நீங்கள் இப்போது நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? உங்கள் நாற்காலியை இறுகப்பிடித்துக்கொண்டு ஒரு பெருமூச்சு விடுங்கள். இந்த நேரத்தில் (4 வினாடிகள்) நீங்கள் 100 கிலோ மீட்டர் தாண்டி விட்டீர்கள். மீண்டும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விடுங்கள். இப்போது மேலும் 100 கிலோ மீட்டர் தூரம் தாண்டிவிட்டீர்கள். இது உண்மை.
நாம் வசிக்கும் இப்பூமி சூரியனைச் சுற்றி வினாடிக்கு (per second) 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமி இந்த குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதனால்தான் சூரியனின் பயங்கரமான ஈர்ப்பு சக்தியினால் இழுக்கப்பட்டுச் சூரியனுடன் மோதி அழிந்து விடாமலிருக்கிறது.
இதைவிட சற்றுக் குறைந்த வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனால் இழுக்கப்பட்டு எரிந்து விடும். இதைவிட சற்று அதிக வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனைவிட்டு அதிக தூரம் விலகிப்போய் மிகவும் குளிர்ந்து விடும். விறைத்துச் சாகவேண்டியதுதான் (பனிக்கட்டி மூடிவிடுவதினால்).
ஆகவே, பூமி சுற்றும் வேகம் சிறிது மாறினால் கூட போதும். பூமியின் மீது எந்த ஜீவராசியும் (தாவரம், மிருகம், மனிதர்) உயிர் வாழவே முடியாது. இவ்விதமாகவே இப்பூமி இவ்வித இரண்டு பயங்கர ஆபத்தான நிலைமைகளுக்கு இடையே மயிரிழையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நம்மால் பிரயாணம் பண்ணக் கூடுமானால், நாம் ஐந்தரை நிமிட வேகத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்தையோ அல்லது தென் துருவத்தையோ அடைந்துவிடலாம். ஆனாலும் அப்பிரயாணம் அலுப்பு மிக்கதாகவும், சலிப்புடையதாகவும் இருக்கும்.
ஏன் தெரியுமா? அவ்வளவு வேகத்தில் செல்லும்போது நம் கண்களால் எதையுமே பார்க்க முடியாது. பார்த்தாலும் எல்லாமே மிகவும் மங்கலாகவும், அதிவேகமாகவும் ஓடுபவையாகவும் காணப்படும். சாதாரணமாக இப்பூமியின் மீது நாம் எங்கேனும் பிரயாணம் செய்யும்போது, நாம் கடந்து செல்கின்ற பொருட்களைக் கொண்டுதான் நாம் பிரயாணம் செய்யும் வண்டியின் வேகத்தையும், அசைவையும் நம்மால் அறிய முடிகிறது.
நாம் தொடர்ந்து செய்யும் விண்வெளிப் பிரயாணத்தைக் குறித்த உணர்வு நமக்கு ஏன் இல்லாமல் இருக்கிறது என்பது இதிலிருந்து நமக்கு புரிகிறதல்லவா? இந்த பூமி எப்போதுமே இப்படித்தான் தொடர்ந்து அண்டவெளியில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment