ஏகஇறைவனின் திருப்பெயரால்...
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُواْ شُهَدَاء عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا {143
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம்... 2:143.
மிதமான வேகமே சுகமானப் பயணம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த கட்டுரையில் திருடிய குற்றத்திற்காக கை துண்டிக்கப்படவிருந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி உஸாமா(ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் சிபாரிசு செய்ததையும் அதைக் கேட்டதும் அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறியதும் தாம் செய்ய இருந்தது பாவ காரியம் என்பதை உஸாமா(ரலி) அவர்களுக்கு உணர்த்தியதும் தொடர்ந்துப் பேசுவதை நிருத்திக்கொண்டு தாம் செய்யவிருந்த பாவ காரியத்திற்காக அண்ணல் அவர்களையே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்கும்படிக் கூறியதைப் பார்த்தோம்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய சொந்தப் பிரச்சனைக்காக யார் மீதும் எப்பொழுதும் கோபம் கொண்டதே இல்லை என்பதற்கான சில சம்பவங்களையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம்.
ஆனால் பிறருக்குத் துன்பம் தரக் கூடிய அல்லது ஒட்டு மொத்த சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய எந்த தீமையை யார் செய்தாலும் அண்ணல் அவர்கள் சமுதாயத்தை சீர்திருத்த வந்த தீர்க்கதரிசி என்பதால் அந்தந்தக் காரியங்களுக்கு தகுந்தாற்போல் கோபத்தை வெளிப்படுத்திக் காரியத்தின் வீரியத்தை உணரச் செய்வார்கள்.
மக்களும் உடனடியாக அதிலிருந்தது விலகிக் கொள்வார்கள் இவ்வாறே 23 வருட காலமாக இஸ்லாமியச் சட்டம் முழுமை படுத்தப்பட்டது. அதனால் தான் இதை மனிதனுக்கேற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படுகிறது.
கேடு விளைவிக்கும் மிதமிஞ்சிய வேகம்.
இறைதூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பெண்களை ஏற்றி வந்த ஒட்டகத்தை ஓட்டி வந்த ஒட்டகமோட்டி ஒருவர் பாட்டுப் பாடிக்கொண்டு படுவேகமாக விரட்டி செல்வதைக் கண்டு கடும் கோபமுற்றார்கள்.
அவரை நோக்கி அன்ஜஷாவே ஒட்டகத்தை விரட்டாதே ! நிதானத்தை கடைப் பிடி மேலே அமர்நதிருக்கும் பெண்களை விபத்துக்குள்ளாக்கி விடாதே ! என்று கோபத்துடன் கண்டித்து விட்டு இவ்வாறு பாட்டுப் பாடிக் கொண்டு வாகனத்தை வேகமாக விரட்டுவது உனக்கு பெரும் கேட்டைத் தான் உண்டு பண்னும் என்றுக் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர் ஒருவர் (அன்ஜஷா என்பவர்) பாடினார். அப்போது (அவரிடம்) நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷா! உனக்குக் கேடுதான்! மெல்லப்போ கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்றார்கள். 6209. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒட்டகம் படு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அதே வேகத்தில் ஒட்டகம் தடுமாறி விழுந்து விட்டால் அல்லது அதிகமான வேகத்தின் காரணத்தால் பெண்கள் அமருவதற்காக ஒட்டகத்தின் மேல் கட்டப்பட்டக் கூடாரத்தின் கட்டுகள் அவிழ்ந்து விட்டால் கூடாரம் கீழே விழுந்த வேகத்திற்கு உடைந்து நொறுங்கி சின்னாப் பின்னமாகி விடும்.
அதனால் கூடாரத்திற்குள் இருக்கும் பெண்களின் கை, கால்கள் உடைந்து, மண்டை உடைந்து அல்லது மொத்த உடலும் சிதறி அகால மரணத்தைத் தழுவ நேரிடலாம் அதனால் தான் இந்த செயலைக் கடுமையான கோபத்துடன் இது உனக்குக் கேட்டைத் தான் தரும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள்.
குறைந்த வேகமும் கேடு தான்.
பயணத்தில் வேகம் மிகக் குறைவாக இருந்தாலும் பின்னால் வரக் கூடிய வாகனம் நம்முடைய வாகனத்தில் மோதும் நிலை உருவாகலாம், இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கையும் அடைய முடியாது இது போன்ற காரணங்களும் வேகம் குறைவான பயணத்தில் ஏற்படுவது உண்டு.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஜாபிர்(ரலி) அவர்களின் ஒட்டகம் மிக மெல்லமாக சென்று கொண்டிருந்தது இதைக் கடந்த இறைத் தூதர்(ஸல்) அவர்கள் ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்த கம்பை வாங்கி அவர்களின் கரங்களால் ஜாபிர்(ரலி) அவர்களுடைய ஒட்டகத்தைத் தட்டியதும் அது வேகமாக ஓடத் தொடங்கியது.
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான் மந்தமாக நடக்கும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன் அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, 'யாரவர்?' என்று கேட்டார்கள். 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்!'' 'நான் மந்தமான ஒட்டகத்தில் பயணம் செய்கிறேன்!' என்று கூறினேன். 'உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன்.'அதை என்னிடம் கொடும்!' என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். (அந்தக் கம்பால்) ஒட்டகத்தை(அடித்து) விரட்டினார்கள்.அப்போதிருந்து என்னுடைய ஒட்டகம் அனைவரையும் முந்திச் செல்ல ஆரம்பித்தது... நூல்: புகாரி 2309. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
வாகனத்தை வேகமாக விரட்ட வேண்டாம் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் பிறரை தடுத்து விட்டு அவர்கள் வேகமாக விரட்ட மாட்டார்கள்.
ஆனாலும் நிதானமாக செல்லக் கூடிய இறைத் தூதர்(ஸல்) அவர்களின் ஒட்டகமே ஜாபிர்(ரலி)அவர்களுடைய ஒட்டகத்தை முந்திச் செல்கிறதென்றால் ஜாபிர்(ரலி) அவர்களுடைய ஒட்டகம் எந்தளவுக்கு வேகம் குறைவாக சென்றுக் கொண்டிருந்திருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.
எவ்வளவு மெதுவாக சென்றாலும் நல்லது தானே என்று அண்ணல் அவர்கள் கண்டு கொள்ளாமல் போய் விட வில்லை மாறாக நடுநிலையான வேகம் தான் நிதானமான வேகமாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு தங்களுடைய கரங்களால் அந்த ஒட்டகத்தைத் தட்டி விட்டு வேகத்தை அதிகப் படுத்தினார்கள்.
மேற்காணும் இரண்டு சம்பவங்கள் மூலமாக குறைவான வேகமும் இல்லாமல் அதிகமான வேகமாகவும் இல்லாமல் நடுநிலையான வேகத்தையே பயணத்தில் இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அன்றைய பயண நிலை.
ஒரு காலம் இருந்தது அதில் பயணம் என்றால் அவ்வளவு சுலபமானக் காரியம் அல்ல பயணம் புறப்பட்டுவிட்டால் உயிருடன் திரும்பி வருவதே கடினமானக் காரியமாகும். பாதுகாப்புடன் திரும்பி வந்து விட்டாலும் முந்தைய ஆரோக்கியம் இருக்காது.
ஹஜ்ஜூக்கு பயணிகளை சுமந்து வரும் ஒட்டகங்கள் மெலிந்த நிலையில் வரும் என்று அலலாஹ் கூறுகிறான் அந்தளவுக்கு பல ஆயிரம் மைல்கள் பயணிகளை சுமந்து கொண்டு அந்த ஒட்டகங்கள் பயணிக்கும்.
வலிமையான முறையில் படைக்கப்பட்ட அந்த ஒட்டகமே மெலிந்து விடும் என்றால் அதன் மீது அமர்ந்து மோசமான தட்ப வெப்ப நிலைகளைக் கடந்து வரும் மனிதர்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இதனால் தான் பயணத்தை தொடங்கும் போது இறைவா ! இந்தப் பயணத்தின் மீது நாங்கள் சக்தி பெற்றிருக்க வில்லை, இந்த பயணத்தை எங்களுக்கு இலகுவாக்கு, இந்தப் பயணத்தில் நீயே எங்களுக்கு உற்ற துணையாய் இரு, இந்த பயணத்தில் எங்களுக்கு இறையச்சத்தைக் கொடு, நாங்கள் திரும்பி வருகின்ற வரை எங்கள் குடும்பத்தை பாதுகாத்துக்கொள் என்று பிரார்த்தித்து விட்டுப் புறப்படுவார்கள்.
எங்களுக்கும் உற்ற துணையாய் இரு, எங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பாய் இரு என்று இறைஞ்சிக் கூறும் அளவுக்கு உயிருக்கே உத்தரவாதம் இல்லாதப் பயணம் அந்தக் காலப் பயணம்.
பயணத்தின் நடுவே உயரமான மேடுகளில் ஏறும் போதும், பள்ளத் தாக்கானப் பகுதிகளில் இறங்கும் போதும் அல்லாஹ் பெரியவன் என்ற தக்பீரை முழங்கிக் கொண்டே செல்வார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (உரக்கச்) சொல்லிவந்தோம்..... அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 7386.
திரும்பி வந்த உடன் இறைவனைப் புகழ்வார்கள், வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இறைவனை நன்றிக் கூறியவர்களாக பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு நுழைவார்கள்.
மேற் கூறப்பட்டவைகள் எதாவது இன்று நம் சமுதாயத்தில் பின் பற்றப்படுகிறதா ? என்றால் அதிகபட்சம் இல்லை என்பதே பதிலாக அமையலாம்.
காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறக்கும் மோட்டார் வாகனங்கள்.
இன்று ஒட்டகம் இல்லை ஆனால் காற்றாய் பறக்கக் கூடிய மோட்டார் வாகனங்கள் ( பைக், கார் ) வந்து விட்டது. காற்றாய் பறக்கக்கூடியது என்பதை விட காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கக் கூடியது என்றால் மிகையாகாது அதனால் தான் அதில் கரணம் தப்பினால் மரணம் என்றாகி விடுகிறது கை, கால்கள் மட்டும் உடைந்து உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பது இதில் மிகக் குறைவு.
இன்று ஒட்டகம் இல்லை ஆனால் காற்றாய் பறக்கக் கூடிய மோட்டார் வாகனங்கள் ( பைக், கார் ) வந்து விட்டது. காற்றாய் பறக்கக்கூடியது என்பதை விட காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கக் கூடியது என்றால் மிகையாகாது அதனால் தான் அதில் கரணம் தப்பினால் மரணம் என்றாகி விடுகிறது கை, கால்கள் மட்டும் உடைந்து உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பது இதில் மிகக் குறைவு.
அன்றுக் கூட ஒட்டகம் எவ்வளவு வேகத்தில் போய் விழுந்தாலும் அதில் பயணிப்பவர்களுக்கு மரணம் என்ற நிலை உருவாவதுக் குறைவு காயங்களுடன் அல்லது பலத்த காயங்களுடன் தப்பித்துக் கொள்வர் அவ்வாறிருந்தும் அதையே இறைதூதர்(ஸல்) அவர்கள் கேட்டைத் தரும் வேகம் என்றுக்கூறிக் கண்டித்துள்ளார்கள் என்றால் அந்த உபதேசத்தை கரணம் தப்பினால் மரணத்தை ஏற்படுத்தும் என்ற இன்றைய மோட்டார் வாகனங்களில் பயணிப்போர் எடுத்துக் கொள்ளக் கூடாதா ?
வாகணத்தில் ஏறி உட்கார்ந்ததும் பின் சீட்டில் யார் அமர்ந்திருக்கிறார் என்ற நினைவே இல்லாமல் விரட்ட வேண்டும் என்பதையும், முன்னால் போகின்ற வாகனத்தை முந்த வேண்டும் என்பதையும் லட்சியமாக(?) கொண்டே வாகணத்தை ஓட்டுகின்றனர் இதனால் தான் விபத்து ஏற்படுகிறது.
பாட்டுடன் கூடிய வேகம்.
பாட்டு வந்து விட்டாலே கூடவே கண் மூடித் தனமான ஒரு வேகமும் வந்து விடுவது இயல்பு.
அன்று அன்ஜஷாவும் ஸஹாபிப் பெண்கள் அமர்ந்திருந்த ஒட்டக்ததை விரட்டும் போதுக் கூடவே பாட்டும் பாடினார்.
இந்த இரண்டையும் கண்டு தான் இறைதூதர்(ஸல்) அவர்களுக்கு கோபம் மேலிட்டு இது உனக்கு கேடு தான் என்று எச்சரித்தார்கள்.
இறைதூதர்(ஸல்) அவர்கள் எதைக் கேடு என்றுப் பயணத்தில் கூறித் தடுத்தார்களோ அது இன்று நம்முடையப் பயணங்களில் தாராளமாக ஊடுருவி விட்டது.
அன்று அன்ஜஷா பாடினார் இன்று ஸ்டீரியோப் பாடுகிறது, அன்று பாட்டைக்கேட்டு ஒட்டகம் வேகமாக ஓடியது இன்று பாட்டைக்கேட்டு ஓட்டுனர் வாகனத்தை விரட்டுகிறார்.
பேரூந்துகளில் பாடல்களை அலற விட்டு பயணிகளை வா! வா! என்று அழைக்கும் அளவுக்கு பயணிகளின் கவனத்தை ஈர்த்து விட்டது ஸ்டீரியோ.
தனியார்களின் மினி வாகணங்களிலும் இதே நிலை தான் தொடருகிறது வாகணத்தை ஸ்டார்ட் செய்ததும் அடுத்து நேராக கை ஸ்டீரியோவுக்குத்தான் செல்கிறது இதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்த உடன் ஓதக்கூடிய சுப்ஹானல்லதி... இறைவா! இந்தப் பயணத்தை எங்களுக்கு இலகுவாக்கு... என்ற துஆவை ஓத மறந்து விடுகின்றனர்.
உயரமான மேடுகளில், பள்ளத்தாக்கானப் பகுதிகளில், அபாயகரமான வளைவுகளில் வாகனம் செல்லும் போது தக்பீர் கூற மறந்து விடுகின்றனர் மறந்து விடும் அளவுக்கு பாடல்கள் மெய் மறக்கச் செய்து விடுகின்றன. அதனால் அல்லாஹ்வும் அவர்களை மறந்து விடுகிறான்.
இதனால் எண்ணிப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கோர விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. இது போன்ற விபத்தில் ஒருவருக்கு உயிர் பிரியும் நிலை ஏற்படும் போது போது மஹா மோசமான கருத்துக்களை உள்ளடக்கிய கொச்சையான பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும், ரூஹ் பிரிந்து கொண்டே இருக்கும். ( இதிலிருந்தும் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் காக்க வேண்டும் )
கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் மிதமிஞ்சிய வேகம்.
நேருக்கு நேர் மோதுவது மட்டும் விபத்தல்ல கடுமையான வேகத்தில் விரட்டிக் கொண்டு செல்லும் போது கல்,முள் குத்தி டயர் பஞ்சர் ஆகி அசுர வேகத்தில் காற்று டயரிலிருந்து வெளியேறி விட்டாலும் அல்லது எதாவது ஒருப் பிராணி குறுக்கிட்டு விட்டாலும் வாகனம் படு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது ப்ரேக்கை ஓங்கி அழுத்தினால் அது வாகனத்தை அதே வேகத்தில் புரட்டி விடுகிறது.
மிதமான வேகமாக இருந்தால் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படும் போது ப்ரேக்கை அழுத்தினால் அது அழுத்திய இடத்தில் நச்சென்று நின்று கொள்ளும் இதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம் அதையும் மீறினால் சிறு காயங்களுடன் பிழைத்துக் கொள்ளலாம். இறைதூதர்(ஸல்) அவர்கள் கூறியதைப்போன்று கண்ணாடிக் குடுவைகள் உடைந்து நொறுங்குவதைப் போன்று ஆகாது.
இதனால் தான் அண்ணல் அவர்கள் சமுதயாத்திற்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கக் கூடிய இந்த செயலை செய்த அன்ஜஷாவை நோக்கி இது உனக்கு கேடு தான் என்று கடுமையான கோபத்துடன் கூறி கண்டித்துப் பாட்டை நிருத்தி வேகத்தைக் குறைக்கச் செய்தார்கள்.
நாளிதழ்களைப் புரட்டினால், தொலைகாட்சிகளைத் திறந்தால் வாகன விபத்து மூலம் இரண்டு பேர் மரணம், மூன்று பேர் மரணம், மொத்த குடும்பமும் மரணம் என்ற செய்திகள் வராத நாளே இல்லை எனலாம். அந்தளவுக்கு தினந்தோறும் மலிந்து விட்டது வாகன விபத்துகள். இந்த விபத்துகளின் பிண்ணனியில் அமைந்திருப்பது அதிகமான வேகம் தான்.
ஒன்று விபத்துக்குள்ளான வாகனம் வேகமாகச் சென்றிருக்கும் அல்லது விபத்துக்குள்ளான வாகனத்தில் மோதிய வேறொரு வாகனம் வேகமாக சென்றிருக்கும் அல்லது எதாவது ஒருப் பிராணி குறுக்கே சென்றிருக்கும் ப்ரேக் அழுத்திருப்பார் வண்டிப் புரண்டிருக்கும் அல்லது மரத்தில் மோதி இருக்கும் இது அல்லாத விபத்துக்கான வேறுக் காரணங்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.
குறைவான வேகமும் இல்லாமல் அதிகமான வேகமாகவும் இல்லாமல் நடுநிலையான வேகத்தைத் தான் பயணத்தில் இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது.
மொத்தத்தில் அனைத்து செயல் பாட்டிலுமே நடுநிலையையே பேணச் சொல்கிறது இஸ்லாம் அதனால் இந்த சமுதாயத்தையே நடுநிலை சமுதாயம் என்று அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம்... 2:143.
அனைத்திற்கும் இஸ்லாத்தில் தீர்வு உண்டு 1400 வருடங்களுக்கு முன் ஒட்டகத்தில் பயணம் செய்த காலத்திலேயே வாகன வேகம் நிதானமாக இருக்க வேண்டும் வேகம் அதிகரித்தால் ஆபத்தில் முடியும் என்பதை கண்ணாடி குடுவைகள் விழுந்தால் அது என்ன மாதிரியான நிலையில் ஆகும் என்பதை விளங்கிக் கொள்ளும் விதமாக இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், செயல் முறையில் செய்தும் காட்டினார்கள்.
இறைவன் தன் தூதரை 23 வருடங்கள் மக்களோடு மக்களாக வாழச்செய்து உலகம் முடியும் காலம் வரை மனித சமுதாயத்திற்கு எது தேவை, எது தேவை இல்லை. எது சிறந்தது, எது ஆபத்தானது ? என்பதை விளக்கிப் பாடம் நடத்தச் செய்த வல்லோன் அல்லாஹ் மேன்மை மிக்கவன்.
தற்கொலைக்கு சமமானது.
உயிர் விலை மதிப்பற்றது இறைவனுடைய உத்தரவு கிடைத்து மலக்குல் மௌத்து (உயிரை கைப் பற்றும் வானவர்) நம்முடைய உயிரை எடுக்கும் வரை நம்முடைய உயிர் பிரிவதற்கு எந்த வகையிலும் நாமேக் காரணமாகி விடக் கூடாது.
நாமேக் காரணமாகிவிட்டால் இது தற்கொலைக்கு ஒப்பானதாகி விடலாம். ( இதிலிருந்தும் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் காக்க வேண்டும் ).
வாகனத்தை ஸ்டார்ட் செய்த உடன் பயண துஆவை ஓத வேண்டும் அந்த துஆவில் பயணக் காலங்களில் தேவைப்படும் பாதுகாப்புக்கான ஏராளமான கோரிக்கைகள் அடங்கி இருக்கின்றன.
மேடு, பள்ளங்களில் செல்லும் பொழுது தக்பீர் கூற வேண்டும் அவ்வாறு கூறினால் அவ்விடங்களின் பேராபத்துகளிலிருந்து காப்பாற்றுவதற்கு இறைவன் போதுமானவனாகி விடுவான்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய சொந்தப் பிரச்சனைக்காக யார் மீதும் எப்பொழுதும் கோபம் கொண்டதே கிடையாது ஆனால் பிறருக்குத் துன்பம் தரக் கூடிய அல்லது ஒட்டு மொத்த சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய எந்த தீமையை யார் செய்தாலும் அண்ணல் அவர்கள் சமுதாயத்தை சீர்திருத்த வந்த தீர்க்கதரிசி என்பதால் அந்தந்த காரியங்களுக்கு தகுந்தாற்போல் கோபத்தை வெளிப்படுத்தி காரியத்தின் வீரியத்தை உணரச் செய்வார்கள்.
அதில் ஒன்று தான் பெண்களை சுமந்து கொண்டு வந்த ஒட்டகத்தை பலஹீனமானப் பெண்கள் அமரந்து வருவதைக் கூட பொருட்படுத்தாமல் பாட்டுப் பாடிக் கொண்டுப் படு வேகத்தில் விரட்டியவர் மீது கடும் கோபம் கொண்டு உனக்கு கேடு தான் என்றக் கடுமையான வார்த்தையையும் பயன் படுத்தினார்கள்.
(பயணத்தில் ஓத வேண்டிய துஆ தனி ஃபைலில் இணைக்கப்பட்டுள்ளது.)
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
No comments:
Post a Comment