மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரம் என்பது லண்டனுக்குக் கிடைக்கவிருக்கும் கௌரவம். மெக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் கூடும் இடமாக லண்டன் ஒலிம்பிக் சாதனை படைக்கும் என்பது ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்பார்ப்பு. 'ஒரு தலைமுறைக்கே உத்வேகம் கொடு’ (Inspire a Generation) - இதுதான் லண்டன் ஒலிம்பிக்கின் பஞ்ச் வாசகம்! 2005-ம் ஆண்டு '2012 ஒலிம்பிக் போட்டிகள்’ நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே, லண்டனின் பாதாள ரயில்களில் குண்டுகள் வெடித்தன. அதிர்ந்துபோன இங்கிலாந்து அரசு ஒலிம்பிக் பாதுகாப்புச் செலவுகளுக்கு மட்டுமே பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்துவருகிறது.ஒலிம்பிக் பார்வையாளர்களைக் கூடுதலாக ஈர்க்க, உலக அதிசய ஈஃபிள் கோபுரம்போலவே லண்டனில் ஒரு வித்தியாசமான கோபுரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். 376 அடி உயரத்தில் சுருள் வடிவத்தில் அமைந்திருக்கும் இதற்கு 'ஒலிம்பிக் கோபுரம்’ என்றே பெயர். இந்திய ஓவியர் அனீஷ் கபூர் வடிவமைத்திருக்கிறார். 455 வளைவான சுருள் படிக்கட்டுகளுடன் இருக்கும் இந்தக் கோபுரத் துக்கு உள்ளே உணவகங்கள் உண்டு. மைதானங்களின் அருகி லேயே இருக்கும் இந்தக் கோபுரங்களில் ஏறி ஒலிம்பிக் போட்டி களை ரசித்தபடியே உணவருந்தலாம்.
ஒலிம்பிக் போட்டிகளின் பிரமாண்ட தொடக்க விழா மற்றும் இறுதி விழா நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் பொறுப்பு 'ஸ்லம் டாக் மில்லியனர்’ பட இயக்குநர் டேனி பாய்ல் தலைமையிலான குழுவினரின் பொறுப்பு. ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ டேனியல் க்ரேய்க் நடிக்கும் ஐந்து நிமிட ஸ்டேஜ் ஷோ, ஷேக்ஸ்பியரின் 'தி டெம்பஸ்ட்’ நாடகத்தை மையமாகக்கொண்டு இசை நிகழ்ச்சிகள், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட உலகின் பிரபல இசைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் என கலர்ஃபுல் மேளாவாக நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க 100 கோடிப் பேர் கண்டு ரசிப்பார்கள் என்பது தற்போதைய கணக்கு. தொடக்க விழாவுக்கான ஒரு டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 1.7 லட்சம் ரூபாய்!லண்டனின் 200 பழமையான பாரம்பரியமிக்க கட்டடங்களை இடித்து வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டுக் கிராமத்தை அமைத்திருக்கிறார்கள். மைதானங்களை அதிகபட்சம் 20 நிமிடங்களில் வீரர்களை அடைந்துவிடும் வசதிக்காகவே பாரம்பரியக் கட்டடங்களைக்கூடத் தியாகம் செய்திருக்கிறது லண்டன்!விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பத்திரிகை யாளர்கள் என ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமாக லண்டனுக்குள் வரும் எவரும் இங்கிலாந்து குடிமக்களை 'கரெக்ட்’ செய்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற உத்தரவாதம் பெற்ற பிறகே, விசா கொடுத்திருக்கிறது இங்கிலாந்து அரசு. இதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகளுக்கு வந்த பலரும் காதல் வலையில் சிக்கியோ அல்லது விரித்தோ இங்கிலாந்தின் மருமகன்/மருமகள் ஆக நிரந்தரக் குடியுரிமை பெற்று மக்கள் தொகையை ஏகமாக அதிகரித்துவிட்டார்கள் என்பதால்தான் இந்த உஷார் உத்தரவாத நடவடிக்கை!1928 முதல் ஒலிம்பிக் போட்டிகளின் ஸ்பான்சராக இருக்கும் கோக் நிறுவனம் 2012 ஒலிம்பிக்கில் 2.30 கோடி பாட்டில்கள், டின்களை விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கிறது. ஒலிம்பிக் மைதானத்தில் பணிபுரியும் ஒரு கோக் நிறுவன ஊழியர் தினமும் 100 கேஸ் பாட்டில்களைச் சுமந்து செல்ல வேண்டியிருக்குமாம்.
விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே அமைந்திருக்கும் வீடுகளின் மொட்டை மாடிகளில் ஏவுகணைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் லண்டனை வளைய வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு 500 அடிக்கும் ஒரு காவல் நிலையம், கழிப்பறைகளைத் தவிர மற்ற அனைத்து இடங் களிலும் ரகசியக் கண்காணிப்பு கேமரா என உச்சகட்ட உதறலில் இருக் கிறது லண்டன் பாதுகாப்புப் படை!
இந்த ஒலிம்பிக்கின் உயர்வெளிச்சத் துளிகள்...
2008 ஒலிம்பிக்கில் அமெரிக்கா 110 பதக்கங்களுடன் முதல் இடம் பிடிக்க, ஒலிம்பிக்கை நடத்திய சீனா 100 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்தது. ரஷ்யா மூன்றாம் இடம். இங்கிலாந்துக்கு நான்காவது இடம். இம் முறை போட்டிகள் லண்டனில் நடப்பதால், அமெரிக்காவுக்கு இங்கிலாந்து கடும் நெருக்கடி கொடுக்கலாம்!
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வேட்டையாடிய அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் இந்த முறையும் செம ஃபார்மில் இருக்கிறார். ஒலிம்பிக் பந்தயங்களில் மட்டுமே இது வரை 16 பதக்கங்களை வென்றிருக்கும் ஃபெல்ப்ஸ், லண்டன் ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள் வென்றாலே, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்!
100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் ஒலிம்பிக் சாதனை படைத்திருப்பவரும், உலக சாம்பியனுமான உசேன் போல்ட் தான் லண்டன் ஒலிம்பிக்கின் மாஸ் ஹீரோ. இவர் பங்கேற்கும் தடகளப் போட்டிகளைக் காணத்தான் லட்சக்கணக்கான மக்களால் லண்டன் களைகட்டும் என்கிறார்கள். 100 மீட்டரை 9.58 விநாடிகளிலும், 200 மீட்டரை 19.19 விநாடிகளிலும் கடந்து சாதனை படைத்த உசேன், இந்த ஒலிம்பிக்கில் 100, 200 மீட்டர்களை தலா 9.54, 19.00 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைப்பேன் என்கிறார்!மலேசியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை நுர் சுர்யானி டெய்பி எட்டு மாதக் கர்ப்பிணியாகப் போட்டியில் கலந்துகொள்வார். ''15 நிமிடங்கள்தான் போட்டி நடக்கும். அப்போ மட்டும் வயித்துக்குள் ஆடாம, அசையாம இருக்கணும்னு பாப்பாகிட்ட சொல்லியிருக்கேன்!'' என்கிறார் நுர் சுர்யானி வயிற்றை மென்மையாகத் தடவிக்கொடுத்துக்கொண்டே. ஜப்பானின் வில் வித்தை வீரர் ஹிரோஷிதான் இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் மிக மூத்த வீரர். அவருக்கு வயது 70. இந்த ஒலிம்பிக்கிலேயே மிகவும் உயரம் குறைந்த பெண்ணாகக் கலந்துகொள்ளும் சீனாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லி லுவின் உயரம் 1.36 மீட்டர். இவர் 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பது கூடுதல் தகவல்!
நம்பிக்கை இந்தியர்கள்!
கிருஷ்ண பூனியா, வட்டு எறிதல்: 2010 டெல்லி காமென் வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் தங்கம் வென்றவர். உலக சாம்பியன் ஆஸ்திரேலிய வீராங்கனை டேனி சாமுவேல்ஸுக்கே சவால்விட்ட கிருஷ்ண பூனியா, கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் தீவிரப் பயிற்சியில் இருக்கிறார். 'தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் என் மூலம் கிடைக்கும்!’ என்பது கிருஷ்ண பூனியாவின் சபதம்.
சாய்னா நெய்வால், பேட்மிட்டன்: 13 முறை உலக சாம்பியனான சீனாவின் ஸியாங் குவாபோ, 'சாய்னா தான் சீன வீராங்கனைகளுக்கு ஒரே அச்சுறுத்தல்!’ என்று சொல்லியிருப்பது அந்த இந்தியாவின் பதக்க நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது!
மேரி கோம், குத்துச் சண்டை: முதல்முறையாக ஒலிம்பிக்கில் இணைந்திருக்கும் பெண்கள் குத்துச்சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு!
'சுட்டேபுடுவோம்’ கேங்க்: துப்பாக்கி சுடுதல் பிரிவில் மொத்தம் 11 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் வேட்டையில் இருக்கிறார்கள். 2008 ஒலிம்பிக்கில் பதக்கம் தட்டிய அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ரஞ்சன் சிங் சோதி, மனவ்ஜித் சிங் சோதி என ஆண்கள் பிரிவிலும் ஹீனா, அன்னு ராஜ் என பெண்கள் பிரிவிலும் வலுவான ப்ளேயர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் பதக்கம் உத்தரவாதம்!
விஜேந்தர் சிங், குத்துச்சண்டை: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர், டெல்லி காமென் வெல்த் போட்டியில் அரையிறுதியிலேயே தோல்வியடைந்தார். கடும் விமர்சனத்துக்கு உள்ளான விஜேந்தர், அதன் பிறகு தனது பயிற்சி நேரத்தை நாளன்றுக்கு 10 மணி நேரமாக அதிகரித்தார். கஜகஸ்தான் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் வென்று கடைசித் தருணத்தில் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.
தீபிகா குமாரி, வில்வித்தை: கடந்த மாதம் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று உலகின் நம்பன் ஒன் வீராங்கனையாக உயர்ந்துஇருக்கும் தீபிகா குமாரி, நிச்சயம் தங்கம் தட்டுவார் என்பது பாசிட்டிவ் எதிர்பார்ப்பு!
விகடன்
No comments:
Post a Comment