Wednesday, February 15, 2012

லிட்டருக்கு 65 கிமீ செல்லும் குட்டிக் கார்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு






To Go Car

பெட்ரோலில் லிட்டருக்கு 65 கிலோமீட்டரும், எல்பிஜியில் ஒரு கிலோவுக்கு 110 கிமீ செல்லும் புதிய குட்டிக் காரை தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
எகிறி வரும் எரிபொருட்களின் விலையால் அதிக மைலேஜ் தரும் வாகனங்களை களமிறக்குவதில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. மேலும், கூடுதல் மைலேஜ் தரும் கார்களை தயாரிப்பதற்காக அந்த நிறுவனங்கள் கோடி கோடியாய் கொட்டி ஆராய்ச்சி செய்து வருகின்றன.


இதனால், கூடுதல் மைலேஜ் தரும் கார்களுக்கு மார்க்கெட்டில் தனி மரியாதை இருப்பதுடன் விலையும் அதி்கம். ஆனால், தஞ்சையிலுள்ள பிரிஸ்ட் எஞ்சினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர் குழு ஒன்று வெறும் ரூ.35,000ல் அதிக மைலேஜ் தரும் புதிய நானோ காரை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.


தரங்கம்பாடி ஹைடெக் புராஜெக்ட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து, தஞ்சை பிரிஸ்ட் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் இந்த குட்டிக் காரை வடிவமைத்துள்ளனர்.


டுகோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காரில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வசதிகொண்டது. இந்த புதிய காரில் 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மைலேஜ் தர வேண்டும், மைலேஜ் தர வேண்டும் என்று மூலைக்கு மூலை நின்று புலம்பும் இன்றைய சூழ்நிலையில், இந்த கார் லிட்டர்க்கு 65 கிமீ மைலேஜ் தருகிறது.


இந்த டு கோ காரில் பெட்ரோல் மற்றும் எல்பிஜியில் இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், எல்பிஜியில் இயங்கும்போது ஒரு கிலோவுக்கு 110 கிமீ மைலேஜ் தருவதாக இந்த காரை வடிவமைத்த மாணவர்கள் கூறுகின்றனர்.


5 கியர் கொண்ட இந்த கார் பாதுகாப்பு கருதி அதிகபட்சம் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லாதவாறு இந்த காரின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் இந்த கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சாலையில் றெக்கை கட்டாமல் பறந்த இந்த கார் சாலையில் சென்ற அனைவரையும் வெகுவாகவே கவர்ந்தது. டூ வீலரை விட குறைவான விலையில் இந்த காரை வடிவமைத்துள்ள மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

Tnks Thatstamil

No comments:

Post a Comment