Tuesday, October 4, 2011

வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம்

வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம்

ரெயில்களில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட் வசதி இருப்பது போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ, டிராவல் ஏஜென்சி மூலமோ இனி பஸ்சிற்காக முன் பதிவு டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம்.

எந்த ஊரில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அரசு நீண்ட தூர பஸ்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இ.டிக்கெட் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும், திருப்பதி, புதுச்சேரி, பெங்களூர் போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு செல்லவும் அரசு விரைவு பஸ்களில் ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம். ஒரு மாதத்திற்கு முன்பாக பயணத்திட்டத்தை வகுத்து அதற்கேற்றவாறு அரசு பஸ்களில் முன் பதிவு செய்து கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.

மேலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் இந்த திட்டத்தில் முன் பதிவு செய்து பயணம் செய்யலாம். ஆன்லைன் மூலம் இ.டிக்கெட் பெறும் வசதி செய்யப்படுவதால் தேவையற்ற அலைச்சல், கால விரயம், காத்திருத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

www.tnstc.in என்ற இணையதளத்தின் வழியாக அரசு பஸ்களில் இன்று முதல் இ.டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து எந்த இடத்தில் இருந்தும் அரசு பஸ்களில் பயணம் செய்ய முன் பதிவு சேவை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.  

பஸ் இ.டிக்கெட் பெறுவதற்கு தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது. ஆன்-லைன் முன் பதிவுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்களின் தடம் எண், எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும், பணம் செலுத்தும் முறை, தேதி, எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் போன்ற தகவல்களை இணைய தளத்தின் வழியாக பதிவு செய்யும் போது இ-டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

பயணத்தின் போது இ.டிக்கெட் பயணிகள் அடையாள சான்றினை வைத்திருக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு பயணம் செய்ய விரும்புவோர் இந்த வசதியை உடனே பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment