Saturday, November 19, 2011

செங்கோட்டையில் பள்ளி மாணவர்களை லோடுமேன்களாக்கிய வருவாய்த்துறை



Students Become Loadmen
செங்கோட்டை: பள்ளி மாணவர்களை லோடுமேன்களாக்கிய வருவாய்த் துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு அறிவித்த இலவச ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவை பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்பு விழா அறிவிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று செங்கோட்டை பகுதிக்கு வழங்கும் வகையில் லாரிகளில் ஏராளமான மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் வந்திறங்கியது. அவற்றை வருவாய் துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகம் மாணவர்களை வைத்து இறக்கி பல அறைகளில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கச் செய்தது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை வேதனைக்குள்ளாக்கியது. மாணவர்களை லோடுமேன்களாக மாற்றிய செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அரசு வழங்கும் இலவச பொருட்களை ஏற்றி, இறக்கி பொதுமக்களுக்கு வழங்கும் செலவை அரசே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் மாணவர்களை இலவச லோடுமேன்களாக மாற்றிய பள்ளி மற்றும் வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

thatstamil

No comments:

Post a Comment