ரசின் கஜானா பெட்டியை நிரப்புவதற்குச் சாராயம்... வாக்குப் பெட்டியை நிரப்பிக்கொள்ள இலவச அரிசி என்று ஒரு சூட்சம சூத்திரத்தை உருவாக்கி, உலகத்தையே திகைப்புடன் வேடிக்கை பார்க்கவைத்த பெருமை தமிழக திராவிடக் கட்சிகளைச் சேரும்!
சாத்தானுக்கும் தேவதைக்கும் மாறி மாறி முகத்தையும் வாலையும் காட்டும் இந்த ஓட்டு அரசியல் விளையாட்டின் அடுத்த சுற்றாக, 'எலைட்' எனப்படும் சொகுசு மது அரங்குகளைத் திறந்து, குடிமக்களின் 'போதைத் தரம்' உயர்த்தப்போகிறது தமிழக அரசு. 'எலைட்' என்ற வார்த்தைக்குத்தான் எத்தனை உயர்வான பொருளைச் சொல்கிறது ஆங்கில அகராதி. நம் அரசோ, 'குடி உயரக் கோன் உயர்வான்' என்ற பண்டைத் தமிழ்ப் பாடலைக்கூட 'அதிநவீன'மாகப் புரிந்துகொண்டால் என்னதான் செய்வது!
குறிப்பிட்ட ஒரு மது உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பைக் கொள்முதல் செய்வதை தமிழக அரசு சற்றே குறைத்துக்கொண்டாலும், அந்த சர்வதேச நிறுவனமே தள்ளாடிப் போகிறது என்ற புள்ளிவிவரத்தை அண்மையில் பார்த்தபோது, வேதனையில் வயிறு எரிந்தது. தேவையா, இப்படி ஒரு பெருமை நமக்கு?
இன்னொரு பக்கம், ஏழைத் தமிழர்களின் வயிற்றுப் பசியைக் கருத்தில்கொண்டு, மக்களின் வரிப் பணத்தில் இருந்து அளிக்கப்படும் இலவச மற்றும் மானிய விலை அரிசியைக் கள்ள வியாபாரிகள் கடத்திச்சென்று வேற்று மாநிலங்களில் விற்று, கொள்ளை லாபம் பார்க்கும் அவலத்தைத் தடுக்கவும் அரசு முழுவீச்சில் கண்டிப்பு காட்டுவதாகத் தெரியவில்லை. கடத்தல் அரிசியை ரயிலில் துரத்திச் சென்ற அதிகாரி ஒருவரை, ஆந்திர மாநிலத்தில் பணயக் கைதியாகப் பிடித்துவைத்துக்கொண்ட கொடுமையை என்ன என்பது?
தமிழக அரசு தாக்கல் செய்யப்போகும் வரவு - செலவுக் கணக்கில், மது விற்பனை மூலம் கிடைத்த வருமானம் பிரமாண்டமாக இருக்கப்போகிறது. இலவசத் திட்டங்களுக்கான செலவும் அதற்கு இணையாகப் போட்டிபோடத்தான் போகிறது.
உடலை வளர்க்கப் பாடுபட்டு உழைப்பதற்கான வாய்ப்புகள்தான் தேவை இன்றைய தமிழனுக்கு. அதற்கான வழிமுறைகளை உண்டாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசே வேண்டும் நமக்கு! குடலைக் கருக்கி, அறிவைச் சுருக்கும் விலை நோக்கு வியாபாரம் இனியும் தேவை இல்லை அதற்கு!
-