Monday, July 4, 2011

படகில் இருந்து தவறி விழுந்த மீனவப் பெண் மரணம்: எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

பாம்பன் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பெண் படகில் இருந்து தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தார்.  பாம்பன் சின்னபாலத்தைச் சேர்ந்தவர் லாடசாமி. இவரது மனைவி மாரி (35). இருவரும் தங்களுக்குச் சொந்தமான நாட்டுப்படகில் தினசரி காலை கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவராம்.  இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் லாடசாமி, அவரது மனைவி மாரி மற்றும் மீனவர் முனியசாமி ஆகிய மூவரும் மீன் பிடிக்க நாட்டுப் படகில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கடல் அலையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், படகு நிலை தடுமாறி உள்ளது. இதில் படகின் விளிம்பில் உட்கார்ந்திருந்த மாரி தடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார்.  பின்னர், லாடசாமியும் மற்றொரு மீனவரும் கடலில் குதித்துத் தேடினர். ஆனால், சில நிமிடங்களில் மாரியின் சடலத்தையே அவர்களால் மீட்க முடிந்தது. மாரியின் உடலுடன் மீனவர்கள் பாம்பன் கரைக்குத் திரும்பினர்.  இதுகுறித்து தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா நேரில் மாரியின் குடும்பத்திறருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். மண்டபம் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு போலீஸார் மீனவப் பெண்ணின் சடலத்தைப் பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது
http://www.tmmk.info/

No comments:

Post a Comment