Saturday, June 9, 2012

விஷ மருந்தை விற்கும் டாஸ்மாக் அரசு!


மக்களின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகளுக்கு டாஸ்மாக் நிறுவனமே காரணமாக உள்ளதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு காட்டமாக விளாசியுள்ளார்.

கடலூரைச் சேர்ந்த பாலமுருகனின் பழுதடைந்த இரண்டு சிறுநீரகங்களையும் மாற்ற 5 லட்ச ரூபாய் செலவாகும் என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சொல்லிவிட்டது. டாஸ்மாக் நிறுவனத்திடம் சுகாதார திட்டத்தின் கீழ் உதவி கேட்டுள்ளார் பாலமுருகன். மருத்துவ சிகிச்சை திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கூறிவிட்டார்.
இதனை எதிர்த்து பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, “எதிர் மனுதாரரான டாஸ்மாக் இயக்குனர், பாலமுருகன் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சைப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். சிகிச்சையளிக்கும் ஆஸ்பத்திரியை இயக்குனர் முடிவு செய்ய முடியாது. மருத்துவ சிகிச்சை தொகை பெறும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டியுள்ளது. எனவே டாஸ்மாக் நிறுவனம் உச்சவரம்பை தீர்மானிக்க முடியாது. சிகிச்சைக்கான 5 லட்ச ரூபாயை டாஸ்மாக் நிறுவனம் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
அதோடு மட்டும் நீதிபதி நிறுத்தவில்லை. மதுவை மக்களுக்கு விற்று அவர்களின் ஈரல், சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு டாஸ்மாக் மறைமுகக் காரணமாக உள்ளது என்று கூறியுள்ளார். முன்பு தனியார் வசமிருந்த மது தயாரிப்பு மற்றும் விற்பனையை 2003 ஆம் ஆண்டு முதல் அரசே ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளும் கட்சியினரும், தொழில் அதிபர்களும் மதுக்கடைகளை ஏலத்தில் எடுத்து பல கோடிகளை சுருட்டி வருகின்றனர். 2003&ல் அன்றைய அதிமுக அரசு, மது விற்பனை உரிமையை தமிழ்நாடு வாணிபக் கழகத்துக்கு வழங்கியது. அது முதல், தொடர்ந்து மது விற்பனை தாறுமாறான வளர்ச்சி கண்டு வருகிறது. அது பற்றிய வருவாய் விபரத்தை சட்டமன்றத்தில், மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரியப்படுத்தியிருக்கிறார்.


சுமார் 3639 கோடி லாபத்தில் தொடங்கிய மது விற்பனை வருவாய் 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது அரசு துறை நிறுவனம் ஒன்று பெரிதாக வளர்ந்துள்ளது என்று யாரும் பெருமை கொள்ள முடியாது. இந்த வருமானம் அரசாங்கத்தை சக்திப்படுத்தலாம். ஆனால் குடிமக்களின் சக்தியை அது உறிஞ்சிவிடுகிறது.
குடி மக்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் ஒரு விஷமருந்தை தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்து, அதன் மூலம் குடும்பத் தலைவர்களைக் கொன்று குடும்பத் தலைவிகளை விதவையாக்கி வருகிறது. ஒருபுறம் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாக அரசு கூறினாலும், டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் பல பெண்கள் தங்கள் குடும்பத் தலைவர்களை இழக்கவும் முழு காரணமாகி வருகிறது. எனவே தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை ஒழித்து ‘குடி’ மக்கள் குடியிலிருந்து விடுபட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்மென்பதே சமூகநல ஆர்வலர்களின் விருப்பமாகும்.
www.tmmk.info

No comments:

Post a Comment