Friday, June 22, 2012

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒரு முஸ்லிம் ஆய்வாளர் – மத்திய அரசு உத்தரவு


முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், ஆய்வாளர் ( Inspector) அல்லது துணை ஆய்வாளர் ( Sub Inspector) நியமிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நினைவூட்டல் கடிதம் எழுதியிருக்கிறது. இந்த நியமனம் பற்றி ஜூன் மாத இறுதிக்குள் அறிக்கை அனுப்பும்படியும் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங், மாநில முதன்மை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முஸ்லிம்களின் நிலைப் பற்றி ஆராய 2005 மார்ச் 9ஆம் தேதி, நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப் பட்டது. 2006 நவம்பரில் மத்திய உள்துறையிடம் அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி சச்சார், முதல்கட்ட நடவடிக்கையாக, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் பொறுப் பில் முஸ்லிம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதிபதி சச்சாரின் பல்வேறு பரிந்துரைகளை அமல்படுத்த அந்தந்த அமைச்சகங்கள் சட்ட விதிமுறைகளையும், கொள்கைகளையும் ஆராய்ந்து வருகின்றனவாம். பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சகத்துக்கு உரியது என்ற காரணத்தால், மத்திய உள்துறைச் செயலகம் இந்தப் பரிந்துரையை அமல்படுத்த மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.
2007ல் அன்றைய மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தா, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளராக முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்கும்படி கடிதம் எழுதியிருந்தார். அந்த உத்தரவை நினைவூட்டியே மீண்டும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ‘‘டிசம்பர் மாதத்திலும் இந்த நியமன முறையைப் பின்பற்ற வேண்டும். ஆறுமாத கால அடிப்படையில் நியமனங்கள் தொடர்பாக அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் ஆர்.கே.சிங் வலியுறுத்தி உள்ளார். நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இப்படியொரு நடைமுறை பின்பற்றப்பட்டதாகத் தெரிய வில்லை. அமல்படுத்தியிருந்தால் உள்துறை அமைச்சகம் அல்லது முதன்மை செயலர் வெளிப் படையான அறிக்கை தரவேண்டும்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முஸ்லிம் காவல் அதிகாரிகளை நியமிக்கும்படி சச்சார் பரிந்துரைத்து இருப்பதன் நோக்கம், முஸ்லிம்கள் மத அடிப்படையில் அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்படி என்றால் அந்த முஸ்லிம் அதிகாரி நேர்மை உடையவராகவும், அந்தக் காவல் நிலையத்தில் முஸ்லிம்களுக்கு அநீதியோ, துயரமோ தரப்பட்டால் அதை உணர்வுப்பூர்வமாகவும், தார்மீக உணர்வுடனும் தடுக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும். தமிழக காவல்துறை 1992ல் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், 1993ல் சென்னை ஐஸ் ஹவுஸ், 1997ல் கோவை ஆகிய சம்பவங்களில் விதிவிலக்காக முஸ்லிம்களிடம் மதத்துவேசத்துடன் நடந்திருக்கிறது.
ஆனால், நமக்குத் தெரிந்து, முஸ்லிம் காவல் அதிகாரிகளும் மற்றவர்களைப் போன்றே லஞ்சம், ஊழல் போன்ற செயல்களிலும் குற்றவியல் குற்றங் களிலும் ஈடுபட்டு வருவதை அறிகிறோம். பாதிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் காவல் நிலையத்துக்குச் சென்றாலோ, அல்லது காவல் நிலையத்துக்குச் சென்ற முஸ்லிம்கள் மற்ற அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டாலோ, இழிவாக நடத்தப்பட்டாலோ, கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
அப்படி, முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கினால், நாம் மத உணர்வுடனும், சமுதாய உணர்வுடனும் நடந்து கொண்டதாக மற்ற அதிகாரிகள் கருதுவார்கள், மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அவர்கள் ஒதுங்கிக் கொள்ளவோ, வெளியே சென்றுவிடவோ செய்கின்றனர். மேலும் ‘காவல் சாதி’யில் கறைந்தும் விடுகிறார்கள். வெகுசிலரே விதிவிலக்காக இருக்க முடியும். ஒரு காவல் நிலையத்தில் ஒரு சதவீதமாகவோ, ஒன்றரை சதவீதமாகவோ முஸ்லிம்கள் இடம்பெறும் போது அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?
பல காவல் நிலையங்களில் பல்வேறு பிரச்சனை களில் முஸ்லிம் அதிகாரிகளைக் காட்டிலும் முஸ்லிம் அல்லாத அதிகாரிகள் மிக நேர்மையோடும் மனிதாபிமானத்தோடும் முஸ்லிம்களிடம் நடந்துகொள்கின்றனர். சச்சாரின் பரிந்துரை நியாயங்கள் தமிழ்நாட்டைக் காட்டிலும் பிற மாநிலங்களுக்கே அதிகம் பொருந் தும். தமிழ்நாட்டு காவல் நிலையங்கள் வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று சொல்லலாம். தமிழக காவல் நிலையங்களில் மதத்துவேஷம் இல்லை என்றா லும், அனைத்து சமூகத்தினரையும் இழிவுபடுத்தும் செயல் நடக்கவே செய்கிறது.

-- ஜி.அத்தேஷ்
www.tmmk.info

No comments:

Post a Comment