Friday, May 20, 2011

புதிய அரசிடம் எதிர்பார்ப்புகள்

திமுக அரசின் ஊழல், குடும்ப ஆதிக்கம், விலைவாசி, மின்தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்குகள் உருவாக்கிய கோபமும், அதிமுக கூட்டணி அளித்த நம்பிக்கையும், தேர்தலில் ஆழிப்பேரலையாகின. திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.

தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி, மவுனமாக நடந்தேறி இருக்கிறது.

அடாது செய்தோரை விடாது ஆதரித்தவர்களும், முறைகேடு செய்தோருக்கு முட்டுக் கொடுத்தவர்களும், சிறுபான்மையினரையும், தலித்துகளையும், அநியாயக்கார ஆட்சியாளர்களிடம் அடகுவைக்கப் பார்த்தவர்களும், வேரோடு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர்களில் ஓரிருவர் தவிர அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

புதிய அரசில் பழைய அரசின் தீமைகளின் எந்த அம்சமும் வந்துவிடக் கூடாது. இதில் முதல்வர் உறுதி காட்ட வேண்டும்.
தன் மக்கள் நலத்தை முன்னிலைப்படுத்திய ஆட்சியிலிருந்து வேறுபட, தமிழக மக்களின் நலத்தை முதன்மைப்படுத்தும் ஆட்சியாக அதிமுக ஆட்சி திகழ வேண்டும்.

‘தமிழகம் இருண்ட காலத்துக்குச் சென்றுவிட்டது, அதனை மீட்டெடுப்பது எங்களது முக்கியப் பொறுப்பு, மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்குவோம், சட்டம் ஒழுங்கை சரிசெய்வோம்’ என்று ஆளுநரை சந்தித்தபின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா கூறியுள்ளார். மிகச் சரியாகவே கூறியுள்ளார்.

• வியாபாரத் துறையில் ஊடுருவி நிற்கும் யூகபேர வணிகத்தைத் தடை செய்து, விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

• கேபிள் டி.வி. தொழில் அரசுடமையாக்கப்பட்டு, இத்தொழிலில் லாபம் அரசுக்கு வருமாறு செய்ய வேண்டும். எஸ்.சி.வி, ஆர்.சி.வி. நடத்திவரும் ஏகபோக தொலைக்காட்சி சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

• தமிழக மக்களின் உற்பத்தி ஆற்றலைப் பறிக்கும் குடிப்பழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில், பூரண மதுவிலக்கை நோக்கிப் பொலிவுடன் அடிவைக்க வேண்டும்.

• மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி நதிகளைக் காக்க வேண்டும்.

• அரசு மருத்துவமனைகளின் சேவையையும், தரத்தையும் தனியார் மருத்துவமனைகளை விஞ்சும் வகையில் உருவாக்க வேண்டும். (சென்னை அரசு பொது மருத்துவமனையை அப்படி ஆக்கிக் காட்டியவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது). இது தமிழகமெங்கும் நிகழ வேண்டும்.

• கல்வியின் பெயரால் நடக்கும் கொள்ளைகளைத் தடுக்க வேண்டும்.

• சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாத பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

• முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டு குளறுபடிகளை உடனடியாக சரிசெய்து, வாக்களித்தபடி இடஒதுக்கீட்டு அளவையும் உயர்த்தித் தரவேண்டும்.

• சிறுபான்மையினரின் மொழிகளான உருது, அரபி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை சமச்சீர் கல்வித் திட்டத்தில் புறந்தள்ளப்பட்டுள்ளன. சிறுபான்மையின மாணவர்கள் தங்களது தாய்மொழியைக் கற்க வழிவகை செய்ய வேண்டும்.
• பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

• காவல் நிலையத்திலும், அரசு அலுவலகங்களிலும் சாதாரண மக்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

• கடந்த ஆட்சியில் உச்சக்கட்டத்தைத் தொட்ட தனிமனித வழிபாடும், ஆடம்பர, அனாவசிய பாராட்டு விழாக்களும் மக்களை முகம்சுளிக்க வைத்துள்ளன.

• அரசு ஊழியர்கள் எவ்வளவு சலுகை வேண்டுமானாலும் அனுபவிக்கட்டும். ஆனால், மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை மறந்து, மக்களை அலைக்கழிப்பது ஏற்க முடியாதது. அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் பணித்திறன் அதிகரிக்கப்பட வேண்டும்.& இப்படி ஏராளமான எதிர்பார்ப்புகள் மக்கள் மனதில் மையம் கொண்டுள்ளன.

இவற்றை அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும். ‘மைனாரிட்டி அரசு’ என்று திமுக அரசை அழைத்தார் ஜெயலலிதா. இது மைனாரிட்டிகளின் நலன் காக்கும் அரசு என்று கருணாநிதி விளக்கம் கூறினார். ஆனால் மைனாரிட்டிகளின் நலன் பேணப்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்திவிட்டன. மெஜாரிட்டி அரசாக மலர்ந்துள்ள அதிமுக அரசு மைனாரிட்டிகளின் உணர்வுகளைப் புரிந்து, பரிந்து உதவ வேண்டும்.

முகலாயப் பேரரசர் பாபர் தன் மகன் ஹ§மாயூனுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘மக்களின் ஒரு பிரிவினர் மாட்டிறைச்சி உண்பதை வெறுக்கின்றனர். நாட்டை ஆளப்போகும் நீ, அவர்களின் உணர்வுகள் புண்படாதிருப்பதற்காக மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்த்துவிடு’’ என்று கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி இஸ்லாம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதில்லை. இந்தியர்களில் பெரும்பான்மையினர் உண்ணக்கூடியதுதான் என்றாலும், அதைத் தவிர்க்கும் ஒரு பிரிவினரின் மனமும் தன் மகன் ஆட்சியில் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் பாபர் காட்டிய அக்கறையைக் குறிப்பிடுவதன் நோக்கம், எதிர்காலத்தில் நரேந்திர மோடி போன்றவர்கள் தமிழகத்திற்கு அழைக்கப்படக் கூடாது என்பதற்காகவே.

மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அதிமுக அரசைத் தேர்ந்தெடுத்த மக்கள் தினமும் மகிழும் வண்ணம், செயல்பாட்டை அமைத்துக் கொள்ள மனமார வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment