சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர், வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. அந்தப் பிரிவில் 3 ஆயிரத்து 631 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
- அதன்படி, தேர்வாணையத்தின் இணையதளம் வழியாக (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜூலை 13 ஆகும்.
- வங்கி மற்றும் அஞ்சலகங்களில் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூலை 17.
- தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
- குரூப் 2 தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்று இருப்பது அவசியம்.
- விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.
- பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
- இந்தத் தேர்வினை நடத்துவதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 114 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நிரந்தரப் பதிவு:
- தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிரந்தரப் பதிவு மற்றும் குரூப் 4 தேர்வுக்கு வழங்கப்பட்ட நிரந்தரப் பதிவெண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- பதிவெண் மற்றும் கடவுச்சொல் இல்லாதவர்கள் நேரடியாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். அவர்களின் விவரங்கள் நிரந்தரப் பதிவுக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:
தேர்வுக்கு இணையதளம் வழியே வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கும் பட்சத்தில் இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்வதோடு, தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் தவிர்க்கலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment