Wednesday, May 25, 2011

சிறைக்குள் கணவர்கள்-ஷாப்பிங் போய் கலக்கும் டெலிகாம் அதிகாரிகளின் மனைவியர்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் சில தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளின் குடும்பத்தினர், இதுகுறித்து கவலை கொண்டதாகவோ, அலட்டிக் கொண்டதாகவோ தெரியவில்லை. படு ஜாலியாக, காபி சாப்பிட்டபடி, ஜோக்கடித்தபடி, ஷாப்பிங் போனபடியாக அவர்கள் டெல்லியை வலம் வந்து கொண்டுள்ளனராம்.

ஜெயிலுக்குப் போவது என்பது ஏதோ பிக்னிக் போவது போலாகி விட்டது இப்போது. முன்பெல்லாம் யாராவது சிறைக்குப் போனால் அவரது குடும்பமே இடிந்து போய் விடும். அய்யய்யோ இப்படியாகிப் போச்சே என்று உடைந்து போய் விடுவார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை போல. குறிப்பாக, பெரும் பணக்காரர்களுக்கு, மேல் தட்டு மக்களுக்கு, இதெல்லாம் ஒரு ஜாலியான விஷயமாகி விட்டதாக தெரிகிறது.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சந்தித்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக மாறி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது, டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் காணும் காட்சிகள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் சிலரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மனைவிமார்கள், குடும்பத்தார், உறவினர்கள் என ஒரு பெரிய குரூப்பே டெல்லியில் முகாமிட்டுள்ளது.

ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு இவர்கள் கடந்த ஒரு மாதமாக தங்கியுள்ளனர். கைதான அதிகாரிகள் கிட்டத்தட்ட தினசரி டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்கு விசாரணைக்காக கொண்டு வரப்படுகின்றனர். அப்போது இவர்கள் மொத்தமாக ஆஜராகி தங்களது கணவர்களையும், தந்தைமார்களையும் சந்தித்துப் பேசுகின்றனர்.

இந்த சந்திப்பும், அதிகாரிகளின் மனைவிமார்கள், குடும்பத்தினர் நடந்து கொள்ளும் முறையும் காணக் கண் கொள்ளாத காட்சியாக உள்ளதாம். அப்படி அமர்க்களமாக இருக்கிறதாம் இந்தக் காட்சிகள்.

இவர்கள் யாருடைய முகத்திலுமே வருத்தமோ, சோகமோ இல்லை. மாறாக தங்களது கணவர்களைக் கண்டதும் மனைவிமார்களின் பிரகாசமாகி விடுகின்றனர். ஹாயாக அவர்களை அணுகி பேசத் தொடங்கி விடுகின்றனர். கூட வந்த குழந்தைகள், உறவினர்களும், கைதான அதிகாரிகளிடம் ஜோக்கடித்தும், முதுகில் தட்டியும், முத்தம் கொடுத்தும் கலகலப்பாக பேசுகின்றனர்.

ஒரு அதிகாரி தான் கையோடு கொண்டு வந்திருந்த பெரிய பொக்கேவை மனைவியிடம் நீட்ட அவருக்கோ பூரிப்பு தாங்கவில்லை. ஏதோ ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் போல அவர்கள் காட்சி தந்தனர்.

இவர்கள் தினசரி கோர்ட்டுக்கு வருகின்றனர். படு கேஷுவலாக காணப்படுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கோர்ட் விசாரணை முடிந்து அனைவரும் வேனில் ஏற்றப்பட்டு சிறைக்குச் சென்றபோது அவர்களின் மனைவியரும், குடும்பத்தினரும் சந்தோஷத்துடன் டாடா காட்டினர். பின்னர் ஒரு பெண்மணி, தனது குடும்பத்தினரிடம் திரும்பி, சரி அவங்க கிளம்பிட்டாங். நாம ஒரு காபி சாப்பிட்டு விட்டு அப்படியே ஷாப்பிங் போய்ட்டு ஹோட்டலுக்குத் திரும்பலாம் என்று கூறியதைக் கேட்டு, இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்தார்கள், வியந்தார்கள்.

இதை விட ஜாலியான விஷயம் என்னவென்றால், உள்ளே விசாரணைக்காக அதிகாரிகள் போயிருக்கும்போது வெளியில் காத்துள்ள இவர்கள், சான்ட்விச், டெல்லி கான் மார்க்கெட் சந்திப்பில் விற்பனையாகும், காஸ்ட்லியான கான் சாச்சா ரோல்ஸ் ஆகியவற்றை வாயில் போட்டு நொறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். காலை உணவையும் பெரும்பாலும் இவர்கள் கோர்ட் வளாகத்திலேயே சாப்பிடுகிறார்கள். மதிய உணவும் இங்கேயேதான். கையோடு எல்லாவற்றையும் கொண்டு வந்து விடுகிறார்கள்.

சில சமயங்களில் செய்திக்காக அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருக்கும் செய்தியாளர்களுக்கும் கூட எடுத்துக்கோங்க என்று பெருந்தன்மையுடன் ஸ்னாக்ஸ் தருவதையும் காணலாம்.

காலையில் ஜாலியாக கோர்ட்டுக்கு வருகிறார்கள். அதிகாரிகளைப் பார்க்கிறார்கள். சந்தோஷிக்கிறார்கள். மதியம் சாப்பிடுகிறார்கள். மாலையில் கணவர்கள் சிறைக்குத் திரும்பியதும், ஷாப்பிங், சிட்டி ரவுண்ட் என்று என்ஜாய் செய்கிறார்கள்.

சிறைக்குப் போனவர்களை எண்ணி எண்ணி குடும்பத்தினர் கவலையில் தோய்ந்தனர் என்று சத்தியமாக யாரும் இவர்களைப் பார்த்து இனிமேல் கூற மாட்டார்கள்!

thatstamil

No comments:

Post a Comment