தமிழ்நாட்டில் மின் வெட்டும்-மின் கட்டண உயர்வும் தேவை இல்லாமல் வருகிறது.
ஒரு பொறியாளரின் அலசல்.
கடுமையான மின்வெட்டில் சிக்கித் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் கொந்தளித்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் நெருக்கடி காலத்திற்கான அவசர உதவியாகக் கூட இந்திய அரசு தனது உடைமையாக உள்ள நெய்வேலி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க முன்வரவில்லை. இன்னொரு பக்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் விற்றுவரும் சில தனியார் நிறுவனங்கள் மின்சாரம் வழங்காமல் முடக்கிப்போட்டுள்ளன. இவற்றின் விளைவாக தமிழ்நாடு இருட்டில் அமிழ்ந் துள்ளது.
கடுமையான மின்வெட்டு இருக்கும் இந்த நிலையில் கூட மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
மின்வெட்டை நீக்கி மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கத் திராணியற்ற தமிழக அரசு 9741 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வைக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுப் போட்டுள்ளது. கேட்டால் 53,300 கோடி ரூபாய் இழப்பில் சிக்கி மின்சார வாரியம் மரணப்படுக்கையில் கிடக்கிறது என சட்ட மன்றத்தில் அறிக்கை படிக்கிறார் முதலமைச்சர் செயலலிதா.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இவ்வளவு கடன் சுமை உயர முதன்மைக் காரணம் எது? இவ்வினாவிற்கு விடையளிப்பதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக அரசு நிறுவனமாகும். மின்சார வாரியம் தனது மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்த மின்சாரம், நெய்வேலி நிறுவனம் மற்றும் இந்திய அரசு தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மின்சாரம் ஆகியவற்றை வழங்கி வந்தது. உற்பத்தி செலவை விட பெரும்பாலான மக்களுக்கு விலை குறைவாக மின்சாரம் வழங்கியதால் அது ஓரளவு இழப்பை சந்தித்தது.
ஆயினும் பெரிய நிறுவனங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் கூடுதல் கட்டணம் விதித்து பெற்ற நிதியை வீடு களுக்கும் வேளாண்மைக்கும் குறைந்த கட்டணத்திற்கு மின் சாரம் வழங்கப் பயன்படுத்திக் கொண்டது. சேவைத் துறை என்ற முறையில் ஆண்டு தோறும் ஏற்பட்ட இந்த இழப்பு 2002 ஆம் ஆண்டு 1970 கோடி ரூபாய் என்ற அளவை எட்டிய போது இத்தொகையை தமிழக அரசு மின்சார வாரியத்திற்கான கடன் பத்திரமாக மாற்றி சரி செய்தது. இந்த கடன் தொகை யையும் மின்சார வாரியம் பின்னர் அடைத்து விட்டது.
ஆனால் அதற்கு பத்தாண்டு களுக்கு முன்பு பிரதமராக பி.வி. நரசிம்மராவாவும் நிதியமைச் சராக மன்மோகன் சிங்கும் பதவி வகித்த காலத்தில் புதியப் பொரு ளாதாரக் கொள்கை என்ற பெயரில் அறிமுகப் படுத்திய தனியார்மய- தாராள மயக் கொள்கை மின்சாரத் துறையையும் தாக்கியது. மின் சாரத்துறையை தனியார் முதலா ளிகளின் கைகளுக்கு மாற்றி விடும் திட்டம் தலையெடுத்து வேக மாகப் பரவியது.
1994 ஆம் ஆண்டிற்கு பிறகு மின்சார வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங் குவதை இந்திய அரசு அனு மதிக்க வில்லை. அரசின் மின் வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டுமென்றால் நடுவண் மின்சார ஆணையத்திடம் (CENTRAL ELETRICITY AUTHORITY) முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஆணையம் அரசு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தி வந்தது. அதே நேரம் அரசின் தனியார்மயக் கொள் கை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியது. இதற்கேற்ப மின் வழங்கல் சட்டத்தில் 1994 ஆம் ஆண்டு திருத்தங்கள் செய்யப் பட்டன.
இந்திய அரசு 2003 ஆம் ஆண்டு கொண்டு வந்த மின்சாரச் சட்டம், மின்சாரக் கட்டணம் நிர்ணயிப் பது தொடர்பாக மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தை பறித்து இந்திய அரசின் கட்டுப் பாட்டில் அமைந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைத்தது. தமிழக அரசு மின் கட்டணத்தைத் தானே தீர்மா னிக்க முடியாது, தனது தேவையை இவ்வாணையத் திடம் கோரி அதன் ஆணைக் கேற்ப மின் கட்டணம் தீர்மா னிக்கப்படவேண்டும். இந்த மின்சாரச் சட்டம் மாநில அரசுகள் வழங்கி வந்த எளியோருக்கான மானியத்தை குறைக்க வேண்டு மென்று வலியுறுத்தியது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இக்கொள் கையை செயல் படுத்தும் அமைப்பாக விளங் கியது.
இந்திய அரசின் தனியார் மயக் கொள்கை, மேற்கண்ட சட்ட ஏற்பாடுகள் வழியாக மின்சாரத்துறையில் நிலை நிறுத்தப்பட்ட பிறகுதான் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு பல மடங்காக உயர்ந் தது. அரசுத் துறை நிறுவனமான மின்வாரியம் தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் முடக்கப்பட்டது. மறுபுறம் மின்சாரத் தேவைகள் மிக வேகமாக அதிகரித்தன. இதனை ஈடுகட்ட தனியார் மின் உற்பத்திக் குழுமங்களிடம் அவர் கள் சொல்லும் விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் உள்ளாக்கப் பட்டது.
பெரிதும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து காசு கொடுத்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்கும் முகமை நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் மாறிப் போனது.
தனியார் மின் உற்பத்திக¢ குழு மங்களிடம் மின்சாரம் வாங்குவதற்த் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் பெரு மளவுக்கு மின்வாரியப் பணத்தை தனியாருக்கு வாரி வழங்குவதற்கு ஏற்ற வகை யிலேயே அமைந்தது. இவற் றிடம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங் கியது மட்டுமின்றி , மின்சாரம் உற்பத்தி செய்யாமல், வழங் காமல் சும்மா இருந்த காலத் துக்கும் நிலைக்கட்டணம் என்ற பெயரால் பல நூறு கோடி ரூபாயை மின்வாரியம் கொட்டிக் கொடுத்தது. ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையம் மின் உற்பத்திக்கு அணியமாக இருப் பதாக ஒப்பந்தம் ஆகி விட் டாலே போதும், உற்பத்தி செய்யாத காலத்திற்கும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஒருகோடி ரூபாய் அந்நிறுவனத்திற்கு மின் வாரி யம் அழவேண்டும்.
எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகி லுள்ள பிள்ளைப்பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத் திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக்கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற் பத்திக் குழுமம் என்ற பெயரா லேயே பிரதாப் ரெட்டி குழுமத் தினர் அந்நிலையத்தை நிறு வினர். ரெட்டி லேப்ஸ், அப்பல் லோ மருத்துவமனை ஆகியவற் றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.
இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளை யின் அளவு புரியும்.
கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது
எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது.
இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டண மாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது.
ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக் கிறது.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்ட தாகக் கூறினார். மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப் பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடி யும்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மின்சாரத் தீர்ப் பாயமும் எவ்வாறு தனியார் நிறுவ னங்களின் கொள்ளைக் குத் துணைபோய் மின் வாரியத் தை கடன் சேற்றில் சிக்க வைக் கின்றன என்பதற்கு ஓர் எடுத் துக்காட்டைப் பார்க்கலாம்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவ னங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. தானடித்த மூப்பாக தகவல் தொழில்நுட்பக் குழுமங்களுக்கு இக்கட்டணச்சலுகையை வாரி வழங்கியது ஆணையம்.
ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத் திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது. அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப் பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணை யிட்டது.
இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது.
|
இது இப்போதைய இருண்ட தமிழகத்தின் வரைபடம்தான். |
இந்திய அரசு திணித்து தமிழக அரசு ஏற்றுக்கொண்ட தனியார்மயம் தமிழ்நாட்டு மின்சாரத்துறையில் திரும்பியப் பக்கமெல்லாம் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தனியார் நிறுவனங்களுக்கு நியாயமே இன்றி மின்உற்பத்தியும் மின் வழங்களும் இல்லாத காலத் திலும் ஆண்டுதோறும் வழங்கப் படும் நிலைக் கட்டணமான ரூபாய் 1000 கோடியை நிறுத்தி வைத்து மின்சார வாரியம் மின்உற்பத்தி நிலையங்களை நிறுவியிருந்தால் கடந்த பத் தாண்டுகளில் அரசுத் துறையில் 9000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை கூட்டி யிருக்க முடியும்.
தேவையற்ற - நியாயமற்ற தனியார் கொள்ளையை மின்சாரத் துறையில் அனுமதித்துவிட்டு அதில் ஏற்படும் இழப்பை மக்கள் தலையில் கட்டுவது எந்த வகையில் ஏற்கத்தக்கது-?
மக்களில் சிலர் நினைப்பது போல் உழவர்களுக்கு வழங்கும் விலை யில்லா மின்சாரமோ, நெச வாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த கட்டண மின் சாரமோ மின் வாரிய இழப் பிற்குக் காரணமல்ல. தனியார் கொள்ளையே காரணம்.
தமிழ்நாடு மின்சாரத் துறையை தனியார் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு அரசுத் துறையை ஓங்கச்செய்வதே தாறுமாறான மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் தப்பிப்பதற்கு உள்ள ஒரே வழி ஆகும்.
-பொறியாளர்,சா.காந்தி