Wednesday, July 27, 2011

மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் விசாரணை என்ற பெயரில் வதைத்துக் கொல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மான் தடம் புரளும் புலனாய்வுத்துறை?-

ஜூலை 13ம் தேதி மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப் புகளில் 21 பேர் பலியானார்கள்; 144 பேர் படுகாயமடைந்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளான ஒபேரா ஹவுஸ், ஜாவேரி பஜார், தாதர் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை சதிகாரர்கள் நிகழ்த்தியதன் மூலம் இந்தக் கொடியவர்கள் தாங்கள் ஒரு மனிதகுல விரோதிகள், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.


இத்தகைய கொடிய செயலை செய்பவர்கள் யார்? இவர்களது பின்னணியில் இயங்கும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு சக்திகள் எவை என்பதில் வழக்கம் போலவே புலனாய்வு அமைப்புகள் திணறி வருகின்றன.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாதச் செயலை செய்தவர் கள் யார்? என்பதைக் கண்டறிய தீவிரமாக நடுநிலைமையுடன் செயல்படாமல் மீண்டும் தங்களது வழக்கமான, கீழ்த்தரமான, முட்டாள் தனமான, முன்யோ சனை யற்ற, ஒருபக்க சார்பான விசாரணையை மேற்கொண்டு நாட்டையே சர்வதேச அவமானத் தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது மகாராஷ்ட்ரா காவல் துறை.

ஃபயாஸ் உஸ்மான் என்ற 35 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் மும்பை சியான் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என குடும்பத்தினரிடம் மிகவும் துணிகரமாக சொல்லியிருக்கிறது. மகாராஷ்ட்ரா அரசு.

காவல்துறையினர் ஃபயாஸ் உஸ்மானை சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டதாக கதறுகின்றனர் அவரது உறவினர்கள்.

ஹைபர் டென்ஷனில் பாதிக்கப் பட்டு இருந்த ஃபயாஸ் உஸ்மானை அச்சுறுத்தி, உருட்டி மிரட்டியே சாகடித்துள்ளனர் பாவிகள் என குமுறுகின்றனர் ஃபயாஸின் உறவி னர்கள்.

தனது தந்தையை சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணிக்கு யூனிபார்ம் அணியாத சில மர்ம மனிதர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் அது குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் இழுத்துச் சென்றதாகவும் படு கொலை செய்யப்பட்ட ஃபயாஸ் உஸ்மானின் மகன் அஜீம் உஸ்மானி கூறுகிறார்.

ஃபயாஸ் உடல்நிலை மோச மடைந்து இருப்பதாவும் அவரை சியோன் மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும் உடனடியாக பார்க்க வருமாறும் எங்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற போது ஃபயாஸ் உஸ்மானின் இறந்த உடலைத்தான் பார்க்க முடிந்தது என வெடிக்கிறார் ஃபயாஸின் அண்டை வீட்டுக்காரர் சலீம் ஸித்தக்கி.

மூளைப் பகுதியில் நரம்புகள் வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஃபயாஸ் இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் 2008ல் நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப் புகளில் தொடர்புடையவர் என்றும் இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் உஸ்மானின் சகோதரர் அஃப்சல் உஸ்மானி தற்போது சிறையில் உள்ளார்.

இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பே போலியானது. அந்த அமைப்பை உருவாக்கியவர்கள் யாரோ பெயர் தெரியாத சில பயங்கரவாதிகளா? என்பதையே நிரூபணம் செய்ய முடியாத நிலையில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு உண்மையான தாய் தந்தை சங்பரிவார் அமைப் புகளா? அல்லது புலனாய்வு அமைப்பில் உள்ள சில விஷமம் படைத்தவர்களா? என்ற வினா நாட்டு மக்களின் மனதில் எழுந்தது. கடந்த ஆண்டு இந்திய ஆங்கில சேனல்களிலும் மேற்கூறிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஒருவரின் சகோதரரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் ஒரு அப்பாவியின் உயிரை அநியாயமாக பறித்து விட்டார்களா? என்ற கேள்வி நாடெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் உள்ளங்களில் எழுகிறது.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமேயல்லாது அப்பாவிகளை இழுத்துச் சென்று அவர்களது உயிர்போகும் வரை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துக் கூடாது என மகராஷ்ட்ர மாநில சமாஜ்வாடிக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அபூ அஸிம் ஆஸ்மி தெரிவித்தார்.

இந்தியாவின் நியூயார்க் என அழைக்கப்படும் வர்த்தகத் தலை நகரான மும்பை, இதுவரை 11 பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது. 704 உயிர்கள் பலியாகி உள்ளன. 2 ஆயிரத்து 289 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் எத்தனை பேர் அதன்பிறகு உயிரிழந்திருப்பர் என்ற விவரம் யாருக்கும் தெரியாது.

18 ஆண்டுகளாக நடைபெறும் மும்பை குண்டுவெடிப்புகளா னாலும் சரி, நாட்டில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளானாலும் சரி கடந்த ஐந்து ஆண்டுகளாக குண்டுவெடிப்பு வழக்குகளின் போக்கும், குண்டுவைப்பவர்கள் யார் என்பது குறித்த போக்கிலும் ஒரு திருப்புமுனையையும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் இந்த தேசம் சந்தித்தது.

அதுவரை இந்திய அரசும் இந்திய புலனாய்வு அமைப்புகளும் காற்றிலே சிலம்பம் விளையாடு வதைப் போன்று குருட்டுப் பூனை விட்டத்தில் தாவுவதைப் போன்று இருந்த நிலை மாறியது.

மாவீரன் ஹேமந்த கர்கரே போன்ற நெஞ்சுரம் மிக்க நேர்மையான காவல்துறை அதிகாரிகள் குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணைகளை தொடங்கிய பிறகு, சங்பரிவார் பாசிஸ பயங்கரவாதத்தின் பின்னணி ஒவ்வொரு குண்டு வெடிப்புகளிலும் பின்னணியாக இருந்து செயல்பட்டது அம்பலமாகி வருகிறது.

இரண்டு பேரை மட்டும் பலிகொண்ட அஜ்மீர் குண்டு வெடிப்பாகட்டும் ஏராள மானவர்களை பலிகொண்ட சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மாலேகான் குண்டுவெடிப்புகள் போன்றவற்றில் சங்பரிவார் பாசிஸ பயங்கரவாதிகளின் தொடர்புகள் அம்பலம் ஆன பிறகு சங்பரிவார் பயங்கரவாதிகளின் சதிச்செயல்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

பெண்சாமியார் பிரக்யாசிங் முதல் ராணுவத்தில் இருந்து கொண்டே தேசத்துரோக செயல் களை செய்த பயங்கரவாதி லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், ஆர்.எஸ்.எஸ் காரர்களால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பிரமுகர் பயங்கரவாதி சுனில் ஜோஷி போன்றவர்களின் முக்கிய தேசத்துரோக பயங்கரவாத சதிச் செயல்கள் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுவரை இந்நாட்டின் அப்பாவி களை துன்புறுத்தி சிறைப் பிடித்ததற்கு காவல்துறையும் புலனாய்வுத்துறையும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.

இனி நாட்டில் நடைபெறும் அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் இனிமேல் நியாயமான முறையில் நீதிவிசாரணை நடத்தப்படும், அப்பாவிகள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என நாட்டு மக்கள் நம்பி வந்த நிலையில்&உண்மைக் குற்றவாளிகளை தேடும் வேலையை விட்டுவிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுகிறவர்களை விட்டு விட்டு, இந்நாட்டின் பழமையான பயங்கரவாதிகளை கண்காணிப்பதை விட்டுவிட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் போக்கு மீண்டும் தொடர்வதா?

2008ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. நிலைமையை அமைதிப் படுத்துவதை விட்டுவிட்டு தொழுகைக்கு வந்தவர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆந்திர காவல்துறை.

ஏராளமான இளைஞர்களைக் கைது செய்து கொடுமைப் படுத்தியது ஆந்திர காவல்துறை; அதில் பலர் பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் தவறுதலாக கைது செய்யப்பட்ட ஹலீம் என்ற இளைஞரை ஹைதராபாத் சிறையில் கண்டு மனம் மாறினார் உண்மைக் குற்றவாளியான சுவாமி அஸீமானந்தா.

இவ்வாறு பல்வேறு நடுநிலை யான காரணங்கள் இருந்தபோதும் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை இழுத்து பிடித்து வளைக்கும் போக்கு தொடர்வது நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் ஒருவித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு குண்டுவெடிப்பு நிகழும் காலகட்டத்தையும் தீவிர மாக ஆராய்ந்து பார்த்தால் இந்தியா&பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக இருதரப்பு பேச்சுவார்த் தைகளை மேற்கொள்ளும் பொழு தெல்லாம் அதனை சீர்குலைக்கும் தீய நோக்கோடு குண்டுகளை வைக்கும் சதிகாரச் செயல் நடை பெறுகிறது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

2007ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பேச்சு நடத்தும் முன்முயற்சிகள் நடந்தன. இருநாடுகளுக்கு உறவு ஓரளவு சீர்பட்டு இந்தியா பாகிஸ்தான் இடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சென்று வந்தது. பேச்சுவார்த்தைகளையும் சீர்குலைக்க வேண்டும், இருநாட்டு உறவுக்குப் பாலமாக அமைந்து இருக்கும் சம்ஜோதா ரயிலையும் குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சம்ஜோதா தொடர்வண்டி குண்டுவைத்து சதிகாரர்களால் தகர்க்கப்பட்டது.

அதைப்போன்று 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தான்&இந்தியா இடையே உறவுக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியதோடு இரு நாடுகளுக் கிடையே போர் வெறியாக மாறியது நிஜம்.

உள்நாட்டிலும் அமைதி குலைய வேண்டும். அண்டை நாட்டு உறவையும் சீர்குலைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரிப்பதை விடுத்து அப்பாவிகளை வதைப் பது என்ன நியாயம்?

மும்பை குண்டுவெடிப்பைப் பொறுத்தவரை மகராஷ்ட்ரா காவல்துறையினர் காலகாலமாக ஒரே மாதிரியான விசாரணை பாணியையே பின்பற்றுகின்றனர்.

ஆம், தற்போது குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களை வளைத்து சித்திரவதை செய்தனர். தற்போதைய குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையிலும் ஃபயாஸ் உஸ்மான் என்ற இளைஞ ரின் உயிரே பறிக்கப்பட்டு விட்டது. மகாராஷ்ட்ரா அரசு உஸ்மானின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறது. உயிருக்கு விலை நிர்ணயித்து விட்ட நிம்மதியில் மகராஷ்ட்ர மாநில அரசு இருக்கிறது. மக்களின் மனக்குமுறல்கள் கொந்தளிப்பாக மாறினால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கும் இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் என்கிறார் ஒரு மூத்த ஊடகவியலாளர்.

ஃபயாஸ் உஸ்மானைப் போலவே மன்சர் இமாம் என்ற மற்றொரு இளைஞரை மகராஷ்ட்ரா காவல் துறை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து கைது செய்து விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் அஹமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக சிறையில் வாடும் டேனிஷ் ரியாஸ் என்பவரின் நண்பராம். தற்போது மன்சர் இமாம் கதி என்னவானது என்பது குறித்து அவரது குடும்பத்தினர் பெரும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்காக பிடித்து செல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மான் விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு விட்டார். ஜார்கண்ட் மாநிலத்தி லிருந்து மன்சர் இமாம் என்ற இளைஞர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப் பட்டுள்ளார்.

அத்தோடு பீகார் மாநிலத்தி லிருந்து ரியாவுல் சர்க்கார் என்ற இளைஞர் மகராஷ்ட்ரா காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும் குஜராத், கர்நாடக மாநிலம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்திற்கும் மகராஷ்ட்ரா காவல்துறை சென்றுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை என்ற பெயரில் இன்னும் எத்தனை இளைஞர்களின் உயிர்கள் பந்தாடப்படுமோ என்ற அச்சம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அச்சமும் விரக்தியும் நிலவுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நன்மை அளிக்க முடியாது என சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தீவிரவாதமும் பயங்கர வாதமும் வீழ்த்தப்பட உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனைகள் வழங்க வேண்டும்.
நேற்று வரை அப்பாவிகளை அச்சுறுத்தி சிறையில் அடைத்த மகராஷ்ட்ர காவல்துறை தற்போது அச்சுறுத்தி அச்சுறுத்தி உயிர்களை கருவறுக்கும் நிலைக்கு சென்றுள்ளது வெட்கக் கேடானது.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு துணிச்சலான நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.

திக்விஜய்சிங் போன்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உண்மைக் குற்றவாளியை காப் பாற்றி அப்பாவிகளை அழிக்கும் செயல் ஒடுக்கப்பட வேண்டும்.

சங்பரிவார் அமைப்புகளிடம் விசாரிக்க வேண்டும்-திக் விஜய்சிங்


சங்பரிவார் உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.  "மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம்' என, குற்றம் சாட்டினார்.: மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இந்து அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இந்து அமைப்புகளால் தான் நாட்டில் பயங்கரவாதம் பரவுகிறது. அவை வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்று செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


-ஹபிபா பாலன்

No comments:

Post a Comment