Friday, July 15, 2011

இரண்டு நாடுகளில் ரமலான் நோன்பு அனுபவம் sathyamurthy

இஸ்லாமிய நண்பர்களின் புனித ரமலான் நோன்பு துவங்கி சில தினங்கள் ஆகின்றன.
இந்த நோன்பை பற்றிய என் அனுபவமும், பார்வையும் நான் இருக்கும் இடத்தை பொறுத்து வேறு பட்டவை.  மதசார்பற்ற நாடான இந்தியாவில் வசிக்கும் போது வேறாகவும், கடந்த கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இஸ்லாமிய நாடுகளான அரபு நாடுகளில் வசிக்கும் போது வேறாகவும் எனக்கு இந்த நோன்பு அனுபவம்.
ஹிந்துவான எனக்கு இந்த அனுபவம் வேறுபடுவதுபோல், இஸ்லாமியருக்கும் இருப்பது நிச்சயம்.
என் பள்ளி நாட்களில் ரமலான் என்பது பற்றி எனக்குத் தெரிந்தது மிகக் குறைவு.  அந்த குறைவான புரிதலும் மிகப் பாமரத்தனமானது.  நோன்பின் போது சாப்பிட மாட்டார்கள், தண்ணீர் குடிக்க மாட்டார்கள், எச்சில்கூட முழுங்க மாட்டார்கள். இவ்வளவே.
மீசார்பேட்டை என்று கலோக்கியலாக அழைக்கப்படும் மீர்சாஹிப் பேட், ஜாம்பஜார், ராயப்பேட்டை (எப்போதாவது இஸ்லாமியர் இருந்திராத – ராயர்கள் நிறைந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்) போன்ற பள்ளிவாசல்களின் அருகில் உள்ள இடங்களில் இருந்து பல முஸ்லீம் மாணவர்கள் என்னுடனும், எங்கள் பள்ளியிலும் படித்தார்கள்.
மத நல்லிணக்கம் போல் எங்கள் ஹிந்து மேல்நிலை பள்ளியில் காலை வணக்கத்தில் “யாசேஹம் கருணா சிந்தோ” என்று தொடங்கும் சமஸ்க்ருத இறை வணக்கப்பாடல், பள்ளி நாட்களில் தினமும் ஒருமுறை தொடர்ந்து ஏழு வருடங்கள் கேட்டதில் அவர்களில் பலருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். (அதேபோல் ஒரு தெரு தள்ளியிருந்த கிருத்துவ பள்ளியான கெல்லட் மேல்நிலை பள்ளியில் படித்த பல ஹிந்து மாணவர்களுக்கும் கிருத்துவ மதக் கொள்கைகளும், பாடல்களும் மனப்பாடம் ஆகியிருக்கும்.).
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பு ஹிந்துஸ்தானுக்கு தெரியாவிட்டாலும் எங்கள் ஹிந்து மேல்நிலை பள்ளிக்கு தெரிந்திருக்க வேண்டும்.  இருந்த 100க்கு அதிகமான ஆசிரியர்களில் மிகப் பலர் பஞ்சக்கச்சம், குடுமி சகிதம் வேலைக்கு வருபவர்கள்.  அமாவாசையன்று, அவர்கள் மூதாதையருக்காக தர்ப்பணம் செய்துவிட்டு வேலைக்கு வர ஏதுவாக எங்கள் பள்ளி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்க இஸ்லாமிய நண்பர்களும், ஆசிரியர்களுக்கும் கூட ஒரு மணி நேரம் தாமதமாகத்தான் வகுப்பு.
ரமலான் மாதமென்றால் தினசரி வானொலியில் நாகூர் ஹனிஃபா பாட்டு கொஞ்சம் அதிகம் ஒலிபரப்பாகும் – ”இறைவனிடம் கையெந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”.
ரம்ஜான் தினத்தன்று  எங்கள் பள்ளிக்கும் விடுமுறை. திருவல்லிக்கேணி சீரணி அரங்கம், பாரதி சாலை, பீட்டர்ஸ் ரோடு அருகில் ஆயிரக் கணக்கில் இஸ்லாமியர்கள் புது ஜிப்பா, வெள்ளையில் நீலம், பச்சை கட்டம் போட்ட லுங்கி, தலைக் குல்லாயுடன் காணக் கிடைப்பார்கள்.
விவித் பாரதியிலும், ஆல் இந்தியா ரேடியோ சென்னை வாணலி நிலையத்திலும் எம்.எஸ்.வி.யின் “அல்லா! அல்லா! நீ இல்லாத இடமெயில்லை”, டி.எம்.எஸ். குரலில் “எல்லோரும் கொண்டாடுவோம்”, மு.க.முத்துவின் ”யாரும் வருவார், யாரும் தொழுவார் நாகூராண்டவன் சன்னிதியில்” ஆகிய பாடல்கள் நாள் முழுக்க இஸ்லாமிய நண்பர்கள் விரும்பிக் கேட்டு ஒலிபரப்பாகும்.
மாலை (மட்டுமே வரும்) தொலைக்காட்சியில் ரம்ஜான் பற்றிய செய்தியில் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் மெரினா கடற்கரையில் சீரணி அரங்கம் எதிரில்  synchronized-ஆக ஒரே சமயத்தில் எழுந்து, குனிந்து மீண்டும் எழுவதைக் காட்டுவார்கள்.
மாலையில் சிறப்பு ஒலியும், ஒளியும் போட்டு அதில் கண்டிப்பாக மேலே சொன்ன சிவாஜி, மு.க.முத்து பாடல்கள் போடுவார்கள்.  “அல்லா, அல்லா”பார்த்த நியாபகம் இல்லை; தலைக் குல்லாவுடன் ஜார்ஜ் கோட்டை நோக்கிய கஞ்சிக் கோப்பை தலைவர்கள்  நோன்புக் கஞ்சி குடித்த செய்திகளைப் படித்ததாகவும் நினைவு இல்லை.
இந்தியாவில் அப்போதும், இப்போதும் சிறுபான்மையினரான இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களிலும்ஹோட்டல்களிலும், சிற்றுண்டி பேருண்டி கடைகளிலும் வியாபாரம் எப்போதும் போல் நடந்து கொண்டிருக்கும்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறு, ஆறரை மணிவரை கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல், உமிழ் நீரை கூட விழுங்காமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நினைவில் நிறுத்திக்கொண்டு பார்த்தால், சுற்றிலும் உணவு புழங்குகையில் இந்த நோன்பை கடைபிடிப்பது அவர்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பது புரியும்.
இந்திய இஸ்லாமியர்கள் இந்த சிரமங்களுடனே கூட தங்கள் மதக்கோட்பாட்டை கடைபிடிப்பது அவர்களது  மன உறுதியையும், மதத்தின் மேல் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் காட்டுகிறது.  அவர்கள் மேல் மரியாதையை கூட்டுகிறது.
ரமலான் நோன்பு என்பது தன் உடல் வருத்தி ஏழை எளியவரை நினைக்க வைப்பது.  ஆண்டாள் திருப்பாவையில் ”மையிட்டெழுதோம், மலரிட்டு யாம் முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்” என்று சொன்னது போல் மனிதனை புனிதனாக்க, புற அழகை ஓரந்தள்ளி, அக அழகை அதிகரிக்க செய்ய கடைபிடிக்கும் நோன்பு என்பது புரிய வந்தது நான் வளைகுடா நாட்டில் வசிக்க தொடங்கிய பின்னரே.
ரமலான் நோன்பு ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முதல் நாள் தொடங்குகிறது.  முப்பது நாட்கள் இந்த நோன்பு.  சந்திரனை அடிப்படையாக கொண்ட வருடம் என்பதால், ரமலான் நோன்பு தொடங்கும் நாள் ஒவ்வொரு வருடமும் பத்து நாட்கள் முன் செல்கிறது.  உதாரணத்துக்கு, நான் வளைகுடாவுக்கு வேலை நிமித்தம் வந்து சேர்ந்த போது ரமலான் நோன்பு துவங்கியது நவம்பர் 7, 2002.  ஏழு வருடங்களுக்கு பின் 2009ல் ரமலான் தொடங்கியது ஆகஸ்ட் 21.  இந்த முன்னோட்டத்தினால், ஐம்பது வயதான ஒருவர் தன் வாழ்நாளில் எல்லா மாதங்களிலும் நோன்பு இருந்திருப்பார் என்பதில் இதற்கு சமூகக் காரணங்கள் தவிர மருத்துவ காரணங்களும் இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.
வயோதிகர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும்,  குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும், நோய்வாய் பட்டவருக்கும் நோன்பிலிருந்து விலக்கு உண்டு.  கர்ப்பிணி பெண்கள் மகப்பேற்றுக்கு பிறகு வேறு ஒரு மாதத்தில் நோன்பு கடைபிடிக்கலாம். -கிறார்கள்.
வளைகுடா நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகளாக அறிவித்துக் கொண்டவை.  நாட்டின் மதம் இஸ்லாம் என்றாலும் வளைகுடா நாடுகளில் மத நல்லிணக்கத்துக்கு குறைவில்லை.
ஓமன் நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கிருஷ்ணர் கோவில் உள்பட நான்கு ஹிந்து கோவில்களே இருக்கின்றன.  கோவிலிருந்து கண்ணன் காண்பது எதிரில் பாகிஸ்தானிய கான், முகமது குழந்தைகள் விளையாடும் பாகிஸ்தானிய பள்ளி.  சற்று இறங்கி நடந்தால் ஒரு தேவாலயமும் அருகிலேயே இருக்கிறது.   நான்கைந்து ஹிந்து குடும்பங்கள் ஓமானிய குடியுரிமை பெற்றுள்ளனர்.
அதே போல் துபாயிலும், பஹ்ரைனிலும் கோவில்கள் இருக்கின்றன.   இந்த வழிபாட்டு தலங்களுக்கு சிறந்த பாதுகாப்பும் கொடுக்கப்படுகிறது.   நான் தற்போது இருக்கும் குவைத்தில் ஹிந்து கோவில்கள் இல்லை.  ஆயினும், ஹிந்து கூட்டு வழிபாடுகள் பல இல்லங்களில் வார இறுதிகளில் உண்டு.  இங்கு இருக்கும் கிருத்துவர்களுக்கென தேவாலயங்களும் உண்டு.  குவைத்திய குடும்பங்களில் சில கிருத்துவ குடும்பங்களும் என்று ஒரு தகவல் உண்டு.  Christmas பண்டிகை சிறப்பாகவும் எந்த தடங்கல்கள் இல்லாமலும் கொண்டாட விடுகிறார்கள்.  அதேபோல் தீபாவளியும் – பட்டாசு சகிதம் கொண்டாட விடப்படுகிறது.
இந்தியாவில் நோன்பு கடைபிடிப்பதில் இஸ்லாமியர்களுக்கு இருக்கக்கூடிய சிரமத்துக்கு நேர் எதிர் வளைகுடா நாடுகளில்.
இங்கு ரமலான் நோன்பு மிகவும் உன்னதமாக கடைபிடிக்கப்படுகிறது.  இயல்பு வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
  • முதலில் அலுவலக நேரங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. சாதாரணமாக காலை எட்டு மணிக்கு துவங்கும் அலுவலகங்கள், அதிகாலை வரை விழித்திருந்து தொழுகைக்கு பின் ஓய்வெடுக்கும் இஸ்லாமியருக்காக ஒரு மணி நேரம் தாமதமாக துவங்குகின்றன.
  • உணவு, சிற்றுண்டிக் கடைகள் மாலை இஃப்தார் வரை மூடப்படுகின்றன
  • அலுவலகங்களில் தண்ணீர், டீ, காஃபி போன்றவை வழங்கப்படமாட்டாது
  • யாரும் நோன்பு நேரங்களில் புகை பிடிக்க அனுமதியில்லை
  • எது அருந்தி பிடிபட்டாலும் கடுமையான தண்டனை உண்டு; ஆனால் வீட்டிலும், சாத்திய கதவுக்கு பின்னே அலுவலகத்திலும் இஸ்லாமியர் அல்லாதோர் உணவு அருந்துவதை கடுமையாக பார்ப்பதில்லை.
  • புற அழகை புறந்தள்ளும் வண்ணம் ஆண்களில் அதிகம் பேர் முகச்சவரம் செய்வதில்லை, பெண்கள் ஒப்பனையை கைவிடுகிறார்கள்.
  • சாதாரணமாக வாசனை திரவியங்களை அதிகம் விரும்பும் அரேபியர்கள் ரமலான் நோன்பின் போது வாசனை திரவம் அணிவதில்லை
  • கடுமையான பேச்சையும், கோபத்தையும் அறவே தவிர்க்கிறார்கள்
  • அலுவலகங்கள் உணவு இடைவேளை தேவையில்லாமல் அந்த நேரத்திலும் வேலை செய்து சீக்கிரமே மூடுகிறார்கள்
  • எல்லோரும் அல்லாவின் கருணை எண்ணங்களுடன் இருப்பது பேச்சிலும், செயலிலும் தெரிகிறது
  • மதியம் மூன்று மணிக்குப் பிறகு எப்போதும் கார்கள் விர்ரிடும் பெரும்பாலான சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடி விடுகின்றன
  • காலை முதல் இஃப்தார் (நோன்பு திறப்பு) வரை சூப்பர் மார்க்கெட்கள் காலியாக இருக்கின்றன
  • எல்லா மசூதிகளிலும், இஃப்தார் நோன்பு திறப்பின்போது வருபவர் அனைவருக்கும் பணக்கார இஸ்லாமியர், பெரிய நிறுவனங்களின் ஆதரவில் சிறப்பான இலவச உணவு வழங்கப்படுகிறது.
  • மாலை ஒரு ஏழரை மணிக்கு பிறகு நாடு  மீண்டும் ஒருமுறை விழிக்கிறது.  நமது ஊரில் நவராத்திரி போல குடும்பங்கள் ஒருவரை ஒருவர் அழைத்து விருந்து பரிமாறிக் கொள்கின்றனர், அன்பளித்துக் கொள்கின்றனர்.
  • எட்டு மணிக்கு மேல் நள்ளிரவையும் தாண்டி எல்லா கடைகளும், கார் ஷோ ரூம்களிலும் கூட்டம் அதிகரிக்கிறது.  எல்லா பெரிய வர்த்தக நிறுவனங்களும், நம்ம ஊர் ஆடித் தள்ளுபடி போல ரமலான் சிறப்பு விற்பனைகளும், தள்ளுபடிகளும் தருகிறார்கள் (இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தள்ளுபடியில் MMS அறிவித்து Watania Mobile நிறுவனத்திடமி்ருந்து எனக்கு சிமசே வருகிறது)
இதில் ஆச்சரியமானது, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நான்கைந்து முறை தேனீர் பழகிவிட்ட நான் உள்பட என் ஹிந்து முஸ்லீம் நண்பர்கள் எவருக்கும் அந்த அவா தோன்றாமல் இருப்பது.  அதேபோல் தினமும் ஒரு பாக்கெட் கூட சிகரெட் பிடித்து அணைக்கும்  இஸ்லாமிய நண்பர்கள் ரமலான் முதல்நாளே இந்த பழக்கத்தை காலை முதல் மாலை வரை அணைப்பது. (நம்மூரில் சபரிமலைக்கு மாலை போட்டதும் சிகரெட் நிறுத்தும் சாமிமார் போல – இப்போது அவர்களும் புகைக்க ஆரம்பித்து மலையிலேயே விற்கிறார்கள் என்பது வேதனையான தனி செய்தி)
முப்பது நாட்கள் கடுந்தவம் போல் ரமலான் நோன்பு முடிந்த பிறகு அனைவரும் மிக எதிர்நோக்குவது ரமலான் விடுமுறை நாட்களை.  வளைகுடா வாழ் வேற்றுநாட்டவர் பலரும் இந்த விடுமுறை நாட்களுடன் தங்கள் விடுப்புகளை இணைத்து சுற்றுலாவும், சொந்த நாட்டுக்கும் போவார்கள்.
ரமலான் நோன்பின்போது காலை முதல் மாலை வரை பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் எதுவும் உண்ணவோ, அருந்தவோ கூடாது என்று சொன்னேன் அல்லவா. நான் முன்பு ஓமனில் வேலை பார்த்த போது நடந்த சம்பவம் இது.
எங்கள் அலுவலகம் இஸ்லாமியருக்கும், மற்றவர்களுக்கும் தனி அலுவலக நேரத்தை அறிவித்திருந்தது. இஸ்லாமியர்கள் மதியம் 2 வரை வேலை செய்து விட்டு போய்விடுவார்கள்.  நாங்கள் மதியம் ஒரு மணிவரை வேலை செய்து விட்டு பின்பு மறுபடி மாலை நான்கு மணிமுதல் ஏழு வரை வேலை செய்வோம்.
எந்த வாடிக்கையாளரோ வேறு இஸ்லாமியரோ இந்த நேரத்தில் வரமாட்டார்கள் என்ற தைரியத்துடன் நாங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டு அலுவலகத்துக்குள்ளே டீ, காஃபி அருந்துவோம்.
அப்படி ஒரு நாள் நான் என் அறையில் அமர்ந்து காஃபி வரவழைத்து உதட்டில் வைக்கும் போது என் ஓமானி மேலதிகாரி, நான் சற்றும் எதிர்பாராமல் என் அறைக்குள் நுழைந்தார்.  காஃபியும் வாயுமாக பிடிபட்டுவிட்ட எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.  வாயில் போன காஃபி தொண்டைக்கருகில் உள்ளே, வெளியே விளையாடியது. காஃபியை தொண்டையில் தேக்கி பயத்தை மட்டும் விழுங்கியபடி “சாரி சார்” என்றேன்.
“பரவாயில்லை மூர்த்தி! நோன்பு இஸ்லாமியருக்குத்தான். உங்களுக்கில்லை” என்றார்.
டயாபடீசையும், தொண்டையையும் தாண்டி காஃபி இனிப்பாக இறங்கியது.


Read more: http://www.sathyamurthy.com/2009/08/29/ramadhan-experience/#ixzz1SAwQAVbu
Under Creative Commons License: Attribution Non-Commercial

No comments:

Post a Comment