Friday, January 20, 2012

கொலவெறி"க்கு எதிராக கொலை வாளினை எடடா.. எம்.தமிமுன் அன்சாரி





‘கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி’ என்று தமிழைப் புகழ்கிறார்கள். சீனம், அரபி, சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகளில் தமிழும் ஒன்று என பெருமை கொள்கிறோம்.

திருவள்ளுவர், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற தரமான படைப்பாளிகளைத் தந்த தமிழ்மொழிக்கு இப்போது தலைவலி ஏற்பட்டிருக்கிறது.
தனுஷ் என்ற 28 வயது நடிகர் ‘ஒய் திஸ் கொலைவெறி’ என்று பாடிய மனநோய் பாடலால் தமிழ் கூறும் நல்லுலகமே மெய் மறந்து கிடக்கிறதாம்! தமிழில் வந்த மெட்டு இப்போது அரபியில் ‘கள்ளி வல்லி’ எனும் பாடலாக அங்கும் அரங்கேற்றம் கண்டிருக்கிறது. மனநோயாளிகள் உலகெங்கும் வாழ்கிறார்கள் அல்லவா?

வள்ளுவனால் எட்ட முடியாத உயரத்தை, பாரதிதாசனால் போக முடியாத ஆழத்தை, பட்டுக்கோட்டை அழகிரியால் நெருங்க முடியாத தூரத்தை மேத்தா&வைரமுத்து போன்றவர்களால் கூட தொட முடியாத சிகரத்தை இப்போதுதான் தனுஷால் தமிழ் மொழி எட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

கஞ்சா அடித்தவன் போதையில் உளறுவதைப் போல் உள்ள ஒரு பாடலை(?) ஃபேஸ்புக் மூலம் பரப்பி உலகப் பாடலாக மாற்றிய தமிழர்களின் ரசனையை என்னவென்பது?
பாடல் எழுதுவதும், பாடுவதும், அதை ரசிப்பதும் தனிப்பட்டவர்களின் உரிமை. அதில் எப்படித் தலையிடலாம்? என சிலர் கேட்கலாம்.

சாலையில் நடப்பதும், ஓடுவதும் அவரவர் உரிமைதான். ஆனால் குடித்துவிட்டு, ஆடை களை அவிழ்த்துபோட்டு ஆடுவதை உரிமை என வேடிக்கைப் பார்க்கலாமா?
அதுபோலத்தான் இதுவும்.

இதையும் ஒரு இளைய தலைமுறையின் ரசனை என விட்டுவிடலாமே எனலாம். ஆனால் ‘ஓவர் பில்டப்’ கொடுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இலக்கணமும் இல்லாமல் இலக்கியமாகவும் இல்லாமல், புரியாத மொழிக் கலப்போடு போதையேற்றும் ஒரு பாடலுக்கு ஏன் இவ்வளவு வக்காலத்து?

இதன்மூலம் இளைய தலைமுறையின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், பொறுப்பு களும் திசைமாற்றப்படுகிறதே... அவர்களது ரசனை தரமிழக்க செய்யப்படுகிறதே... இதைப் பற்றியெல்லாம் ‘கருத்துச் சுதந்திரம்’ பேசுபவர்களின் பதில் என்ன?

இலங்கையில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாய் செத்து விழுந்தபோது ‘‘முள்ளிவாய்க்கால் மண்ணே...’’ எனத் தொடங்கும் பாடலை உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் எழுதினார். அப்பாடலை கேட்கவோ, பாராட்டவோ யாருமில்லை.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தமிழர்கள் போராடுகிறார்கள். முல்லைப் பெரியாறு உரிமைக்காக கொந்தளிக்கிறார்கள். இதற்கெல்லாம் ஆடாமல், அசையாமல் அறிவுள்ள அடிமைப்போல் செயல்படும் பிரதமர் மன்மோகன்சிங் ‘ஒய் திஸ் கொலைவெறி’ என்ற பாடலைப் பாடிய(?) தனுஷுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். அந்த ‘கஞ்சா’ பாடல் பொம்மை பிரதமரையே அசத்தி விட்டதாம்!

டிஸ்கோ, பப், கிளப் டான்ஸ் என்ற கார்ப்பரேட் சீரழிவுகள் இந்தியாவில் ஊடுருவி யதன் தாக்கமே இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்கு முக்கியக் காரணமாகும்.

‘பணம் சம்பாதிப்பதற்காகப் படிக்கவேண் டும்’ என்ற மனிதாபிமானமற்ற பணவெறி கொள்கையானது 1990க்குப் பிறகு பிறந்த இந்தியத் தலைமுறையை தவறாக வழிகெடுக் கிறது.

தறுதலைத்தனம் மிகுந்த ஒரு தலைமுறையை நவீனங்களும், முன்னேற்றங்களும் மேலும் கெடுக்கின்றன.

பாட்லா ஹவுஸ் என்கௌண்டர் பற்றியோ, மலைவாழ் மக்கள் வேட்டையாடப்படுவது பற்றியோ, வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றியோ, வட்டியால் வதைக்கப்படும் தொழிலாளர்கள் பற்றியோ, தம்மைச் சுற்றிலும் தலைவிரித்தாடும் வறுமைப் பற்றியோ கவலைப்படாத ஒரு சுயநல தலைமுறை உருவாகி வருவதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
செம்மொழி தாயகமாம் தமிழகத்தில் தமிழர்களாலேயே தமிழ்மொழி அழிக்கப்படுவது பற்றி யாராவது பேசினால்; துணிந்து கண்டித்தால் அவர்கள் எல்லாம் பிற்போக்கு சக்திகளாக விமர்சிக்கப்படுகிறார்கள்.

நாம் பிற மொழிகளை எதிர்க்கவில்லை. தாய்மொழியைக் காப்போம். பிற மொழிக ளைக் கற்போம் என்பதுதான் நமது நிலை. தாய்மொழியைக் களவாடி அழிக்க முயல்வதைத்தான் எதிர்க்கிறோம்.
தமிழ் எல்லாவற்றையும் உள்வாங்கி வளரக்கூடிய மொழி என்றும்; அதை யாராலும் அழிக்க முடியாது என்றும் வியாக்கியானம் பேசுகிறார்கள்.

தமிழ் உழைப்பாளிகளின் பொங்கல் பண்டிகை இன்று மதவழிபாட்டு பண்டிகையாக மாற்றிய நிலையில்; அது சர்க்கரைப் பொங்கலுக்கு பதில் ‘பிட்ஸா’வை பகிர்ந்துண்ணும் பண்டிகையாக சென்னையில் மாறி வருவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

சோறு, ஆணம் போன்ற அழகான தமிழ்ச் சொற்கள் இன்று காணாமல் போயுள்ளன. ‘தமிழிங்கிலிஷ்’ என்ற புதுமொழி சென்னையில் உருவாகி வருகிறது. 2000ம் வருடத்திற்குப் பிறகு பள்ளிக்கூடங்களில் படிக்கும் தமிழ் குழந்தைகள் Banana-வை வாழைப்பழம் என்று சொல்லத் தெரியாமல் தடுமாறுகின்றன.

அதை 'கொலவெறி' பாடல் ஊக்குவிப் பதால்தான் தமிழ் உணர்வாளர்கள் கொதிக் கிறார்கள். மான உணர்வு உள்ளவர்கள் கொதிக் கத்தான் செய்வார்கள்.

No comments:

Post a Comment