திருப்பூர்: வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அரசு கேபிள் டிவி முழுமையாக செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தை விரைவில் செயல்படுத்தவும், தேவையான இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் நிறுவவும் பல்வேறு மாவட்டங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான ஆய்வுகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஓர் அறையிலேயே அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்திட முடிவு செய்யப் பட்டது.
ஆய்வைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேபிள் டிவி தொழிலில் நிலவி வரும் தனி நபர்களின் ஆதிக்கத்தை ஒழித்திட அரசு கேபிள் டிவி கழகம் துவங்கப்பட்டது. இதன்மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்குவதே அரசின் நோக்கம்.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு கேபிள் டிவியை முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டு வர ஆய்வு நடத்தப்படுகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் எத்தனை கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது என்பது ஆய்வின் மூலம் முடிவு செய்யப்படும். கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தவுடன் மாவட்டந்தோறும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை வரவழைத்து அரசு கேபிள் டிவி வினியோகிக்கப்படும்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தைச் செயல்படுத்தும் ஆபரேட்டர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களும் குறைந்த விலையில் கேபிள் டிவி பார்க்க வழிவகை ஏற்படுத்தப்படும்," என்றார்.
Thatstamil
No comments:
Post a Comment