Friday, July 29, 2011

ஆக 5-க்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமச்சீர் கல்வி பாடத்திட்டப் புத்தகங்களை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுவிட வேண்டும் என உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு இன்று உத்தரவிட்டது.

திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வியை இப்போதைய ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என கடந்த 18-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும் வருகிற 22-ந்தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை நடைபெற்று வருகின்றது.

கடந்த 2 நாட்களாக அரசுத் தரப்பு வாதம் நடந்து வந்தது. அப்போது ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க இயலாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 5 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவுவிட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் வரும் செவ்வாய்கிழமை விசாரணை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
thatstamil

No comments:

Post a Comment