மத்தியப் பிரதேசம் குரேஷி இனத்தவர் அதிகம் உள்ள மாநிலம். இவர்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். பல ஊர்களுக்கு அலைந்து திரிந்து கால்நடைகளை வாங்கி அவற்றை இறைச்சிக்கூடங்களுக்கு விற்பதுதான் இவர்களின் தொழில். கடந்த டிசம்பர் 31 அன்று அனிஸ் அஸ்லம் குரேஷி என்ற வாலிபர் சந்தை யிலே மாடு வாங்கி அதை வேறு ஒரு வியாபாரியிடம் விற்பதற்காக தன் `பொலிரோ’ வாகனத்தில் ஏற்றி ஓட்டிச் சென்ற போது, சாரங்பிகாரி என்ற இடத்திலே `பஜ்ரங்தள்’ குண்டர்களால் வழிமறிக்கப்பட்டார். அவர்கள் புத்தாண்டு கொண்டாட ரூ.20 ஆயிரம் பணம் தர வேண்டும் எனவும், இல்லையெனில் மாட்டை கொண்டு செல்ல அனுமதிக்லி முடியாது எனவும் குரேஷியிடம் தகராறு செய்துள்ளனர். இதற்கு மறுத்த குரேஷி கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. அவரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் அடித்து இழுத்துச் சென்று அருகிலிருந்த கிராமத்தின் நடுவில் ஒரு கம்பத்திலே கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அவரி டமிருந்த ரூ.8.315/- ஒரு செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை குண்டர்கள் பறித்துக் கொண்டனர். அத்துடன் நில்லாமல் அவருடைய தலை மற்றும் மீசையை பாதி மட்டும் மழித்து எடுத்துள்ளனர். ஒரு பக்கம் புருவத்தையும் மழித்து எடுத்துள்ளனர். பின்னர் அவரை அடித்து இழுத்துக் கொண்டு தெருத் தெருவாக ஊர்வலம் போயுள்ளனர்.
விவரம் அறிந்து `விரைந்து’ வந்த போலீஸ்காரர்கள் அவரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவரை தாக்கியவர்களில் சிலரை மட்டும் கைது செய்து உடனே ஜாமீனில் விடுதலை செய்த போலீஸ், அடிபட்டு குற்றுயிராக கிடந்த குரேஷி மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கொன்றை பதிவு செய்து சிறையில் அடைத்தது. குரேஷி செய்த தவறு என்ன? `பசுவதை தடை சட்டத்தை’ மீறி விட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு.
பசுவதை தடைச் சட்டம்
மத்தியப்பிரதேச மாநில அரசு புதிதாக பசுவதை தடைச் சட்டத்தை நிறைவேற்றி அது குடியரசு தலைவரின் ஒப்புதலை 22-12-2011அன்று பெற்றுள்ளது. இதன்படி, பசுவை இறைச்சிக்காக அறுப்பது மட்டுமே குற்றமல்ல. அறுப்பதற்காக விற்றாலும், வாங்கினாலும், வாகனத்தில் ஏற்றிச் சென்றாலும், வெளி மாநிலங்களுக்கு எடுத்துச்சென்றாலும் குற்றமே. இக் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.
இந்த சட்டப்படி கடைநிலை போலீஸ் கான்ஸ்டபிள் கூட எந்த ஒரு இடத்திலும் நுழைந்து சோதனை செய்யலாம். பறிமுதல் செய்யலாம், கைதுசெய்யலாம். சட்டத்தை மீறுவதாக வெறும் சந்தேகத்தின் பேரிலே கைதுசெய்யும் அதிகாரம் போலீசுக்கு உண்டு.
வழக்கு விசாரணையிலே குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிதான் என்பதற்கு போலீஸ் ஆதாரங்களை தாக்கல் செய்து நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. குற்றம் சாட்டப்பட்டவர், தான் நிரபராதி என்பதை அவரே நிரூபிக்க வேண்டும். கடந்த காலங்களிலே பேயாட்டம் போட்ட தடா, பொடா சட்டங்களிலும்கூட இதுபோன்ற விதி இருந்ததால்தான் அவை குற்றவியல் நடைமுறை சட்டங்களுக்கு ஒவ்வாத சட்டங்கள் என மக்கள் போராட்டத்தின் மூலம் தூக்கி குப்பையில் எறியப்பட்டது. ஆனால் `பசு வதை’-க்கு பொடா, தடா போன்ற கொடிய விதிகளுடன் கூடிய ஒரு சட்டத்தை மத்தியப் பிரதேச காவி அரசு நிறைவேற்றியுள்ளது
2004-ம் ஆண்டே ம.பி. மாநில அந் நாளைய முதல்வர் உமாபாரதியால் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதில் இத்துணை கொடுமையான விதிகள் இல்லை. படிப்படியாக இந்துத்துவா தன் ஆதிக்கத்தை இம் மாநிலத்திலே பரவலாக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த கறுப்பு சட்டம்.
இந்துத்துவ விரிவாக்கம்
2003-ல் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது முதல் இந்துத்துவம் விரிவாக்கப்பட்டது.
மாணவர்களின் பாடப்புத்தகங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பாடங்கள் இந்துத்துவப்படுத்தப்பட்டன. அரசு திட்டங்கள் பிரச்சாரங்கள் அனைத்தும் இந்துத்துவ பெயர்களை தாங்கி வந்தன. கல்வி அபிவிருத்தி திட்டத்திற்கு `தேவ்புத்ரா’, நீர்வள ஆதாரங்களை பெருக்கும் திட்டத்திற்கு,`ஜலா அபிஷேக்’ பெண் குழந்தைகளுக்கான திட்டத்திற்கு `லாட்லி - லஷ்மி’ - என அனைத்துக்கும் இந்து நாமகரணங்கள் சூட்டப்பட்டன.
ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார அமைப்பு என்றும் அதில் அரசு ஊழியர்கள் சேர எந்த தடையும் இல்லை எனவும் 2006-ல் அரசு உத்தரவு வெளியானது.
2007-ல் சூரிய நமஸ்காரம் பள்ளிகளில் கட்டாயமாக புகுத்தப்பட்டது. மதிய உணவின் போது கட்டாயமாக மாணவர்கள் `போஜன மந்த்ரா’ சொல்வது 2009-ல் புகுத்தப்பட்டது.
கடந்த வருடம் மாணவர்களின் பாட புத்தகங்கடீ பகவத் கீதையின் சாரம் கட்டாயமாக புகுத்தப்பட்டது. புராணங்களில் வரும் நகரங்களான `உஜ்ஜயினி’ `மஹேஷ்வர்’ ஆகியவை புனித நகரங்கள் என அரசு அறிவித்தது. மலைவாழ் மக்களின் தெய்வங்களை இந்து தெய்வங்களாக சுவீகரித்துக் கொண்டது. அரசு பல்கலைக் கழகங்களெல்லாம் சங்பரிவாரங்களின் பிரச்சார கூடங்களாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் சங்பரி வாரங்கள் நடத்தும் `ஏகல் வித்யாலயா’ பள்ளிகள் பல்கி பெருத்துள்ளன. இதன் உச்சகட்டமாக `மதமாற்ற தடை சட்டம்’ நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
`பசுவதை தடுப்பு சட்டம்’ - பசுக்களை காப்பாற்ற கொண்டு வரப்பட்டதாக யாரேனும் நினைத்தால் அது பெரிய முட்டாள்தனமாகவே முடியும். காரணம் என்ன தெரியுமா? ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான எஃப்.எ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாயத்துக்கான அமைப்பு இந்தியாவில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி மாட்டு இறைச்சிதான் என்கிறது.
ஆண்டுக்கு 26 லட்சம் டன் மாட்டிறைச்சி இந்தியாவில் உணவாக பயன்படுகிறது. ஆட்டிறைச்சி வெறும் 6 லட்சம் டன் மட்டுமே. ஒரு அமெரிக்க நிறுவனம் தன் ஆய்வில் இந்தியா 1.28 மில்லியன் டன் மாட்டிறைச்சியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறுகிறது. அந்த ஆய்வின்படி உலக நாடுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இதில் மத்தியப் பிரதேச மாநிலம்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. இதில் மிகப் பெரிய அதிர்ச்சி தரும் உண்மை என்ன தெரியுமா? போபாலில் உள்ள மிகப் பெரிய மாட்டிறைச்சி கூடங்கள் இரண்டில், ஒன்று இந்து பனியா சமூகத்தை சார்ந்தவருக்கும், இன்னொன்று ஜெயின் சமூகத்தைச் சார்ந்தவருக்கும் சொந்தமானது என்பதுதான். (செய்தி: ஆதாரம் `பிரண்ட் லைன்’ இதழ் பிப்ரவரி 11-24, 2012).
முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமே
பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பரிவர்த்தனையாகும் இந்த தொழிலில் மத்தியப்பிரதேச குரேஷி இனத்தவர் அதிக உள்ளனர். அவர்களுடன் இந்து சமூக தொழிலதிபர்கள் நேர்மையாக போட்டியிட முடியாமல் போனதால் இதுபோன்ற கறுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அரசு யார் மீது அந்த சட்டத்தை ஏவ நினைக்கிறதோ அவர்கள் மட்டுமே `குற்றவாளிகள்’ ஆக்கப்படுவார்கள் என்பது நடைமுறை. பசுவதையை தடை செய்கிறோம் என்ற பெயரில் முஸ்லிம் வியாபாரிகளை `வதம்’ செய்யும் கறுப்பு சட்டம் இது.
பசு வதைபடுவதை தடுப்பதாக கூறும் பி.ஜே.பி. அரசு, மனித உயிர்களை மிக மலிவாக மதிக்கிறது. குஜராத் மாநிலத்தில் நடந்த `வதைகளில்’ பல்லாயிரம் முஸ்லிம் உயிர்கள் மிக அநாவசியமாக பறிக்கப்பட்டதே, அதுபோன்ற மதக்கொலைகள் மீண்டும் வந்து விடாமல் இருக்க ஒரு பாதுகாப்பு கருதியே `மதக்கலவர தடை சட்டம்’ கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் மிருக வதையை எதிர்க்கும் காவிகள் மனித வதையை தடுக்கும் `மதக்கலவர தடைச்சட்டத்தை’ எதிர்க்கின்றன
மனிதர்கள்தான் மனிதர்கள் பற்றி சிந்திக்க முடியும். மிருகங்கள் மிருகங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும். ``இனம் இனத்தோடு தான்’’.
No comments:
Post a Comment