கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்களின் ஆசீர்வாதத்துடன் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்த ரெட்டிகள் சுஷ்மா சுவராஜின் செல்லப்பிள்ளைகள். ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்ததற்காக எடியூரப்பா அரசு, அவர்களுக்கு சுரங்கங்களை சுரண்டிக்கொள்ள அனுமதி கொடுத்தது.
மாநில அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி ஒப்புலாபுரம் சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் வெட்டியெடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. 2011 செப்டம்பர் 5ஆம் நாள் ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த ஜனார்த்தன ரெட்டியைப் பிணையில் விடுவிக்க லஞ்சம் பெற்றதாக, ஆந்திர மாநில சி.பி.ஐ. நீதிபதி டி.பட்டாபிராம ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிணை வழங்க ராவ் முதலில் 15 கோடி ரூபாய் கேட்டுள்ளார். 5 கோடி ரூபாய் பேரம் பேசி இறுதியாக 10 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டதாம்.
பிணை வழங்கப்படும் முன்னர் முதல் தவணையாக 3 கோடி ரூபாய் நீதிபதி ராவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதித் தொகை பிறகு தரப்படும் என்று ரெட்டி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மே 11ஆம் தேதி ஜனார்த்தன ரெட்டி, 5 லட்ச ரூபாய் கட்டி சொந்தப் பிணையில் வெளியே வந்துள்ளார். அதேநேரம், இதே வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இ.ஆ.ப. அதிகாரி ஒய். ஸ்ரீலட்சுமிக்கு இதே தொகைக்கு பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. ரெட்டிக்கு பிணை கொடுக்கப்பட்ட அன்று, காலை முதல் மாலை 5 மணி வரை ரெட்டியின் சகோதரரும் பெல்லாரி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.சோமசேகர ரெட்டி, நீதிமன்ற வளாகத்தில் இருந்திருக்கிறார். அவர் கையில் பணம் கொண்டு வந்திருந்தார் என்கிறது சி.பி.ஐ. இந்த இரண்டு சம்பவங்களும் சி.பி.ஐ.க்கு சந்தேகத்தை கிளப்பியது.
ஐதராபாத்தின் அசோக் நகரில் இருக்கும் தேசிய வங்கி ஒன்றில் நீதிபதி பட்டாபி ராமராவ் மகன் பெயரில் லாக்கரில் இருந்த பணத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர். ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவரும் ஆந்திர மாநிலத்தின் நீதித்துறை மற்றும் சட்டத்துறைக்கான அமைச்சருமான எரசு பிரதாப் ரெட்டியும், குண்டூரைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதி ஒருவரும் நச்சாரம் பகுதி தாதா யாதாகிரியும் கூட்டு சேர்ந்து இந்த லஞ்சபேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் பிரதாப் ரெட்டி இதனை மறுக்கிறார். சஞ்சலக்குடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜனார்த்தன ரெட்டியை அமைச்சர் பிரதாப் ரெட்டி சந்தித்தார் என்று கூறப்படுகிறது.
சீர்திருத்த நடவடிக்கைகளுக்காகவே சஞ்சலகுடா சிறைக்குச் சென்றதாகவும், அப்போது ஜனார்த்தன ரெட்டியை சந்திக்கவில்லை என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
நீதிபதி பட்டாபி ராமராவை இடைநீக்கம் செய்ய, ஆந்திர நீதிபதிகள் பேரவையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மதன் பி. லோகுர் கூட்டி முடிவெடுத்திருக்கிறார். விரைவில் பட்டாபி ராமராவ், அவரது மகன், சட்டத்துறை அமைச்சர், மேலும் ஐந்து பேர் சி.பி.ஐ.யின் விசாரணைக்கு உட்பட உள்ளனர்.
நாட்டின் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பல்களுக்கும், மாஃபியாக்களுக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு நீதிபதிகள் பிணை வழங்குகின்றனர். பிணை பெற அந்த சமூக விரோதிகள் நீதித்துறைக்கு கட்டும் பணம் சில லட்சங்கள் மட்டும்தான். ஆனால் நீதிபதிகளுக்கு கொட்டும் பணம் கோடிக்கணக்கில். நாட்டின் வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசுகளும், நீதிபதிகளும் கூட்டாக சேர்ந்துகொண்டு தாதாக்களையும் ஈடுபடுத்தி துரோகமிழைக்கின்றனர். நீதித்துறையும் மாஃபியாக்களின் மடியில் வீழ்ந்து கிடப்பதையே இது உறுதி செய்கிறது.
லோக் ஆயுக்தா தீர்ப்பு பாஜக எம்.எல்.ஏ.க்கு சிறை மாநில அரசுகளின் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளின் லஞ்சம் ஊழல்களைக் கண்காணித்து விசாரிக்கும் அமைப்புதான் லோக் ஆயுக்தா. இவ்வமைப்பு சாட்டிய குற்றத்தின் கீழ்தான் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சிறைக்குச் சென்றார். இப்போது மீண்டும் எம்.எல்.ஏ. ஒருவர், லஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அவரது பெயர் ஒய்.சம்பங்கி. கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் நகரப் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் உசேன் மாஹீன் பாக். இவரிடம் சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சனையைத் தீர்த்துவைக்க சம்பங்கி ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை உசேன் பாரூக், லோக் ஆயுக்த அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி, சம்பங்கியிடம் பாரூக்கி தொகையை வழங்கியபோது, அதிகாரிகள் சம்பங்கியைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
2012 ஜூன் 2ஆம் தேதி இதற்கான தீர்ப்பை நீதிபதி என்.கே. சுதீந்திரராவ் வழங்கினார். மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர் லஞ்சம் வாங்க நினைத்தது தவறு என்பதற்காக ஓராண்டு சிறையும், 30 ஆயிரம் அபராதமும், சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஓராண்டு சிறையும், 30 ஆயிரம் அபராதமும், லஞ்சம் வாங்கியதற்காக மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றுள்ளார். இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிபதி என்.கே.சுதீந்திர ராவ் கூறியிருக்கிறார். இத்தீர்ப்பினை எதிர்த்து சம்பங்கி மேல்முறையீடு போகக்கூடும். எனினும் இதுபோன்ற உறுதியான தீர்ப்புகள் வரும்போதே மக்கள் பிரதிநிதிகள் லஞ்சம் வாங்கவும், ஊழல் புரியவும் பயப்படுவர்.
உ.பி.யில்....
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில், தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் சுகாதாரத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், உ.பி.யில் 72 மாவட்டங்களில் 100க்கும் மேலான தலைமை மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அப்போதைய உ.பி. சுகாதாரத்துறை அமைச்சர் ஆனந்த் மிஸ்ராவும், குடும்ப நலத்துறை அமைச்சர் பாபுசிங் குஷ்வாகாவும் ஒவ்வொரு தலைமை மருத்துவ அதிகாரி நியமனத்துக்கு 15 முதல் 20 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். குஷ்வாகா தலைமையில் செயல்பட்ட குடும்ப நலத்துறைக்கு பெருமளவு நிதி கிடைக்க வகையாக குஷ்வாகாவும், அப்போதைய முதன்மை செயலர் பிரதீப் சுக்லாவும் சேர்ந்து சுகாதாரத் துறையையும் குடும்பநலத் துறையையும் பிரிக்கத் திட்டமிட்டனர். இது மத்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. இதுவரை 13 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. உ.பி. சட்டமன்றத் தேர்தலின் போது, மாயாவதியிடம் இருந்து பிரிந்து சென்ற குஷ்வாகா, பாரதீய ஜனதாவில் அடைக்கலம் ஆனார். உ.பி.யில் பாஜக படுதோல்வி அடைய அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
"நாட்டின் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பல்களுக்கும், மாஃபியாக்களுக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு நீதிபதிகள் பிணை வழங்குகின்றனர். பிணை பெற அந்த சமூக விரோதிகள் நீதித்துறைக்கு கட்டும் பணம் சில லட்சங்கள் மட்டும்தான். ஆனால் நீதிபதிகளுக்குக்கொட்டும் பணம் கோடிக்கணக்கில்."
--ஜி.அத்தேஷ்
www.tmmk.info
No comments:
Post a Comment