Wednesday, March 14, 2012

ரூ.2.84 லட்சத்தில் கிடைத்த புற்றுநோய்க்கான மாத்திரைகள் இனி ரூ.8,880-க்கு


தினமணி தலையங்கம்:நல்லதொரு ஆரம்பம்...

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்குக் காப்புரிமை சட்டத்தின் சிறப்புச் சலுகைக்கான உத்தரவு அளிக்கப்பட்டதன் உடனடிப்பயன், ரூ.2.84 லட்சத்தில் கிடைத்த புற்றுநோய்க்கான நெக்ஸவார் மாத்திரைகள் இனி ரூ.8,880-க்குக் கிடைக்கும்.

சிறுநீரக மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்த மாத்திரைகள் ஒரு மாதத் தேவைக்கேற்ப 120 மாத்திரைகள் அடங்கிய பெட்டியாகப் பன்னாட்டு மருந்து நிறுவனமாகிய பேயர் விற்பனை செய்துவந்தது. இந்தியாவில் இதன் விலை ரூ.2.84 லட்சம்.இந்த மாத்திரை தயாரிப்புக்கான அடிப்படை மூலக்கூறு கலவைக்குப் பேயர் நிறுவனம் சர்வதேச காப்புரிமை பெற்றுள்ளது. இந்தக் காப்புரிமைக்கான காலக்கெடு முடிந்த பிறகு இத்தகைய மாத்திரைகளை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும். பேயர் நிறுவனத்தின் காப்புரிமை 2020-ம் ஆண்டு வரை உள்ளது. என்றாலும், சில ஆண்டுகள் பயன்பாட்டுக்குப் பிறகு, ஒரு நாட்டின் அரசு இதற்கான கட்டாய உரிமம் (கம்பல்சரி லைசன்ஸ்) வழங்கினால் உள்நாட்டிலேயே தயாரிக்கலாம். உலக வர்த்த அமைப்பின் அறிவுசார் காப்புரிமைகளில் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் குறிப்பிடும் விதிமுறைகளின்படி இந்திய அரசு தற்போது கட்டாய உரிமம் வழங்கியுள்ளது.

முதன்முறையாக, இந்திய காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ள இந்தக் கட்டாய உரிமத்தின் மூலம், புற்றுநோய் மாத்திரையின் விலை ரூ.2.84 லட்சத்திலிருந்து ரூ.8,880 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஆண்டுக்கு, 600 ஏழை நோயாளிகளுக்கு இந்த மாத்திரைகளை இலவசமாக அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்றுள்ள பேயர் நிறுவனத்துக்கு, இந்திய நிறுவனம் இம்மாத்திரைகளின் ஆண்டு விற்பனையில் 6% தொகையை காப்புரிமைக் கட்டணமாக 2020}ம் ஆண்டு வரை செலுத்தினால் போதும்!இவ்வளவு குறைந்த விலையில் விற்று, ஆண்டுதோறும் 600 நோயாளிகளுக்கு மருந்துகளை இலவசமாகவும் தந்து அதன் பின்னரும் லாபம் பெற முடியுமானால், இதுநாள் வரை பேயர் நிறுவனம் இந்தியர்களிடம் பெற்றுவந்த கொள்ளை லாபம் எத்தனை ஆயிரம் மடங்கு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. அறிவுசார் காப்புரிமை பெற்றுள்ள சுமார் 60 மாத்திரைகளின் காப்புரிமைக் காலம் விரைவில் காலாவதியாகவுள்ளன. இந்நிலையில் இந்த மாத்திரைகளையும் இதே அடிப்படையில், கட்டாய உரிமம் வழங்கினால், மேலும் பல உயிர் காப்பு மாத்திரைகளின் விலை மளமளவென சரியும். நோயாளிகளும், அவர்களைப் பராமரிக்கும் ரத்த உறவுகளும் நிதிச்சுமையிலிருந்து மீளுவார்கள்.இதேவேளையில், பெங்களூரைச் சேர்ந்த பயோகான் நிறுவனமும், பன்னாட்டு நிறுவனமாகிய பிஷர் நிறுவனமும் சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின்நிகர் மாத்திரைகளை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டுவிட்டன. இனி இந்த இன்சுலின்நிகர் மாத்திரைகளை பயோகான் நிறுவனமே உலகம் முழுவதும் விற்பனை செய்து கொள்ளலாம். 

பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடும்போது உள்நாட்டிலும் விலையைக் குறைக்காமல் இருக்க வேண்டிய நிர்பந்தங்கள் உண்டு. இனி பயோகான் நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இருக்காது. வெளிநாடுகளில் எத்தகைய விலையை நிர்ணயம் செய்தாலும், இந்திய சர்க்கரை நோயாளிகளுக்கு மிகக் குறைவான விலையில் இந்த மாத்திரைகளை விற்க முடியும்.காசநோய், வலிப்பு நோய், இதயம் மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மாத்திரைகள் என பல மாத்திரைகளின் விலை இன்னமும் ஏழைகளால் வாங்கக்கூடியவையாக இல்லை. இவற்றுக்குக் காப்புரிமைச் சிக்கல்கள் இல்லை என்றாலும்கூட, சிறந்த உற்பத்தி முறைகள் இல்லாத காரணத்தால்தான் இந்த மாத்திரைகளில் பலவற்றை மருத்துவ உலகம் பரிந்துரைக்கத் தயங்கியது. ஆனால், இப்போது இந்தியத் தொழில் துறை சர்வதேச அளவுக்கு உயர்ந்துள்ளது. இனியும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள்தான் சிறந்தவை என்ற எண்ணத்தை மருத்துவர்களும், நோயாளிகளும் மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் வந்தாகிவிட்டது.

மருத்துவம் சார்ந்த கருவிகள் தயாரிப்பிலும் நாம் முன்னேற வேண்டியுள்ளது. கண்புரையை அகற்றும் சிகிச்சையில் பயன்படும் செயற்கை விழிஆடி, எலும்பு முறிவுக்குப் பயன்படுத்தப்படும் உலோகத் தகடுகள், ஆஞ்சியோகிராம் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஸ்டேபிள் போன்றவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், விலை அதிகமாக உள்ள இறக்குமதி சரக்குகளைக் காட்டி, நோயாளிகளை அச்சுறுத்துகிறார்கள்.எந்த நோயாளிதான் தரம் குறைந்த பொருளை தன் உடலுக்குள் பொருத்திக்கொள்ள சம்மதிப்பார்? உள்நாட்டு தயாரிப்பும் அதற்கு இணையானது என்று தெரியும்போது, ஏன் மருத்துவர்கள் வெளிநாட்டு மோகத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்? அதிக கமிஷனைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. 

ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், கீமோதெரப்பி உள்ளிட்ட பல்வகை சிகிச்சைகளின் செலவும்கூட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களே. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் வணிகப் பிடியிலிருந்து மருத்துவ உலகம் வெளிவர வேண்டும். வெளிக்கொணரப்பட வேண்டும்.நோயாளிக்கு நல்ல சிகிச்சை அளித்தால், அவரே மருத்துவருக்குப் பணத்தை வாழ்த்துடன் அள்ளிக் கொட்டுவார். மருந்து நிறுவனங்களின் கமிஷன்களுக்கு மருத்துவர்கள் விலைபோக வேண்டிய நிலைமை ஏற்படாது என்பதை மருத்துவ உலகம் புரிந்துகொள்ளும்போதும், மத்திய அரசின் இசைவான அணுகுமுறையாலும், ஏழைகளுக்கும் நல்ல மருத்துவம், மாத்திரை சாத்தியமாகும்.

மருத்துவ நிறுவனங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவத் துறையை சேவை என்பதிலிருந்து அகற்றி ஒரு தொழில் என்கிற ரீதியில் மாற்றிவிட்டிருக்கின்றன. பல லட்சங்கள் செலவழித்து மருத்துவப் படிப்புப் படித்துவிட்டு வரும் மருத்துவர்களை அவர்களது முதலீட்டை மீட்டுத் தருவதற்கான வழிமுறைகளை ஆசைகாட்டி, நோயாளிகளைக் கசக்கிப் பிழிந்து கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவ நிறுவனங்களின் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது இந்திய அரசு. நமது பாராட்டுகள்!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=566369&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

No comments:

Post a Comment