Wednesday, November 30, 2011

பாவம் தமிழன்!

- பழ. நெடுமாறன்


கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.


அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.


அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.


தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.


உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.


2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.


1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.


எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.


ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.


இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.


அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.


தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.


நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.


முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. 


பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.


அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.


கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.


இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.


அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.


காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.


பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.


புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.


தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.


பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?


மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.


புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):


தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.


ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.


பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.


இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன். 


நன்றி - தினமணி

No comments:

Post a Comment