Monday, January 23, 2012

அய்யா, என் வீட்டைக் காணலே...போலீஸில் புகார் கொடுத்த அரசு ஊழியர்

புதுச்சேரி: வைகைப் புயல் வடிவேலு பட காமெடி பாணியில், புதுவையில் ஒரு அரசு ஊழியர், தனது வீட்டைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதனால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.


புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரமோகன்(58). புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் அலுவலகத்தில் டெப்போ மேலாளர். இவருக்கு கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வேகா கொல்லை கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் பண்ணைவீடு இருந்தது.


கடந்த 30ம் தேதி வீசிய தானே புயலில் இவரது கூரை வீடு சின்னாபின்னமானது. தோப்பில் 40க்கும் மேற்பட்ட பலா மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆனால், இவர் வீடு இடிந்ததை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளாததால், இவருக்கு அரசிடம் இருந்து நிவாரண உதவி கிடைக்கவில்லை. 


இதனால் அதிருப்தியடைந்த சந்திரமோகன், தனது வீட்டை காணவில்லை என காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை வாங்கிப் பார்த்த போலீஸார், இது என்ன காமெடி என்று நினைத்து புகாரைப் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.


இதையடுத்து மாவட்ட எஸ்.பி. பகலவனிடம் மனு கொடுத்துள்ளார் சந்திரமோகன். இது குறித்து அவர் கூறுகையில், எனது பண்ணை வீட்டை காணவில்லை என்று, காடாம்புலியூர் காவல்நிலையம், எஸ்.பி, கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளேன். போலீஸ் நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன் என்றார்.


எஸ்.பி. அலுவலகம் தற்போது புகாரை காடாம்புலியூர் அனுப்பி வைத்துள்ளது. எப்படி வழக்குப் பதிவு செய்வது, என்ன நடவடிக்கை எடுப்பது என்று காவல் நிலையத்தில் ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் காவலர்கள்.
thatstamil

No comments:

Post a Comment