பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் பொறுப்பை ஏற்றதிலிருந்தே சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் மார்கண்டேய கட்ஜு. ஊடகத் துறையின் மீது நடைபெறும் தாக்குதலைக் கண்டிப்பதோடு நின்றுவிடாமல், ஊடகத்துறையினர் செய்யும் தவறுகளையும் சரிசமமாக விமர்சித்து வருகிறார்.
பத்திரிகைத் துறையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் மும்பை டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமல்லாமல், காஷ்மீர் மக்கள் தினந்தோறும் அனுபவித்துவரும் கொடுமை களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக இயக்குனர் சஞ்சய் கக் என்பவர் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தார். அந்தப் படத்தின் பெயரானது ‘நாம் சுதந்திரத்தைக் கொண்டாடுவது எப்போது?’ (Jashme-e-Azadi). அந்தப் படமானது புனேயிலுள்ள சிம்போஸியம் கலைக் கல்லூரியில் வெளியிடுவதாக இருந்தது. அந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று கல்லூரி நிர்வாகத்தினரை சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பினர் மிரட்டியுள்ளனர். ஆவணப் படத்தின் மூல மாக மக்களுக்கு செய்திகளைச் சொல்லும் ஊடகவியலாளர்களை மிரட்டும் ஏ.பி.வி.பி.யினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்தப் படமும் திரையிடப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் புனேயில் உள்ள விஷ்வகர்மா கல்வி நிறுவனத்தில் நடைபெறவிருந்த கலைவிழாவும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கலை நிகழ்ச்சியில் பாகிஸ்தானிய கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பதுதான் காரணமாம். இந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி யது சிவசேனா கட்சியின் மாணவர் அமைப்பான பாரதீய வித்யார்த்தி சேனா (BVS)வினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயல் மஹாராஷ்டிராவில் தொடர்கதையாகியுள்ளது. இதைக் கண்டித்து மார்கண்டேய கட்ஜு பலமுறை மஹாராஷ்டிரா முதலமைச்சர் பிரித்விராஜ் சவானுக்கு கடிதம் எழுதியும் அவர் பதிலளிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த இந்தியப் பத்திரிக்கையாளர் மன்றத்தின் (IndiaPress Council of) தலைவர் மார்கண்டேய கட்ஜு, மாநில முதல்வருக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை (showcause notice) அனுப்பியுள்ளார். அதில், உங்கள் மாநிலத்தில் பத்திரிக்கையாளர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றும், அதைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பத்திரிக்கைச் சுதந்திரச் சட்டம் 19(1) (a)யின்படி பத்திரிக்கைச் சுதந்திரத்தை தடுத்ததற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், உங்கள் ஆட்சியை 356 சட்டவிதியின்படி கலைக்க ஜனாதிபதிக்கு ஏன் பரிந்துரைக்கக்கூடாது என்றும் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளார்.
இது சம்பந்தமாக மார்கண்டேய கட்ஜு அளித்த பேட்டியில், கடந்த பத்து ஆண்டுகளில் 800 பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 213 பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார். அரசியல்வாதிகளாலும், சமூகவிரோதிகளாலும் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது கண்டனத்திற்குரியது என்றார். பத்திரிக்கையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால்தான் அக்கிரமத்தை தட்டிக்கேட்க முன்வருவார்கள். அதேசமயம் பத்திரிக்கைத் துறையினர் செய்யும் மோசடிகளையும் களைய வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
--என்.ஏ.தைமிய்யா
www.tmmk.info
No comments:
Post a Comment