Wednesday, May 11, 2011

வெற்றியும், தோல்வியும் சமமே...

தமிழக மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க் கின்ற தேர்தல் முடிவுகள், இவ்விதழை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெளிவந்திருக்கலாம். இறைவன் அறிந்ததை மனிதன் அறிய முடியாது. எனவே, சமுதாயத்திற்கு நலம் பயக்கும் முடிவையே நாம் பிரார்த்திக்கிறோம். தன் மெய்யடியார்களை கண்ணியப்படுத்துவதில் ஏக இறைவனே மிகைத்தவன். பூரண அறிவைப் பொருந்தியிருப்பவன்.

அதேநேரம், முடிவுகள் எதுவாக இருப்பினும் நமது தன்மைகளும், பரிசுத்தப் பண்புகளும் மாறிவிடக்கூடாது.நமது வெற்றியை பல்வேறு ஊடகங்களும், முன்னறிவிப் புச் செய்துள்ளன. சட்டமன்றத் தேர்தலின் பிரசாரத்திலும், களப்பணிகளிலும், ம.ம.க தனி முத்திரை பதித்தது.

நமது தொண்டர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும், கூட்டணிக் கட்சியினர் பெரிதும் போற்றிப் பாராட்டினர். இறைவனுக்கே எல்லாப்புகழும்.

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் நமது மன உறுதிக்கு சோதனைக் களமாக அமைந்தன. ஆட்சியாளர்களிடம் நாம் செல்வாக்கோடு திகழ்ந்த காலத்தில் நம்மை நாடியும், தேடியும், வந்த பல வசந்த காலப் பறவைகள், போராட்ட அரசியலை நாம் தேந்த்தெடுத்தபின், வெம்மை தாளாமல் வேறிடங்களுக்குச் சிறகடித்தன. வேடம் தாங்கும் வேடந்தாங்கல் பறவை களையும், அற்ற குளமாகினும் அதைவிட்டு அகலாத, உற்றத் துணைகளையும், அந்த முடிவுகள் நமக்கு அடையாளம் காட்டின. விழுந்த போதிலும் நாம் விதைபோல விழுந்தோம். ஆலமரம்போல சுடர்ந்து எழுந்தோம். வீரமிகு தொண்டர்கள் விழுதுகளாய் நின்றனர்.

வெற்றியும் கூட ஒருவகை சோதனை தான். உலக வரலாற்றில் மகத்தான வெற்றியான மக்கா வெற்றியின் போது, இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களும், சத்தியத் தோழர்களும், இறைவனுக்கு சிரம்பணிந்தவர்களாக பணிவே உருவாக, படைத்தவனைப் புகழ்ந்தபடி மக்காவில் நுழைந்தார்கள். கொடுமை பல புரிந்த கொடிய எதிரிகளுக்கும் பொது மன்னிப்பை அளித்தார்கள். பகைமையை அழித்தார்களே தவிர, பகைவர்களை அழிக்கவில்லை. இவையே நமக்குப் படிப்பினைகள்.
உஹதுப் போர்க்களத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட, பிறகும் சத்தியப் பணிகள் சற்றும் குறையவில்லை.

“நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது”

நிலைமைகள் மாறும்போது தன்மைகள் மாறாதவர்கள் மலையினும் பெரியவர்கள் என்கிறது திருக்குறள்.

எந்நிலையிலும் மாறாத தன்மையுடன், என்றென்றும் மக்கள் பணி ஆற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வுலகில் அடையும், வெற்றி, தோல்வி இரண்டும் நமக்கு சமமானவையே. வெற்றி என்பது பெற்றுக்கொள்ள: தோல்வி என்பது கற்றுக்கொள்ள என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது இறுதி வெற்றி என்பது இறைவனின் திருப்தியைப் பெறுவதில்தான் உள்ளது-.

தோல்வியில் துவளாதவர்கள் என்பதை இறைவன் அருளால் மெய்ப்பித்துள்ளோம், வெற்றியில், தொலையாத வர்கள் என்பதையும் இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம்.

வெற்றிக்காக கடுமையாக உழைத்து விட்டோம். நமது பணி அத்தோடு முடிந்து விட்டது. அதற்கான கூலியை தருவது இறைவனின் நாட்டம். அந்தளவில் நமது மனதை பக்குவப்படுத்திக்கொள்வோம். நிதானம் காப்போம்.

http://www.tmmk.info/

No comments:

Post a Comment