Wednesday, November 30, 2011

ஏன் இந்த ஓரவஞ்சனை?





கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.
 முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
 அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.
 இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.
 புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
 முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
 நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
 கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
 படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.
 இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
 முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
 அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.
 மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?
 tnks dinamani

பாவம் தமிழன்!

- பழ. நெடுமாறன்


கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.


அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.


அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.


தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.


உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.


2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.


1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.


எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.


ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.


இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.


அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.


தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.


நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.


முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. 


பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.


அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.


கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.


இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.


அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.


காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.


பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.


புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.


தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.


பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?


மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.


புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):


தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.


ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.


பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.


இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன். 


நன்றி - தினமணி

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து கடை அடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதித்து  இந்திய நாட்டின் சில்லரை வியாபாரிகள் நான்கரை கோடி பேரின் வாழ்வதாரத்தை சீரழிக்கும் மத்திய அரசின் முடிவு வண்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழகத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வர்த்தகர்களின் சார்பாக நடைபெறும் முழு கடை அடைப்பு மிகவும் தேவையானது.

டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும்.
 

Tuesday, November 29, 2011

முப்பதே மாதத்தில் கப்பலில் வேலை!



பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு கப்பல் பணிகளில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் நாட்டிக்கல் சயின்ஸ் டிப்ளமோ படிப்பில் சேரலாம்.

சென்னை உத்தண்டியில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் கடல் மற்றும் கப்பல் சார்ந்த படிப்புகளுக்கு சிறந்த இடம் 2012ஆம் ஆண்டிற்கான டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பிற்கு விண்ணப்பங்களை இந்த கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள் தொடர்ந்து இளநிலைப் பட்டப் படிப்பும் சேர்ந்து படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த படிப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? அதற்கான தகுதிநிலைகள் என்ன என்பது குறித்து இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜயனிடம் கேட்டோம்.

“பிளஸ் டூ வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். டிப்ளமோவுடன் கூடிய பட்டப்படிப்பை மூன்று பிரிவாகப் பிரித்து நடத்துகிறோம். முதல் ஆறு மாதங்கள் கேம்பஸ் படிப்பாக இருக்கும். அடுத்து, பதினெட்டு மாதங்கள் கப்பலில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சியின்போது தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி முடிந்த பின்பு 4 மாதங்கள் மீண்டும் கேம்பஸில் படிக்க வேண்டும். மொத்தம் முப்பதே மாதங்களில் படிப்பு முடிந்து விடும்.

உயர்தரமான பயிற்சியும், படித்து முடித்தவுடன் அதிகளவில் வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. படிக்கும்போது, படிப்பிற்குத் தேவையான உடைகள் மற்றும் இதரப் பயிற்சிகள் அனைத்தையும் கல்வி நிறுவனமே வழங்கும். மேலும் விடுதியில் தங்கியிருந்துதான் படிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு படிப்பிற்கான கட்டணம் இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். படித்து முடித்தவுடன், வேலைவாய்ப்பு காத்திருப்பதால், இந்தப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைக்கும். இந்தப் படிப்பை மேற்கொள்ளும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாட்கோ நிறுவனமும், மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீன்வளத்துறையும் உதவித்தொகை வழங்குகின்றன. மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வில் பிளஸ் டூ பாடங்களில் இருந்தும், பொது அறிவுப் பகுதிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். தற்போது பிளஸ் டூ படித்து வரும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்” என்றார் விஜயன்.

நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பு முடித்தவுடன் ஆயிரக்கணக்கில் சம்பளமும், சில மாதங்கள் கப்பலிலும், சில மாதங்கள் விடுமுறையிலும் உலகை வலம் வரலாம். பணி அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சம்பளமும், வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30 ம் தேதி.

நுழைவு தேர்வு நடைபெறும் நாள் : டிசம்பர் 18.
விவரங்களுக்கு:
http://www.imu.tn.nic.in/contact.html

Saturday, November 26, 2011

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் 

அன்புச் சகோதர சகோதரிகளே!

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில்ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்)செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
 மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை 
  1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
  2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
  3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
  4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
  5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
  6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது
ஆகவே மனிதன், (தான்)எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்கவேண்டாமாகுதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன்படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசிநெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.(அல் குர்ஆன்: 86:5-7) 


இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
 பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்


இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்
பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும்  விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG  அதாவது கருமுட்டையாகும்

கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
  • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது


  • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.


  • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது
  • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன


  • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது


  • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.


  • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
  • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
  • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது


  • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது


  • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

  • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.


  • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.


  • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
  • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

  • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.



  • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன


  • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.


  • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

  • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில்ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்)செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
 நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
குறிப்பு – பல்வேறு இணைதளங்கள் இந்த கட்டுரைக்கு உதவின நன்றிகள் பல!
அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!
 அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! 

Tuesday, November 22, 2011

துபாயில் சூப்பர் பஸ்.......


சூப்பர் பஸ்...என்னதது சூப்பர் பஸ்...டீலக்ஸ் பஸ்,அல்ட்ரா டீலக்ஸ் பஸ்,ஏர் பஸ்,இப்டி பல பஸ் பாத்திருக்கோம்,அதென்ன சூப்பர் பஸ்??? சரி பஸ்ஸுன்னு சொல்லீட்டு என்ன கார் படத்த போட்டுருக்கானேன்னு நினைக்கிறீங்களா?...
ம்ம்..தெளீவா சொல்லனும்ன்னா?...பஸ்தான்...ஆனா கார்...கார் வடிவத்திலான பஸ்...இல்ல பஸ் மாதிரி கார்...இந்தமாதிர் சிம்ப்பிளா??? புரியவைக்கலாம்...

ஆமாங்க...இது உண்மையிலேயே சூப்பர் பஸ்தான்...மணிக்கு 250கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது சூப்பர்தானே..

எங்க ஓடப்போவுது..அட நம்ம துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையிலதாங்க... சராசரியாக காரில் 1 மணி நேரத்தை தாண்டும் துபாய் அபுதாபி பயணம் இப்போது வெறும் அரைமணி நேரத்தில் சாத்தியப்படப்போகிறது இந்த சூப்பர் பஸ்ஸினால்.

மஸ்தார் சிட்டியில் ஒத்திகை ஓட்டம் பார்க்கப்பட்டு விரைவில் துபாய் டூ அபுதாபிக்கு இயங்க தயாராக இருக்கிறது இந்த சூப்பர் பஸ்.மொத்தமாக ஓட்டுனரின் இருக்கையையும் சேர்த்து 23 இருக்கைகளே உள்ளன.வாகன வடிவமைப்பும்,அதன் உள்கட்டமைப்பும்,ஃபார்முலா ஒன்,மற்றும் ஏரோடைனாமிக் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அதிவேகத்தில் சிறப்பான ஓட்டமும்,தரமான கட்டுப்பாடும் சாத்தியமாகிறது.


இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க மாசுபடுத்தாத ஸீரோ எமிஷன் வகைக் கார், இல்ல இல்ல பஸ் என்பது இதன் தனித்துவம்.கிட்டத்தட்ட 1000 முதல் 1200 கிலோ எடை கொண்ட மின்கலம் இதற்காக பிரத்தியேக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.அது முழுவதும் சார்ஜ் ஆக முழுமையாக ஓர் இரவை எடுத்துக்கொள்கிறது.


15 மீட்டர் நீளமும்,2.5 மீட்டர் அகலமும்,1.7 மீட்டர் உயரமும், 6 சக்கரங்களையும், 12 கதவுகளையும்,கொண்ட இதை கார் வடிவில் இருந்தாலும் பஸ்ஸுன்னு தான் சொல்லமுடியுமில்லையா???

துபாயில் நடந்த எக்ஸ்பிஷனில் காட்சிக்கு வைக்கபட்ட பஸ்..

இது நான் இல்லை...


இத்தா பெரிய டிக்கி இருக்கே இதுல எவ்ளோ ஜாமான் வைக்கலாம்..அப்டீன்னு யோசிக்காதீங்க...அதுதான் இஞ்சின் கம்பாட்மெண்ட்...


இதில் கடைசியாக இருக்கும் கதவு,விஐபி,அல்லது ஃபேமிலிக்காக உள்ளது இருக்கைக்கள் எதிர் எதிராக வைக்கப்பட்டுள்ளன...


சரி...இவ்ளோ நேரமும்,ஓடாத படத்துல ஓடாம நின்ன பஸ்ஸ பாத்துருப்பீங்க.. இப்போ ஓடுர படத்துல இந்த பஸ் எப்டி ஓடுதுன்னு பாருங்க....
நன்றி: ரஜின்(சன்மார்க்கம்)

அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்


சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும்.

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் தனி நாடு அந்தஸ்துக் கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நிலைப்பாட்டுக்கு எதிராக பல நாடுகள் அணிதிரண்டன. அமெரிக்க நிலைப் பாட்டுக்கு மிகக் குறைந்த ஆதரவே கிடைத்தது. இது மற்றுமொரு அடியாகும்.

அமெரிக்காவின் துதிபாடிகளில் ஒருவரான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஐக்கிய நாட்டு உரையில் அமெரிக்காவை வாங்கு வாங்கு என வாங்கியுள்ளார். பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஆப்கான், ஈராக், லிபியா விவகாரத்திலும் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது மற்றுமொரு அடியாகும்.

இதே நேரத்தில் பாகிஸ்தானும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அமெரிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் துவங்கிய போது அதற்குத் தோள் கொடுத்து துணையாக நின்றது பாகிஸ்தான் ஆகும்.

அமெரிக்காவுக்கு உதவவில்லையானால் பாகிஸ்தான் என்றொரு நாடு இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷர்ரப் தனது கோழைத் தனத்தை வெளியிட்டார்.

அமெரிக்கா பாகிஸ்தானில் தன்னிச்சையாக எடுத்த பல நடவடிக்கையால் பாகிஸ்தான் அமெரிக்காவை நோக்கிக் கைவீசிப் பேசும் நிலை ஏற்பட்டு இன்று அது முற்றி முறுகல் நிலைக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் செயற்படும் ஹக்கானி நெட்வேர்க் என்ற பெயரில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களை வளர்த்து விடுவதே பாகிஸ்தான் தான் என அமெரிக்க இராணுவத் தளபதி மேக் முல்லன் கருத்துத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஹக்கானி அமைப்பிற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தொடர்ந்து உதவி வருகின்றது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி இதற்கு அளித்த பதில் நெற்றியடியாக அமைந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்த போது ஹக்கானி நெட்வேர்க்கை வளர்ந்துவிட்டது. பாகிஸ்தானா? அமெரிக்காவா? எனக் கேட்டு ஹக்கானி அமைப்பை வளர்த்தது அமெரிக்காவே என குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் பொறுமையை அமெரிக்கா அளவுக்கு மீறி சோதித்துப் பார்க்கின்றது. மீண்டும் மீண்டும் சீண்டினால் பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வோம் என அமெரிக்காவையே மிரட்டியுள்ளார். அத்துடன் பாகிஸ்தானின் உறவை அமெரிக்கா முறித்துக் கொண்டால் பாகிஸ்தானுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்காவே பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இந்தப் பதிலை அமெரிக்கா அணுவளவும் எதிர்பார்த்திருக்காது.

இவர் புதிய ஒரு அமைச்சர். ‘இளம் கன்று பயம் அறியாது’ என்பது போல் என்னவோ ஆர்வக் கோளாரில் உளறுகின்றார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். இவரின் இந்த முகத்திலடித்தால் போல் அமைந்த பதில் குறித்து அமெரிக்கா எந்தப் பதிலும் கூறவில்லை. பெறும்பாலும் பாகிஸ்தானின் உயர்மட்ட அரசில் தலைவர்களே இதற்குப் பதில் கூறி பணிந்து வருவார்கள் என அமெரிக்கா எதிர்பார்த்திருக்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் பாகிஸ்தானிலிருந்து பளார் என மற்றொரு அறை அமெரிக்காவின் கண்ணத்தில் விழுந்தது.

இந்த சூழ்நிலையில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவிற்குப் பெருத்த தலையிடியாக மாறியுள்ளது. அமெரிக்கா தான் உலக வல்லரசு என்ற நிலை நீடிப்பதால் தான் உலக நாடுகள் அதன் கீழ் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ரஷ்யா இருந்த இடத்தை சீனா எட்டிவிட்டால் சீனாவின் பக்கம் சில நாடுகள் நகர்ந்து சென்று விடும். என்னை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற அமெரிக்காவின் ஆணவத்திற்கு இது பலத்த அடியாக அமையும். அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையில் பணிப்போர் நடைபெறுவது ஒன்றும் பரம இரகசியம் அல்ல.

அமெரிக்காவுக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் பேசுகிறார். இதே வேளை சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மொங் கியாங் ஜு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றார். அவரை வரவேற்பதற்கான நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உரையாற்றும் போது ‘சீன நட்பு மலைகளை விட உயரமானது, கடலை விட ஆழமானது, இரும்பை விட வலுவானது, தேனை விட இனிமையானது’ என காதல் கீதம் பாடியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலின் நண்பனாகத் திகழ்ந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ‘சீனாவின் நண்பர்கள் எமக்கும் நண்பர்கள். சீனாவின் எதிரிகள் எமக்கும் எதிரிகள்’ என போட்ட போடு அமெரிக்காவிற்று மற்றுமொறு அவமான அடியாகும்.

சீனாவும் இந்தியாவும் கீரியும்-பாம்புமாகவுமே செயற்பட்டு வருகின்றன. இதே உறவு தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நீடிக்கின்றது. எனவே, பாகிஸ்தான் சீனாவுடன் நெருங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இது அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியில் விழும் பலத்த அடியாகும்.

இந்தியப் பிரதமர் அமெரிக்காவை எதிர்க்கிறார். பாகிஸ்தானும் அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு வந்துள்ளது. சீனா-இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் இந்த நாடுகள் தமக்கிடையிலுள்ள பகையை மறந்து ஒன்று பட்டால் தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க ஆதிக்கக் கழுகைத் துரத்திவிடலாம்.

இந்த நாடுகளில் வளர்ந்து வரும் அமெரிக்க எதிர்ப்புணர்வு அமெரிக்காவுக்குப் பலத்த பின்னடைவாக இருந்தாலும் இந்த நாடுகளுக்கு உள்ளேயே நிலையான நீடிக்கும் பகையுணர்வுதான் அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே பலமாகும். இந்த பலத்தை சிதறடித்தால் தெற்காசிப் பிராந்தியம் சீர்பெறும்ளூ வளம் பெறும்ளூ நிம்மதி பெறும்.