Friday, October 14, 2011

ரியாத்தில் தவிக்கும் 18 தமிழர் உள்ளிட்ட 70 இந்தியர்களுக்கு நாளைக்குள் வேலை- நிறுவனம் உறுதி

ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வேலைக்காக வந்து சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்த 18 தமிழர்கள் உள்ளிட்ட 70 இந்தியர்களுக்கும் நாளைக்குள் வேலை கிடைக்க ரியாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் செயலாளர் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரியாத் தமிழ்ச் சங்க செயலாளர் இம்தியாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று (நேற்று) காலை மலையாள மாத்யமம் என்ற மலையாளப் பத்திரிக்கையின் அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதன் நிருபர் ஒருவர் இந்தியாவில் இருந்து புதிதாக ரியாத்திற்கு வேலைக்கு வந்த 18 தமிழர்கள் உணவிற்குகூட வழியின்றி தடுமாறிக் கொண்டுள்ளோம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று எங்களிடம் முறையிடுகிறார்கள், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அவர்களுக்கு உதவ முடியுமா என்று கேட்டார்கள்.

பின்னர் அவர்களின் முகவரி தெரிந்து தொடர்பு கொண்டதில் புதிதாக ஒரு கிளீனிங் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து வந்து கடந்த 15 நாட்களாக ரியாத்தின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் வைத்திருப்பதாகவும் ஒருநாளைக்கு ஒருவேளை மட்டும் சிறிய ஒரு சோற்றுப் பொட்டலத்தை கொடுத்து ஒரு ஆளுக்குண்டான உணவை 5 பேர் பிரித்து சாப்பிடும்படி ஒரு பாகிஸ்தானி டிரைவர் வந்து கொடுக்கிறார், மற்றபடி வேறு யாரும் வரவில்லை எந்த வேலையும் தரவில்லை, செலவிற்குகூட ஒரு ரியாலும் தரவில்லை என்று முறையிட்டார்கள்.

அவர்கள் அனைவரிடமும் புகார் எழுதி தூதுவரகத்தில் கொடுத்து வேண்டிய ஆவண செய்ய ரியாத் தமிழ்ச் சங்கம் மலையாள பத்திரிக்கையின் துனையுடன் முயற்சிகள் மேற்க்கொண்டுள்ளது. அதுவரை ஒரு வாரத்திற்குப் போதுமான உணவுகள் அரிசி, மசாலா, காய்கறி, டீ, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் தற்சமயம் வாங்கி கொடுக்கலாம் என்று முடிவெடுத்து ரியாத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளில் சிலரும், ஒருசில சமூக ஆர்வலர்களும் இரண்டு வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் நிலையறிந்தோம்.

அவர்களில் 18 நபர்கள் புதிதாக வந்தவர்கள், 12 நபர்கள் சில மாதங்களுக்குமுன் வந்தவர்கள், அவர்கள் வந்து இரண்டு வாரம் ஆகிறது. அவர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்தவர்கள் ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளார்கள். அங்கு முறையான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை.

கடந்த இரண்டுவாரத்தில் 3தடவை மட்டும்தான் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார்கள். மற்ற நாட்களில் பழைய நபர்களிடம் இருந்த பொருட்களை வைத்து கால்வயிறு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார்கள் அதுவும் முடிந்து விடவேதான் உதவிதேடி பத்திரிக்கை அலுவலகத்தை நாடியுள்ளார்கள்.

மற்ற மாநிலத்தவர்களையும் சேர்த்து 70 பேர் வரை உள்ளார்கள், தங்கியிருக்கும் இடத்தில் பலநாட்கள் தண்ணீர்கூட வரவில்லை. குடிப்பதற்கு தண்ணீருக்கே மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து எச்சரிக்கை விடுத்து உடனடியாக அவர்களுக்குண்டான ஆவண செய்யவில்லையென்றால் தூதரகம் சார்பாக தொழிலாளர் நீதிமன்றம் செல்வோம் என்று மிரட்டியதுடன் உடனடியாக எங்கள் முன்னிலையிலேயே அனைவருக்கும் சாப்பாடு வாங்கிக்கொடுப்பதற்கும், தண்ணீர் டிரக் கொண்டு வந்து தண்ணீர் சப்ளை செய்வதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

சனிக்கிழமை அன்று அனைவருக்கும் வேலை கொடுக்கிறோம், தேவையானவற்றை கொடுக்கிறோம் என்று உறுதியளித்தார்கள்.

இருப்பினும் பல நல்ல உள்ளங்கள் செய்த உதவி ரியால் 1500க்கு அங்கிருந்த அனைவருக்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்கி கொடுத்து வந்துள்ளோம். சனிக்கிழமையன்று அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால் தூதரகம் சார்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க உரியவர்களிடம் பேசிவைத்துள்ளோம்.

மின்னஞ்சல் அனுப்பிய சிலமணி நேரத்திற்குள் பொருளுதவி செய்த அனைவருக்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தொடர்புக்கு, இம்தியாஸ், செயலாளர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.
தொலைபேசி எண் +966506972461

tnks Thatstamil

No comments:

Post a Comment