Thursday, June 14, 2012

18 ஏக்கர் வக்ஃபு இடத்தை வளைத்துப் போட முயற்சி... தடுக்க தமுமுகவினர் தீவிரம்


வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆற்காடு நவாப் ஆட்சி புரிந்த நகரத்தில் பல கோடி ரூபாய் கோடி மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
வக்ஃபு சொத்துகள் எண்ணும் ஒரு பெரும் புதையல் அரசின் அலட்சியத்தாலும், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சில சுயநலமிகளாலும் இன்னும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பணமுதலைகளாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. இதைக் கேட்க நாதியற்ற நிலையில் இந்த சமுதாயம் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில், தமுமுக என்ற இயக்கம் வக்ஃபு சொத்துக்களை மீட்க அயராது உழைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் ஆற்காடு பகுதியில் 250 ஆண்டு கால அடக்கஸ்தலம் ஆக்கிரமிக்கப்பட்டு பிளாட் போட வசதியாக சமன்படுத்தப்பட்டிருந்தது. தமுமுகவினர் தலையிட்டு அதிகாரிகளின் துணையுடன் அந்த இடத்தை மீட்டனர். தற்போது மேலும் ஒரு வக்ஃபு இடத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்து இப்போது பார்ப்போம். ஆற்காடு சையத் ஷாபித் அலி ஷா தர்கா பள்ளிவாசல் வக்ஃபுக்குச் சொந்தமாக தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் 18 ஏக்கர் 36 சென்ட் நிலம் உள்ளது. இதன் குறைந்தபட்ச அரசாங்க மதிப்பு சுமார் 20 கோடியாகும். இராணிப்பேட்டை EID Parry கம்பெனி அருகில் அமைந்துள்ளது மொய்யா பீ தர்கா. இந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வருகிறார்கள். தற்பொழுது இந்த இடத்தில் இரயில்வே மேம்பாலம் அமைய உள்ளதால், அனைத்துவீடுகளையும் காலி செய்யும்படி இரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தமுமுக நிர்வாகிகள், இரயில்வே நிர்வாகத்திடம், இதுவரை வசித்துவந்த ஏழை மக்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு முறையிட்டனர். இதற்கு எந்தவித பதிலையும் இரயில்வே நிர்வாகம் அளிக்காத நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட தமுமுக-மமக தலைவர் ஏஜாஸ் அஹமது, மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஓ.இம்ரான் ஆகியோர் முன்னிலையில் ஆற்காடு நகர தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலையில் அமைந்துள்ள சையத் ஷாபித் அலி ஷா தர்கா பள்ளிவாசல் வக்ஃபுக்குச் சொந்தமான இடத்தில் 18.05.2012 அன்று ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தமுமுகவினர் சுத்தம் செய்து குடிசைகள் அமைத்துத்தர ஏற்பாடு செய்தனர்.
தமுமுகவினர் இப்பணிகளை மேற்கொண்டிருந்த சமயம் காலித் என்பவர், இந்த இடத்திற்கு நான்தான் முத்தவல்லி என்று சொந்தம் கொண்டாடி தகராறு செய்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு ஆற்காடு நகர காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மற்றும் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.), தாசில்தார், வக்ஃபு ஆய்வாளர் ஆகியோர் வருகை தந்தனர். வக்ஃபு ஆய்வாளர், இது வக்ஃபு இடம் என உறுதி செய்ததுடன், காலித் முத்தவல்லி என்று ஆவணங்களுடன் எடுத்துரைத்தார்.
இதற்கிடையே வீடின்றி தவித்த ஏழை மக்கள் 40 பேருக்கு குடிசைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இதற்கிடையில் கடந்த 22.05.2012 அன்று வேலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தாமோதரன், இந்த இடம் தனக்குச் சொந்தமான பட்டா நிலம் என்றும், இதில் யாரும் தனது அனுமதியில்லாமல் உள்ளே வரக்கூடாது என்று பத்திரிகையாளர்களிடம் கூறியதுடன், வக்ஃபு இடத்தில் இருந்த தமுமுகவினரையும் மிரட்டிச் சென்றுள்ளார். இந்த 18 ஏக்கர் நிலத்தை தாமோதரனுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தாமோதரன் வைத்துள்ள போலி ஆவணம் கூறுகிறது. வக்ஃபிற்குச் சொந்தமான இடம் எக்காரணம் கொண்டும் முஸ்லிம்களிடமிருந்து கைவிட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற உறுதி காரணமாக ஆற்காடு, இராணிப்பேட்டை, கலவை, கல்மேல்குப்பம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த தமுமுகவினர் கடந்த 20 நாட்களாக குறிப்பிட்ட இடத்தில், இரவில் எவ்வித வெளிச்சமும் இல்லாத நிலையிலும், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் உள்ள பகுதியை பசி பட்டினியோடும் தினமும் உறங்கி காவல் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
www.tmmk.info

No comments:

Post a Comment