Friday, July 15, 2011

நூற்றுக்கு நூறு

னசாட்சியுள்ள எந்த மனிதனும் மாரியின் சோகக் கதையைக் கேட்டால் கதிகலங்கிப் போய்விடுவான்!? அத்தனை கரடுமுரடுகளைக் கடந்து வந்திருக்கிறான் மாரி. 
மாரிச் செல்வம் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பக்கத்திலுள்ள சின்ன கிராமம் மூக்கையூர். கடல் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் மீனவ குடும்பம். தினம்  நூறு ரூபாய் கிடைத்தாலே தெய்வச் செயல். மாரியுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். பெரிய குடும்பம். அப்பா முனுசாமி என்றாவது கடலுக்குப் போவார்.

மாரியின் அம்மா சண்முகம் கரிமூட்டம் போட்டு வியாபாரம் செய்கிறார். படிப்பு நேரம் போக மாரி கரி அள்ளிப் போட்டு அம்மாவுக்கு ஒத்தாசை செய்து வருகிறான்.

இந்த நேரத்தில்தான் இடி மாரியின் தலையில் இறங்கியது. அப்பாவின் திடீர் மரணம். பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு இரண்டு மாதங்களே இருக்கும் சமயத்தில் மாரியின்  அப்பா தவறிவிட்டார். பள்ளிக்கு முழுக்கு போட்டுவிட்டு கரி அள்ளிப் போட ஊருக்கு புறப்பட்டுவிட்டான். அக்கா எவ்வளவு சொல்லியும் அவன் அம்மாவை தனியாக  கஷ்டப்பட வைக்க தயாராகயில்லை. ஓலைக் குடிசையும் ஒட்டுத்துணியுமான ஜீவனம் பிள்ளைக்கும் வந்து விட்டதை நினைத்து அம்மா சண்முகம் மனமொடிந்து போனார்.  அம்மாவின் மனதைப் புரிந்து கொண்ட மாரியின் அக்காவும் அவரது மாமாவும் மறுபடியும் பள்ளிக்கு போகச் சொல்லி அவனை முடுக்கி விட்டார்கள்.

நல்லமுறையில் நகர்ந்து கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் மறுபடியும் ஒரு இடி. பத்தாம் வகுப்பு பரீட்சையில் தமிழ், ஆங்கிலப் பாடங்கள் உட்பட தேர்வை எழுதி  முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது அக்காளுக்கு லேசான காய்ச்சல். நெஞ்சுவலிக்கிறது என்று தரையில் சாய்ந்தவர், துடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆஸ்பத்திரிக்கு  எடுத்துச் செல்லும் வழியில் மூத்த அக்காவின் உயிர் பிரிந்து விட்டது. இந்த சின்ன நெஞ்சு எத்தனை பாரத்தைதான் தாங்கும். வீட்டில் அக்காவின் சடலம். மறுநாள்  கணிதப் பரீட்சை. என்ன செய்வான் மாரி?

அக்கா சடலத்தின் தலைமாட்டிலேயே உடகார்ந்து கணக்கு புத்தகத்தில் கண்ணீர் கூடிய பாடத்தைப் பயின்றிருக்கிறான்.

பரீட்சை முடிந்த கையோடு மூட்டை முடிச்சோடு மூக்கையூர் ஊருக்கே திரும்பிவிட்டான். பரீட்சை என்று ஒன்றை எழுதிய ஞாபகமே  அவனுக்கு அற்றுப் போய்விட்டது.  ரிசல்ட் அன்று. பிள்ளைகள் எல்லோரும் கும்பலாய் வந்து மாரியை கட்டிக் கொண்டு சிரித்தார்கள். மாரிக்கு ஒன்றுமே புரியவில்லை. நடந்து முடிந்த பரீட்சையில் மாரிதான்  மாவட்டத்திலேயே ஃபர்ஸ்ட்! 490 மார்க் எடுத்து சாதித்திருந்தான்.

அக்காவின் சடலத்தை வீட்டில் வைத்துக்கொண்டு வைராக்கியமாக படித்து மாரி மறுநாள் எழுதிய கணக்குத் தேர்வில் எவ்வளவு மார்க் தெரியுமா? நூற்றுக்கு நூறு!

இத்தனைக்கு மேலும் மாரிக்கு தீராத பிரச்சினை. ஒற்றைத் தலைவலி. போதாதென்று இதயத்தில் ஏதோ ஒரு ‘வால்வ்’ அடைப்பு. அறுவை சிகிச்சை தேவை. அதற்கோ  வசதியில்லை. ஆனாலும்,  உடைந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கிறான் மாரி..

No comments:

Post a Comment