Sunday, February 27, 2011

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்ட வழக்கு ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்ட வழக்கு ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஷார்ஜா,பிப்.25:ஷார்ஜா கீழ் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த 17 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்க கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தயார் என அறிவித்ததைத் தொடர்ந்து வழக்கில் சமரசம் ஏற்படுத்த விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த மஸ்ரிஹ் கானின் உறவினர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியான ரம்ஸான் அப்துல் ஸத்தாரிடம் நீதிபதி அப்துல்லாஹ் யூசுஃப் அல் ஷம்ஸி எதிர் தரப்பில் இழப்பீட்டிற்காக எவரேனும் தொடர்புக் கொண்டார்களா? என்று கேட்டதற்கு இல்லை என பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து வழக்கை சமரசத்திற்கு மேலும் கால அவகாசம் அளித்து வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். இம்மாதம் 17-ஆம் தேதி வழக்கின் விசாரணை நடைபெறவேண்டியதாகும். அன்று பொது விடுமுறை
அறிவிக்கப்பட்டிருந்ததால் விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவைச்சார்ந்த 16 பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஹரியானாவைச் சார்ந்த ஒருவருக்கும் ஷார்ஜா நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்திருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இரவு ஷார்ஜா தொழிற்பேட்டையான ஸஜாவில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது. சட்டவிரோதமாக மதுபானம் விற்றதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிவடைந்தது.

பிரபல வழக்கறிஞரான அப்துல்லாஹ் ஸல்மான் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களுக்காக வழக்கில் ஆஜராகி வருகிறார். ஷார்ஜா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமில்லையெனில் குற்றஞ்சாட்டப்பட்டோர் அபுதாபியில் அமைந்துள்ள யு.ஏ.இயின் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment