Sunday, March 25, 2012

சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வீழ்ந்தது; பாஜக மூழ்கிப் போனது


கடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்தவரை, வர்த்தக நோக்கு ஊடகங்கள் பொதுமையான அளவு நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸின் தோல்வி குறித்து கருத்து வெளியிடும் ஊடகங்கள் காங்கிரஸையும், பாஜகவையும் ஒரே தட்டில் வைத்தோ அல்லது காங்கிரஸை பாஜகவை விட கீழிறக்கியோ கொச்சைப்படுத்துவதைத் தொடர்கிறார்கள்.
உண்மையில், சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் நான்கில் காங்கிரஸ் தனது நிலையை மேம்படுத்தியுள்ளது என்பதே உண்மை. ஆனால் பாஜக தனது நிலையை விட்டு கீழிறங்கியுள்ளதை முடிவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் சற்றே நிம்மதியையும் திருப்தியையும் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் பல ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் சிறிய நிம்மதியைக்கூட குலைக்கும் வண்ணம் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
ஹிந்துத்துவாவின் கொள்கைகள் செம்மையாக மரண அடி வாங்கியிருக்கும் முக்கிய திருப்பம் வழக்கம்போல் மறக்கடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலின் முடிவுகள் 2014ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு சீட்டுகளைப் பெறலாம் என பாஜக கண்டிருந்த கனவுகள் கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் இட்டுச் சென்றுள்ளது.
முந்தையத் தேர்தல்களில் ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து பாரதீய ஜனதா 119சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. ஆனால் அண்மையில் 2012ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வென்ற தொகுதிகள் 113. மொத்தத்தில் 6 இடங்களை பாஜக இழந்தது. ஆனால் காங்கிரஸ், முந்தைய தேர்தல்களில் ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 133இடங்களைப் பெற்ற நிலையில் அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 133ல் இருந்து எகிறி 157 இடங்களைப் பெற்றுள்ளது.பாஜகவை விட காங்கிரஸ் 44 இடங்கள் அதிகம் பெற்றுள் ளது. ஆனால் இந்த உண்மைத் தகவல்களை மீடியாக்களும் உரைப்பதில்லை. ஒலிபெருக்கி களின் முன்பு வீர முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சாம்பியன்களும் பிரபலப்படுத்தவில்லை என்பதுதான் சோகமான நகைச்சுவை.காங்கிரஸ் கதை முடிந்துவிட்டது என நீட்டி முழக்கும் புண்ணியவான்கள் பாஜகவைப் பற்றி மூச்சே விடுவதில்லை.
உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், தலித் சமூகத்தினரின் வாக்குகளைப் பெருமளவு காங்கிரஸ் இழந்திருந்தும் கூட கடந்த தேர்தலில் பெற்ற 22 இடங்களைவிட கூடுதலாக 6இடங்களைப் பெற்றது. ஆனால் பாஜக 51ல் இருந்து 47 ஆக இறங்கியது.சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் புண்ணியத்தில் பஞ்சாபில் கூட்டணி ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருந்தாலும் பாஜக இதில் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை.2007ல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களைப் பெற்ற பாஜக, 2012ஆம் ஆண்டில் 12 இடங்களையே பெற்றது. அகாலிதளம் கடந்த தேர்தலில் பெற்ற 49 தொகுதிகளை விட அதிகமாக ஏழு இடங்களைப் பெற்று 56 இடங்களில் வென்றது. பாஜக, சிரோன்மணி அகாலிதளம் தயவில் அதிகாரத்தை சுவைக்கிறது.
அதே சமயம் 2007 தேர்தலில் 44 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் தற்போது 46 இடங்களைப் பெற்றுள்ளது. உத்தர்கண்டில் காங்கிரஸ் 2007 சட்டமன்றத் தேர்தலில் 21 இடங்களில் வென்றது. தற்போது 32 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் 35 இடங்களைப் பெற்ற பாஜக தற்போது 31 இடங்களில் வென்று நான்கு இடங்களைப் பறிகொடுத்துள்ளது.மணிப்பூரைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 60 தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் வென்ற தொகுதிகள் 30. ஆனால் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் 42 இடங்களைப் பெற்றுள்ளது.
இவ்வாறு காங்கிரஸ் பல படிகளில் உயரத்தை தொட்டிருந்தும், ஐந்து மாநில சட்டமன்ற முடிவுகளைக் குறிப்பிடும் வர்த்தக நோக்கு ஊடகங்கள் எல்லாம் காங்கிரஸை கரித்துக்கொட்டி பாஜகவை இதமாக முதுகைத் தட்டுவதன் மர்மம் என்ன?
--ஹபீபா பாலன்
 www.tmmk.info

No comments:

Post a Comment