சென்னை: திமுகவிடமிருந்து கேட்ட தொகுதிகள் கிடைப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதால் அதிமுக அணிக்குத் தாவ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டு வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது சட்டசபைத் தேர்தல் காலம். கொள்கைள், குறிக்கோள்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எங்கு ஆதாயம் கிடைக்கும், யாரிடம் அதிக சீட் கிடைக்கும் என்று கட்சிகள் கணக்கு போடும் காலம்.
தனித்து மட்டுமே போட்டியிடுவோம், யாரிடமும் சேரமாட்டோம் என்று வீராவேசமாக வசனம் பேசி வந்த விஜயகாந்த்தே அதிமுகவிடம் போய் மண்டி போட்டு விட்டார்.
அதேபோல ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணிக்குத் தாவுவது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பாமகவும் திமுக பக்கம் போய் விட்டது.
இந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகளும் அணி மாறப் போவதாக பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்டது விடுதலைச் சிறுத்தைகள். அப்போது 9 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் 2 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பின்னர் திமுக பக்கம் போய் விட்டது. பின்னர் லோக்சபா தேர்தலில் அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்டது. 2 தொகுதிகள் கிடைத்தன. அதில் தொல். திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.
தற்போதைய சட்டசபைத் தேர்தலிலும் திமுக அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளையும் முடித்து விட்டது. பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே தொகுதிப் பங்கீட்டை முடித்து, 31 தொகுதிகளையும் கொடுத்து மற்ற கூட்டணிக் கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளார் கருணாநிதி என்று பரவலான பேச்சு நிலவுகிறது.
பாமகவுக்கு நிகரான பலம் தங்களுக்கும் வட மாவட்டங்ளில் உள்ளது என்பது விடுதலைச் சிறுத்தைகளின் ஆணித்தரமான வாதம். இதை வலியுறுத்தி 15 தொகுதிகளாவது தர வேண்டும் என்று அவர்கள் திமுகவை கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு தர முடியாது என்பதை சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த பிச்சாண்டி மற்றும் எ.வ.வேலு இல்லத் திருமணங்களின்போது முதல்வர் கருணாநிதி மறைமுகமாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய திருமாவளவன், தமிழகம் முழுவதும் தலித் மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடையே செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். பாமகவைப் போல நாமும் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் அணி திரள வேண்டும் என்று பேசினார்.
தற்போது திமுகவிடமிருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காது என்ற வருத்தம் விடுதலைச் சிறுத்தைகளிடம் இருந்தாலும், திமுக மீது அதற்கு மேலும் பல வருத்தங்களும், ஏமாற்றங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இலங்கை அரசு தன்னை கொழும்பு விமான நிலையத்தோடு நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்து அவமானப்படுத்தியது குறித்து திமுகவோ அல்லது முதல்வர் கருணாநிதியோ கடும் கண்டனம் தெரிவிக்காததும் திருமாவளவனை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.
இதை விட முக்கியமாக பாமகவை விட தங்களை கீழாக மதிப்பதாக திமுக மீது விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிக அளவில் அதிருப்தி உள்ளது. எனவே இந்த முறை பாமகவுடன் இணைந்து திமுக கூட்டணியில் சேர அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அதி்முக அணிக்குப் போகலாம் என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக தரப்பும் இப்போது எந்த முக்கிய கட்சி வந்தாலும் வரவேற்கத் தயாராக உள்ளது. மேலும், புதிய தமிழகம் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை விட வலுவான விடுதலைச் சிறுத்தைகள் வருவதை நிச்சயம் அதிமுக ஏற்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கிய பிறகு விடுதலைச் சிறுத்தைகளுக்கான இடத்தை திமுக ஒதுக்கலாம் என்று தெரிகிறது. அதைப் பொறுத்து விடுதலைச் சிறுத்தைகளின் நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tnks http://thatstamil.oneindia.in/news/2011/02/27/vck-plans-switch-over-admk-aid0091.html