Sunday, May 29, 2011

எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை குறைவு சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே


மும்பை,மே 28: அரசியலில் நிரந்தரமான நட்பும் இல்லை, பகையும் இல்லை என்பார்கள். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே (83) ஒருபடி மேலே போய், நெருக்கமானவர்கள் என்று அரசியலில் எவருமே இல்லை, இருக்க முடியாது என்கிறார்.
"அரசியலில் நெருக்கமானவர்கள் என்று யாரும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியுடன் சிவசேனைக்கு 20 ஆண்டுகளாகத் தோழமை உறவு இருக்கலாம்; அந்தக் கட்சியின் சித்தாந்தமும் எங்களுடைய சித்தாந்தமும் ஒன்று அல்ல. ஹிந்துத்துவக் கருத்துகள் சிலவற்றில் ஒற்றுமை இருக்கலாம்.
வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைமுறை தலைவர்களுடன் எனக்கு நெருக்கமான பரிச்சயம், நட்பு இருந்தது. இப்போதுள்ள தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட புதிய தலைமுறையுடன் எனக்கு நெருக்கமோ நட்போ இல்லை. ஒருவேளை என்னுடைய மகன் உத்தவ் தாக்கரேவுக்கு இவர்கள் நண்பர்களாகவோ நன்கு அறிமுகமானவர்களாகவோ இருக்கலாம்.
அரசியலில் உள்ள எல்லா கட்சிகளும் தங்களுடைய சித்தாந்தம் இதுவென்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அப்படி எதுவும் எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பதே என்னுடைய கருத்து.
அண்ணா ஹஸôரே திடீரென அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்று ஜன லோக்பால் மசோதா என்ற ஒன்றைக் கொண்டுவர முயல்வதை என்னால் ஏற்க முடியாது. நான் அரசியல் கேலிச்சித்திரங்கள் வரைந்தவன். அண்ணா ஹஸôரேவின் கோரிக்கையின் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்று எனக்குத்தெரியும்.
இதைப் போன்ற மசோதா, அமைப்புகள் மூலம் குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் அதிக அதிகாரங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகம் என்பது மக்களுக்கு அதிகாரத்தைத் தரும் அமைப்பு. எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை குறைவு. சிவாஜி மகராஜைப்போல நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்கும் - ஓரளவுக்கு - சர்வாதிகாரமான ஆட்சியை நான் ஆதரிக்கிறேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஏற்றுள்ள இந்த ஜனநாயக நடைமுறைக்கு இப்படியெல்லாம் சட்டங்களைத் திருத்துவதால் இடைஞ்சல்கள்தான் அதிகம்' என்கிறார் பால் தாக்கரே.
 
News source from Dinamani

No comments:

Post a Comment