கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் பற்றி நமக்குத் தெரியும். அவர்கள் விண்வெளி வீராங்கனைகள்... ஆராய்ச்சியாளர்களும்கூட. அவர்களைப் போல் நாமும் விண்வெளிக்குப் போகணும், ஆராய்ச்சியில் ஈடுபடணும்னு நினைப்போம். அதற்கு என்ன படிக்கணும்?
இன்றைக்கு டி.வி. பார்க்கிறதுக்கு கேபிள் டி.வி. அல்லது டி.டி.ஹெச். தேவை. அதற்கு சிக்னல் எங்கே இருந்து வருகிறது தெரியுமா? தொலைக்காட்சி நிறுவனத்தின் தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, செயற்கைக்கோளுக்கு நிகழ்ச்சிகள் அப்-லோட் செய்யப்படுகிறது. பூமிக்கு மேல் 35-40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் செயற்கைக்கோள்... அந்த சிக்னலைப் பெற்று, நாடு முழுவதும் ஒளிபரப்புகிறது. அந்த சிக்னலை நம் வீட்டில் இருக்கும் டிடிஹெச், டிஷ் ஆன்ட்டெனா ஈர்த்து, நமக்கு டி.வி.யில் காட்சிகளைக் காட்டுகிறது.
டி.வி., செல்போன், வானிலை, கடல்வளம், எதிரி நாட்டை உளவு பார்க்க, தொலைதூர மருத்துவம் எனப் பல விஷயங்களுக்கும் செயற்கைக்கோள் தேவைப்படுகிறது. அதனால், பல நாடுகளும் செயற்கைக்கோள் தயாரிப்பில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஒரு சில நாடுகள்தான் ராக்கெட் மூலமாக அந்தச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்தை வைத்திருக்கின்றன. அந்த வரிசையில்... நம் இந்தியாவும் இருக்கிறது.
சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் விஞ்ஞானிகளுக்கு... இந்தியாவில் மட்டும் இன்றி, உலகம் முழுவதும் தேவை இருக்கிறது. எல்லோருக்கும் நன்கு தெரிந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் வேலை பார்ப்பவர்களில்... 36 சதவீதம் பேர் இந்தியர்கள். அந்த அளவுக்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு வரவேற்பு உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட, விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காகவே... மத்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் திருவனந்தபுரத்தில் இயங்கி வருகிறது, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (ஐஐஎஸ்டி) என்ற கல்வி நிறுவனம். ஆசியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்காக முதன்முறையாக அமைக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஐஐஎஸ்டி. இங்கு ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங், ஏவியானிக்ஸ், ஃபிசிக்கல் சயின்சஸ் ஆகிய பிரிவுகளில் பி.டெக். பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
இதில் சேர, 2 முடித்து இருக்க வேண்டும். 2-வில் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடம் படித்து இருக்க வேண்டும். ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்றால், பி.டெக். படிப்பில் சேரலாம்.
இங்கே, நம்மால் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படிக்க முடியுமா என்று நினைக்காதீர்கள். நுழைவுத் தேர்வுக் கட்டணம் மட்டும்தான் வாங்குகிறார்கள். டியூஷன் ஃபீஸ், தங்குமிடம், உணவு எல்லாமே இலவசம். தவிர, செமஸ்டருக்கு புத்தகம் வாங்குவதற்கும் 3000 கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு கண்டிஷன், நீங்கள் 10-க்கு 6 கிரேடுகள் வாங்கவேண்டும். அப்படி எடுக்கத் தவறினால், அடுத்த செமஸ்டருக்கு டியூஷன், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் நீங்களே கட்டவேண்டும்.
சிறப்பாகப் படித்து நீங்கள் பி.டெக். படிப்பை நான்கு வருடங்களிலேயே வெற்றிகரமாக முடித்துவிட்டால், உங்களுக்கு இந்திய விண்வெளித் துறை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலேயே (இஸ்ரோ) வேலையும் தயாராக இருக்கும். ஐந்து வருடங்கள் இங்கே கட்டாயமாக வேலை பார்க்க வேண்டும். இஸ்ரோ-வில் உங்களுக்கு வேலை கிடைக்க, ஒட்டுமொத்த கிரேடு புள்ளி 10-க்கு 6.5 இருக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஐசாட் 2012 நுழைவுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை நடக்க இருக்கிறது. சென்னை உள்பட, நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடக்கும். தேர்வுத் தாள் அப்ஜெக்டிவ் டைப்பில் இருக்கும். இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இது தவிர, பி.இ., பி.டெக். படித்தவர்களும் நேரடியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர முடியும்.
முகவரி :
The Chairman, ISAT- 2012
Indian Institute of Space Science and Technology,
Valiamala PO, Thiruvananthapuram – 695 547,
Kerala. 0471 - 2568477 / 2568478 / 2568479,
Fax : 0471 - 2568480.
isat2012@iist.ac.in
Indian Institute of Space Science and Technology,
Valiamala PO, Thiruvananthapuram – 695 547,
Kerala. 0471 - 2568477 / 2568478 / 2568479,
Fax : 0471 - 2568480.
isat2012@iist.ac.in
No comments:
Post a Comment