Monday, March 26, 2012

பிரதீபா பாட்டீல்.. 12 வெளிநாட்டு டூர், 22 நாடுகளில் பயணம், செலவு ரூ. 205 கோடி!

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றது முதல் இதுவரை 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசு செலவிட்ட தொகை ரூ. 205 கோடியாகும் என்று ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

மொத்தம் 12 முறை அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளாராம். கடும் முயற்சிகளுக்குப் பின்னர் கிடைத்த ஆர்.டி.ஐ. தகவல்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் பிரதீபா பாட்டில். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நாட்டின் எந்த குடியரசுத் தலைவரும் வைத்திராத செலவை இவர் நாட்டுக்கு வைத்துள்ளார் என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார்.

இன்னும் நான்கு மாதங்களில் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள பிரதீபா பாட்டீல், இதுவரை வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட தொகை ரூ. 205 கோடியாகும். இது முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணமாகும்.

குடியரசுத் தலைவருக்கான பிரத்யேக விமானங்களுக்காக மட்டும் ரூ. 169 கோடி செலவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் போயிங் 747-400 ரக விமானத்தைத்தான் குடியரசுத் தலைவரின் பயணத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். பாட்டீலுடன் பெரும்பாலும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மொத்தமாக செல்வதுண்டு.

தங்குமிடச் செலவு, வெளிநாடுகளுக்குப் போகும் போது அங்கு உள்ளூர் பயணம், தினசரிப் படி, இதர செலவுகள் என ரூ. 36 கோடி வரை செலவாகியுள்ளதாம்.

குடியரசுத் தலைவருக்கான விமானத்தை ஏர் இந்தியாதான் வழங்கும். இந்த செலவுத் தொகையை மத்திய பாதுகாப்பு அமைச்சகமே வழங்குகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து விமான செலவாக ரூ. 169 கோடியை வசூலித்துள்ளது. இன்னும் ரூ. 16 கோடிக்கு பில் பாஸாகாமல் உள்ளதாம்.

குடியரசுத் தலைவர் இதுவரை பிரேசில், மெக்சிகோ, சிலி, பூட்டான், வியட்நாம், இந்தோனேசியா, ஸ்பெயின், போலந்து, ரஷ்யா, தஜிகிஸ்தான், இங்கிலாந்து, சைப்ரஸ், சீனா, லாவோஸ், கம்போடியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிரியா, மொரீஷியஸ், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் போயுள்ளார். மொத்தம் 79 நாட்கள் அவர் வெளிநாடுகளில் கழித்துள்ளார்.

விரைவில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்குப் போகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிந்றன.

அவருக்கு முன்பு குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், 17 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். 7 முறை சுற்றுப்பயணம் போயுள்ளார். அவருக்கு முன்பு இருந்த கே.ஆர்.நாராயணன், 10 நாடுகளில் 6 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். சங்கர் தயாள் சர்மா இருந்தபோது 4 பயணமாக 16 நாடுகளுக்குப் போய் வந்தார்.

இவர்களின் பயணச் செலவு குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை மத்திய அரசு. இருப்பினும் இவர்களுக்கு ஆன செலவை விட பல மடங்கு செலவு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பயணங்களுக்கு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
www.thatstamil.com

No comments:

Post a Comment