Monday, February 28, 2011

சட்டசபைத் தேர்தல்-சுவர் விளம்பரம் எழுத தடை-மீறினால் 6 மாத சிறை

சட்டசபைத் தேர்தல்-சுவர் விளம்பரம் எழுத தடை-மீறினால் 6 மாத சிறை

சென்னை: தேர்தல் பிரசாரம் தொடர்பான சுவர் விளம்பரங்கள் எழுத தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் நாள் முதல் சுவர் விளம்பரங்களை எழுதக் கூடாது. மீறினால் 6 மாத சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முழு அளவில் தயாராகி விட்டன. தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி விட்டது. மார்ச் 1ம் தேதி தமிழக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 234 தொகுதிகளிலும் எந்த விதமான அசம்பாவிதம் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் கடந்த 3 நாட்களாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரன், இணை தலைமை தேர்தல் அதிகாரி பூஜா குல்கர்னி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

நேற்று இறுதிகட்ட பயிற்சி அரங்கம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் பங்கு பெற்றனர். அவர்களுக்கு, வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களை எவ்வாறு பெறுவது, அதை ஏற்பது, நிராகரிப்பது, மின்னணு எந்திரங்களை பயன்படுத்துவது உள்பட பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரவீன் குமார் பேசுகையில்,

தேர்தல் தேதியை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. தேர்தல் தேதியை பிப்ரவரி 28-ந் தேதி அறிவிப்பதா? அல்லது மார்ச் 1-ந் தேதி அறிவிப்பதா? அல்லது வேறு தேதியில் அறிவிப்பதா? என்று முடிவு செய்யவில்லை.

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய தொழிற்படை, துணை ராணுவத்தை கேட்டு இருக்கிறோம். நட்சத்திர அந்தஸ்து உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல ஹெலிகாப்டரில் செல்வதற்கு உண்டான செலவு தேர்தல் கணக்கில் சேராது. ஆனால் தலைவர்களுடன் வேட்பாளர்களும் பயணம் செய்தால் கட்டணத்தில் 50 சதவீதம் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே போல் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் போதும் அந்த செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பொது மக்கள் புகார் அளித்தால் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் தேர்தல் வரவு செலவு கணக்கை காட்டியிருக்கிறார்கள். காட்டாதவர்கள் மீண்டும் போட்டியிட்டால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு பொது சுவர்கள், அனுமதி இல்லாத சுவர்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்தால் 6 மாத சிறை தண்டணை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தற்போது சென்னையில் காணப்படும் விளம்பரங்களை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.

Tnks http://thatstamil.oneindia.in/news/2011/02/27/ec-bans-wall-advertisements-assembly-polls-aid0091.html

No comments:

Post a Comment