனை என்பது புகார்கள் வரவிடாமல் தடுத்துவிடும். எனவே புகார் கொடுத்தவர் வேண்டுமென்றே தெரிந்தே பொய்யாக புகார் செய்தார் என்பதை நிரூபித்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும் என்கிறார் அருணாராய். உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்,பிகள், பிரதமர் ஆகியோருக்கு லோக்பால். இதர அரசு ஊழியர்கள் அனைவருக்கும் செண்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன். நீதித்துறைக்கென்று தனியே ஜுடீஷியல் கமிஷன் என்ற அமைப்பு, மாநிலங்களில் தனியே லோகாயுக்தா என்று நான்காகப் பிரிப்பதுதான் ந்லலது என்பது அருணாராயின் கருத்து. இது தவிர லஞ்சம் ஊழலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அமைப்பினையும் உருவாக்கக் கோருகிறார் அருணாராய். லஞ்சம் ஊழல்களை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு வழங்கவும் தனிச்சட்டம் தேவைப்படுகிறது. இதற்கான ஒரு மசோதாவை ஏற்கனவே மத்திய அரசு நாடளுமன்றம் முன்பு கொண்டு வந்திருக்கிறது.

இது தவிர இன்னும் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்படவேண்டும். ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் போல அரசியல் சட்டப்படி சுயாட்சி உடைய லோக்பால்கமிஷனை நியமிக்க வேண்டும் என்று சொன்னது சாத்தியமா என்பது முதல் அம்சம். இதே கருத்தைத்தான் முன்னாள் தேர்தல் கமிஷன் தலைவர் டி.என்.சேஷன் தெரிவித்திருக்கிறார். அவரும் அதற்கான ஒரு மசோதா தயாரித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் டெல்லிக்கு கொடுத்தனுப்பியதாக அறிவித்தார். அதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதுவும் பரிசீலிக்கப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போன்ற அமைப்பு என்பது சுவாரஸ்யமானது. ஏனென்றால் சகல அதிகாரங்களும் சுயாட்சியும் உடைய தேர்தல் ஆணையத்துக்கு என்று தனியே பெரும் ஊழியர் படை எதுவும் கிடையாது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதும் அதன் பணிக்கென்று ஒதுக்கப்படும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர் எல்லாரும் அதன் கட்டுப்பாட்டுக்கு உடபட்டவர்களாகிவிடுகிறார்கள். இதே போல லோக்பாலை அமைக்க முடியுமானால் நன்றாகத் தானிருக்கும். ஒரு புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும் விசாரிப்பதற்கும் வழக்கு தொடுக்கவும் தனக்கு தேவைப்படும் ஊழியர்களை அரசிடமிருந்தே அது பெற்றுக் கொள்லலாம். அவர்கள் அதன்பின் லோக்பாலுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாகிவிடுவார்கள். இப்படி செய்ய முடிந்தால், லோக்பாலுக்கென்று தனியே இன்னொரு பெரிய அரசு இயந்திரத்தை உருவாக்கத் தேவையிருக்காது. நேர்மையான அரசு ஊழியர்கள் எலெக்‌ஷன் டியூட்டி மாதிரி லோக்பால் டியூட்டிக்கு செல்ல முடியும்.

லோக்பால் என்ற அமைப்பே தனியே தேவைதானா என்பது இன்னொரு அம்சம். அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு மிடில் க்ளாஸ் மக்களின் தார்மிக ஆதரவு இந்த அளவு கிடைத்ததற்கு முக்கியக் காரணம் அண்மையில் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம்ஸ் என்ற இரு பெரும் ஊழல்கள் மக்கள் மனதில் பெரும் அருவெறுப்பை ஏற்படுத்தியதுதான். அந்த இரு ஊழல்கள் தொடர்பாக இரு அமைச்சர்கள், ஒரு பெரும் கட்சித்தலைவரின் மகள், பல அரசு தனியார் உயர் அதிகாரிகள் எல்லாரும் சிறையில் இருக்கிறார்கள். எந்த ஒரு புது சட்டமும் இதைச் செய்ய தேவைப்படவே இல்லை. இருக்கும் சட்டங்களின் கீழ்தான் அவர்கள் உள்ளே போயிருக்கிறார்கள். ஒரே ஒரு வித்யாசம் இருக்கும் சட்டத்தை கறாராகப் பயன்படுத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் சில நீதிபதிகளுமே இதை சாதித்தார்கள். எனவே நமது தேவை மேலும் மேலும் சட்டங்களல்ல. இருப்பவற்றை சரியாக பயன்படுத்தும் மனிதர்கள்தான்.

அந்த அடிப்படையில் பார்த்தால் லோக்பால் தேவையில்லை. இருக்கும் சட்டங்களை இன்னும் விரிவுபடுத்தி திருத்தங்கள் செய்வதே போதுமானது. ஆனால் ஒவ்வொரு பொறுப்புக்கும் செய்யும் நியமனங்களே கவனமாக கறாராக அணுக்கப்படவேண்டும். நீதிபதி முதல் உயர் காவல் அதிகாரி வரை நியமிப்பதற்கு முன்பு பகிரங்க அலசலுக்கு உட்படுத்தப்பட்டே நியமிக்கப்படவேண்டும் அதற்கான சட்டங்களே தேவைப்படுகின்றன.

எப்படிப் பார்த்தாலும் மேலே சொன்னவை எல்லாம் ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப்பட்டபின்தான் எதையும் செய்யவேண்டும். அண்ணா ஹசாரே அணி தாங்கள் எழுதி வைத்திருக்கும் மசோதாவை அட்சரம் பிசகாமல் அப்படியே பதினைந்தே நாட்களுக்குள் நிறைவேற்றியாக வேண்டுமென்று அடம் பிடித்தது எவ்வளவு அபத்தமானது ! கடைசியில் வென்றது அவர்களின் அடம் அல்ல. எல்லாருடைய கருத்தையும் கேட்டு விவாதித்துதான் சட்டம் போட முடியும் என்ற அரசின் நிலைதான், அரசியல் கட்சிகளின் நிலைதான் ஜெயித்திருக்கிறது. பாராளுமன்றத்தில் போட்ட தீர்மான வாசகங்களுக்குள் வெகு புத்திசாலித்தனமாக அந்த நிலைதான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள உங்களுக்கு ஒரு சாக்குதானே வேண்டும். இதோ இந்தா பிடி என்பதுதான் அந்த தீர்மானம். கொண்டாடிக் கொள்ளுங்கள். ஆனால், லோக்பாலால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை இப்போது அண்ணா ஹசாரே அணியும் சேர்ந்து பேசவேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தி விட்டது.


அசல் பிரச்சினையான லோக்பால் பற்றியும், லஞ்சம் ஊழலை ஒழிப்பது எப்படி என்பது பற்றியும் நிதானம் தவறாமல் மீடியாவில் இதுவரை ஒலித்த குரல்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று இன்ஃபோசிஸ் நிறுவன வேலையை உதறிவிட்டு இந்திய அரசின் குடிமக்களுக்கான மின்னணு அடையாள அட்டை வழங்கும் திட்டத் தலைவராகப் பணியாற்றும் நந்தனும் அவர் மனைவி ரோஹிணியும் அண்மையில் பெங்களூருவில் சூழல் கல்வி நிறுஅவனம் தொடங்குவதற்காக சொந்த பணம் 50 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தவர்கள். அருணா ராய் ஆறு வருடங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியபின அதிலிருந்து விலகி சமூகப் பணியில் ஈடுபட்டவர். ராஜஸ்தானில் தொழிலாலர்-உழவர் சங்கமான மஸ்தூர் கிசான் சக்தி சங்காத்தனைத்தொடங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டவர்.

 தகவலறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்ற சோனியா காந்தியை சம்மதிக்கவைத்து வெற்றி பெற்றவர்.மக்களின் தகவலறியும் உரிமைக்கான தேசிய பிரச்சார அமைப்பு என்ற அமைப்பை அருணா உருவாக்கினார்.இப்போது அண்ணா ஹசாரேவின் அணியில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் இருவரும் அருணாவுடன் அந்த அமைப்பில் இன்னமும் இருக்கிறார்கள். லோக்பால் மசோதா வடிவத்தில் மட்டுமே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. அருணா, அரவிந்த் இருவரும் மக்சசே விருது பெற்றவர்கள். நந்தன், அண்ணா ஹசாரே இருவரும் பத்மபூஷன் பெற்றவர்கள்.
நந்தன் நீலகேணி லஞ்சம் ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டும் போதவே போதாது. பல முனைகளில் நடவடிக்கை தேவை. அதில் ஒன்று மட்டுமே லோக்பால். அதுவும் எல்லா விதமான லஞ்ச ஊழலையும் ஒழிக்க பயன்படாது. ஊழலில் இருவகை இருக்கின்றன. ஸ்பெக்ட்ரம் போன்ற மேலத்தில் நடக்கும் பெரிய ஊழல்கள். 

கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்டுக்காக தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் தரவேண்டியிருப்பது போன்ற சில்லறை ஊழல்கள். முதல்வகை ஊழல்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் அன்றாடம் உரசுபவை அல்ல. ஆனால் தொலைநோக்கில் பாதிப்பவை. இரண்டாம் வகை சில்லறை ஊழல்கள் உடனடியாக அன்றாடம் பாதிப்பவை. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான தீர்வுகள் தேவை. எல்லா அரசு அலுவல்களும் வெளிப்படையாக நடக்கும்விதத்தில் டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் சில்லறை ஊழல்களை ஒழிக்கலாம். பெரிய ஊழல்களுக்குக் கடும் சட்டங்கள் தேவை. இதையெல்லாம் உட்கார்ந்து பேசி அலசித் தீர்மானிக்க வேண்டும். சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தின் நிலைக் குழுக்கள் ஒன்றும் முட்டாள்கள் நிரம்பியது அல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று உலகின் எந்த நாட்டுப் பாராளுமன்றக் குழுவுக்கும் நிகரான அறிவும் உழைப்பும் இங்கேயும் உள்ளது என்கிறார் நந்தன். அடையால அட்டை சட்டம் பற்றி விவாதித்தபோது இந்திய மக்களவை நிலைக் குழுவினர் எவ்வளவு ஆழமாகவும் தெளிவாகவும் பிரச்சினையை அலசுகிறார்கள் என்பதை தான் நேரில் கண்டதாக நந்தன் பாராட்டுகிறார். எல்லா அரசியல்வாதிகளும் மோசம் என்ற மிடில் க்ளாஸ் பார்வையை தொடர்ந்து ஊக்குவிப்பது ஆபத்தானது என்பது நந்தன் கருத்து.

இதே பார்வையை இன்னொரு கோணத்தில் இருந்து முன்வைக்கிறார் அருணா ராய். வெவ்வேறு மட்டத்தில் இருக்கும் வெவ்வேறு ஊழல்களை ஒழிக்க வெவ்வேறு சட்டங்கள் தேவை. பிரதமர், அமைச்சர்கள், எம்.பிகள் தனி. அரசு ஊழியர்களில் உயர் அதிகாரிகள் தனி, கீழ் மட்டம் தனி. நீதித்துறைக்கு முற்றிலும் தனியான கண்காணிப்பு அமைப்பு தேவை. இது தவிர ஊழல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தர தனி அமைப்பும் சட்டமும் தேவை. இந்த நான்கையும் எப்படி செய்யலாம் என்பது பற்றி அவர் சார்ந்திருக்கும் அமைப்பு விரிவாக அறிக்கைகள் தயாரித்திருக்கிறது. மன்மோகன் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் போதாது. அண்னா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் இன்னொரு ராட்சத அமைப்பாக மாறிவிடும். இரண்டும் தீர்வல்ல என்பது அருணாராய் கருத்து.

நந்தன், அருணா இருவருமே அண்னா ஹசாரே குழுவினரின் பிடிவாத அணுகுமுறையைக் கடுமையாக நிராகரிக்கிறார்கள். மக்கள் கருத்தையும் ஆதரவையும் திரட்டப் போராட்டம் நடத்துவதை இருவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், தாங்கள் எழுதியிருக்கும் லோக்பாலைத்தான் அரசு ஏற்று நிறைவேற்றவேண்டும், அதுவும் ஆகஸ்ட் 31க்குள் செய்யவேண்டும் என்றெல்லாம் அண்ணா ஹசாரே அணியினர் பிடிவாதம் பிடிப்பதை அருணாவும் நந்தனும் (நானும்) ஏற்கவில்லை.
அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் எட்டாவது நாளை எட்டும்வரை பிடிவாதமாக இருந்த அவரது அணியினர், மெல்ல தங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தி வருகிறார்கள்.நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எதையும் செய்யமுடியாது என்பதும், தங்கள் கருத்துக்கு பல மாற்றுக் கருத்துகள் அரசிடம் மட்டுமல்ல, மற்ற பொதுமக்களிடையேவும் இருக்க முடியும் என்பதும் மெல்ல மெல்ல அவர்களுக்கு உறைத்துவருகிறது. முதலில் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து ஒரு மாதமாகப் பிரசாரம் செய்த டைம்ஸ் நவ், என்டி.டிவி, ஹெட்லைன்ஸ் டுடே, சிஎன்என் ஐபிஎன் சேனல்கள் எல்லாம் கூட கடந்த ஒரு சில தினங்களாக மாற்றுக் கருத்துகள் இருப்பதை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கின்றன. 

சி.என்என் ஐபிஎன் ஒரு சமரசத்தீர்வையே முன்வைத்தது. அரசு தன் மசோதாவை திரும்பப் பெறவேண்டும். அண்னா அணியினரும் தங்கள் மசோதாவை மட்டுமே சட்டமாக்கவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட வேண்டும். இன்னொரு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் அரசு, அண்ணா அணியினர், எதிர்க்கட்சிகள், எம்.பிகள், சட்ட அறிஞர்கள், சமூகப் பிரபலங்கள் இடம் பெறவேண்டும். ஒரு மாதத்துக்குள் அந்தக் குழு விவாதித்து முடிவு செய்து தரும் சட்டமுன்வடிவை ஏற்றுக் கொண்டு பாராளுமன்றம் சிறப்புக் கூட்டம் நடத்தி தீபாவளிக்குள் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் தீர்வு யோசனை.

இதையேதான் மன்மோகன் அரசு வேறு வடிவத்தில் இத்தனை நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசின் லோக்பால் சட்டமுன்வடிவு பாராளுமன்ற நிலைக் குழு முன்பு உள்ளது. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம். அண்னா ஹசாரே குழுவின் மசோதாவையும் நிலைக்குழுவிடம் தருகிறோம். நிலைக்குழு ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு மாதம் ஆகும். அதன்பின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றலாம். கடைசியில் இது போன்ற ஒரு சமரசத்துக்குத்தான் எல்லா தரப்பினரும் வரவேண்டியிருக்கும். (இந்த இதழ் வெளிவரும் சமயத்தில் இந்த சமரசம் நடந்திருக்கும்).
லோக்பால வந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம் என்பதை புரிந்துகொள்ள இதுவரை லோக்பால் பற்றி நடந்துள்ளவற்றை தெரிந்துகொள்வோம்.
லோக்பால் ஒன்றும் அண்ணா ஹசாரேவின் கண்டுபிடிப்பல்ல.

உலக அளவில் ஆங்கிலத்தில் ஆம்பட்ஸ்மேன் என்று சொல்லப்படும் இந்த அமைப்பு 140 நாடுகளில் இருக்கிறது.உயர் மட்ட ஊழல்கள் பற்றி விசாரிப்பதிலேயே பெரும்பாலும் இவை அக்கறை காட்டுகின்றன. இந்தியாவில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதைப் பற்றி நேரு காலத்திலேயே பேசியிருக்கிறார்கள். முதன்முதலில் 1968ல் மக்களவையில் சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. (அண்ணாவின் வலது கையான அரவிந்த் கெஜ்ரவால் பிறந்த வருடம் அது !) மசோதா நிறைவேறும் முன்பே அவையின் ஆயுள் முடிந்துவிட்டது. அதன்பின்னர் ஏழு முறை மக்களவையில் லோக்பால் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கிறது.ஒவ்வொரு முறையும் அவையின் ஆயுள் முடிந்துவிட்டதால் நிறைவேறவில்லை. 1985ல் மசோதா திரும்பப் பெறப்பட்டது. கடைசியாகக் கொண்டு வந்தது 2001ல். ஒவ்வொரு முறையும் மசோதாவை விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கல். நிலைக்குழுக்களும் விவாதித்து கருத்து சொல்லியிருக்கின்றன.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரு லோக்பால் போதாது. எனவே மாநிலத்துக்கு மாநிலம் ஒரு லோகாயுக்தா தேவை என்று சொல்லப்பட்டது. இதையடுத்து 18 மாநிலங்கள் லோகாயுக்தா சட்டத்தை நிறைவேற்றி லோகாயுக்தாவை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் இல்லை. குஜராத்தில் உண்டு. ஆனால், அங்கே ஏழரை வருடமாக லோகாயுக்தா பதவிக்கு யாரையும் நியமிக்காமல் காலியாக இருக்கிறது. கர்நாடகத்தில் லோகாயுக்தாவாக இருப்பவர் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. இவர்தான் அண்மையில் பி.ஜே.பி முதலமைச்சர் எடியூரப்பா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தவர். எடியூரப்பா பதவி போயிற்று. ஆனால் வழக்கு எதுவும் போடப்படவில்லை. சந்ச்தோஷ் ஹெக்டே அண்ணா ஹசாரேவின் அணியில் இருப்பவர். அண்னாவின் லோக்பால் மசோதாவை எழுதியதில் முக்கிய பங்காற்றியவர்.

லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அண்னா ஹசாரே கேட்பதற்கெல்லாம் முன்பாகவே சோனியா காந்தியின் காங்கிரஸ் 2004லேயே சொல்லிவிட்டது. அது அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அதன்படி இந்த வருடம் ஜனவரியில், ஊழலுக்கெதிரான நடவடிககிகலை வகுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர் குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். அந்தக் குழுவை லோக்பால் மசோதாவை உருவாக்கும்படி சொன்னார்.
அதன்பிறகுதான் அண்ணா ஹசாரே அணியினர் திடீரென்று களத்தில் குதித்தார்கள். மசோதாவை உருவாக்கும் குழுவில் மக்கள் சார்பாக தாங்களும் இடம் பெற வேண்டுமென்று அண்ணா உண்ணாவிரதம் இருந்தார். உடனே அரசு அவரையும் அவர் சொன்னவர்களையும் குழுவில் சேர்த்துக் கொண்டது. மசோதாவை உருவாக்குவதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அரசு தான் தீர்மானித்த மசோதாவை பாராளுமன்றத்தில் வைத்தது. அண்ணா த்ங்கள் மசோதாவைத்தான் ஏற்கவேண்டுமென்று உண்ணாவிரதம் தொடங்கினார்.

இரண்டு மசோதாக்களுக்கும் என்ன வித்தியாசம் ? மூன்றாவதாக அருணா ராய் போன்றவர்கள் முன்வைக்கும் மசோதா என்ன சொல்லுகிறது ?
பிரதமரை லோக்பால் விசாரிக்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு பற்றி மட்டுமே எல்லாரும் மீடியாவில் அதிகம் பேசிவருகிறார்கள்.பிரதமர் பதவியில் இருந்து விலகியபிறகு அவரை லோக்பால் விசாரிக்கலாம் என்கிறது மன்மோகன் அரசு. பதவியில் இருக்கும்போதே விசாரிக்கவேண்டும் என்கிறது அண்ணா குழு. அநேகமாக பிரதமரை சேர்க்க கடைசியில் அரசு ஒப்புக் கொண்டுவிடும்.
ஆனால் வித்யாசங்கள் பிரதமர் பற்றி மட்டுமல்ல. அண்னா ஹசாரே சொல்லும் லோக்பால், இன்னொரு போட்டி அரசாங்கத்தையே உருவாக்கிவிடும் ஆபத்து இருப்பதாக அதை மறுப்பவர்கள் சொல்கிறார்கள்.அது அப்படித்தானா? உண்மையில் நாம் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சம் அதுதான்.

No comments:

Post a Comment