Tuesday, January 31, 2012

ஆட்டோ…ப்ளீஸ்

அதிகமான ஊதியத்தை பெருவதற்காக வேண்டி அமீரகம் வந்தவர்களில் நானுமொருவன். ஆனால் இன்றைய சூழல் மாறிக் கொண்டு வருகிறது. அரபு நாடுகளை விட நம் தாயகமே சிறந்தது என்ற நிலை வளர்ந்து வருகிறது.காரணம் விலை ஏற்றங்கள். விலைகள் ஏறக்கூடிய அளவு பலருக்கு சம்பளம் ஏறுவதில்லை. வந்தக் காலத்தை கணக்கிலெடுத்தால் கையில் மிஞ்சிய தொகை கடனாக இருக்கிறது.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது நம் நாட்டில் நம்மால் வாழமுடியுமா? என்ற கேள்வி என்னுல் எழுந்தது; அதை தெளிவு படுத்தியது ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் நடந்த உரையாடல்.

இரண்டாண்டுகளுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். மூன்று தினங்கள் சென்னையில் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. T நகர் செல்வதற்கு ஆட்டோவை அமர்த்திக் கொண்டேன்.

ஆட்டோ ஓட்டுனர் சுமார் 45 வயதுமிக்கவராக தோற்றமளித்தார். 
அவரிடம் 'உங்க பொழப்பு எப்படி இருக்கு?' என்று பேச்சுக் கொடுத்தேன். 
"நன்றாக இருக்குது சார்; வீட்டுக்கு போய் மூன்று தினங்கள் ஆச்சு; கோயிலுக்கு போகனும் பெரிய சிலவாக இருக்கு, அதனால வீட்டுக்கு போகாமல் வேலைப் பார்க்கிறேன்" என்றார்.

'உங்க வீடு எங்கிருக்கு' என்றேன்? 
'அம்பத்தூர் பக்கத்துல சார்; என்றார் . 
"அம்பத்தூர் தூரமில்லையே; பக்கத்துல தானே இருக்கீங்க தினமும் போய் வரலாம் தானே" என்றேன். 
"போகலாம் சார் வீட்டுக்கு போயிட்டா நேரம் எடுத்துடும் அதனால இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு போவேன்" என்றார்.

"எத்தனை பிள்ளைகள்?' கேட்டேன்.
"மூனு பொட்ட புள்ளைங்க; பெருசு காலேஜ் போகுது மற்ற ரெண்டும் இங்கிலீஸ் மீடியத்துல படிக்குதுங்க" என்று அவர் கூறியதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

'நீங்க என்ன படிச்சுருக்கீங்க?'

"பெருசா ஒன்னும் படிக்கல அதனால தான் என் பிள்ளைங்கல நல்லா படிக்க வைக்கிறேன்" என்றார்.

'படிப்பு சிலவே பெரிய தொகை வருமே எப்படி சமாளிக்கிறீங்க?'

"ஆமா சார்! சிலவு அதிகம் தான் அதனால தான் இரண்டு மூனுநாளு கண்விழிச்சி ஆட்டோ ஓட்டுறேன் கிடைக்கிது சார்" என்றார்.

"இப்படி ஓய்வில்லாமல் ஆட்டோ ஓட்டினா உங்க உடம்பு பாதிக்குமே ரெஸ்ட்டும் தேவைதானே" என்றேன்.

"கஸ்டமர் இல்லாத சமயத்துல எங்கனயாவது ஓரமா வண்டிய நிறுத்தி தூங்கிக்குவேன்: என்றார்.

'வீடு வாடகை எவ்வளவு கொடுக்குறீங்க.?'

"சொந்த வீடு சார் என்றார். நான் மெட்ராஸ் வந்து இருபது வருடம் ஆச்சு வந்தப்ப வாடகைவீட்டுலதான் இருந்தேன் 15 வருசத்துக்கு முன்னால இடம் வாங்கி வீடு கட்டிட்டேன்" என்றார்.

'வேற ஏதும் தொழில் பண்றீங்களா?'

"இல்ல சார் நமக்கு தெரிஞ்சது ஆட்டோ மட்டும்தான்" என்றார்.
"ஆட்டோ ஒட்டி இவ்வளவு சம்பாதிக்கிறீங்களா?ஆச்சரியமா இருக்கு சார்… எப்படி இது உங்களால முடியுது . வெளிநாட்டுல 20 வருசத்துக்கு மேல இருந்தும் முக்கி முக்கி ஒரு வீட்டை கட்டுவதற்கு எவ்வளவு கஸ்டப்படுறாங்க கடனாளியா இருக்காங்க நீங்க சொலறத என்னால நம்ப முடியல சார்" என்றேன்.

"என்ன சார் நம்பிக்கை! மெட்ராசுக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேரு வராங்க, போறாங்க தெரியுமா? இப்ப இருக்குற ஆட்டோ மாதிரி இன்னொரு மடங்கு தேவை இருக்கு; எங்கேயும் ஆட்டோ சும்மா நின்னு நீங்க பார்க்க முடியாது. அப்படி நின்னா அது ரிப்பேருலதான் நிக்கும். மனுஷங்கிட்ட நேர்மையும், வைராக்கியம் இருந்தா எப்படியும் முன்னுக்கு வரலாம் சார்." என்றார்

அவருடைய அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது .
உண்மைதான் மனுஷனிடம் நேர்மையும், வைராக்கியமும் இருக்க வேண்டும் அது இல்லாத போது வாழ்க்கையே நேர்மை இழந்து விடும்.

ஆட்டோ ஓட்டக் கூடிய ஒருவரால் தன் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க முடிகிறது, தன் குடும்பத்தை சொந்த வீட்டில் வாழவைக்க முடிகிறது, தேவைகளை நிறைவேற்ற முடிகிறது, இத்தனையும் நம் நாட்டில் உழைத்து செய்யமுடிகிறது என்றால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தளவு வளர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

வளைகுடாவில் உழைத்து வளமிக்கவர்களாக ஆனவர்கள் சிலர். ஆனால் இன்னும் வளமோடு வாழ்ந்துவிடலாம் என்ற கனவில் உழைக்கக் கூடியவர்களில் நானும் ஒருவன். 
பல ஆண்டுகளை கடந்து பிழைப்புக்காக வாழ்க்கையை இழந்து இன்னும் வீடு கட்ட முடியாதவர்கள் எத்தனைபேர்? உழைப்பு என்பது வளைகுடா நாட்டுக்கு மட்டும் சொந்தமானதா? அந்த உழைப்பை நம் நாட்டில் மூலதனமாக்கினால் முன்னேற்றம் காண முடியாதா? 
நம் நாட்டில் உழைத்து வளமான வாழ்க்கை வாழ முடியுமா ? என்ற கேள்வி என்னுல் எழும்போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனரை நினைத்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment