Sunday, May 29, 2011

இந்தியாவுக்கு என்ன லாபம்?

கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்கிற சொலவடை உண்டு. இது கலகமாக இல்லாமல் விவாதமாக இருக்கும்போது, உண்மையாகவே பல விவகாரங்களை மறுசிந்தனைக்கு உள்படுத்துவதாக மாறிவிடுகிறது. அத்தகைய விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகள் (ஐஐடி) இந்திய மேலாண்மைக் கல்லூரிகள் (ஐஐஎம்) ஆகியன உலகத் தரத்தில் அமைந்திருக்கவில்லை. இவை ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஏதோ மாணவர்களின் புத்திசாலித்தனத்தால் பிரபல்யம் அடைந்துள்ளதே தவிர, இவை தன்னளவில் சிறந்ததாகவும், சிறந்த புலமைபெற்றவர்களைக் கொண்டதாகவும் இக்கல்லூரிகள் இல்லை என்கிற கருத்தை ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
இந்தக் கருத்து, மனித வள மேம்பாட்டுத் துறையை ஏற்றிருக்கும் கபில் சிபலுக்கு வருத்தம் அளித்திருக்கிறது என்பதோடு அதற்கு பல்வேறு மறுப்புகளையும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் வெளியாகும் 1,400 ஆய்வுக் கட்டுரைகளில் சுமார் 1,000 கட்டுரைகள் ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகியவற்றிலிருந்து வெளிவந்துள்ளன. இந்தியாவின் 25 சதவீத பேராசிரியர்கள் ஐஐடி-யில் உருவானவர்கள் என்பதுதான் கபில் சிபல் வாதம்.
கபில் சிபில் வாதம் உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்தில் உள்ள நியாயம் வெளிப்படையானது. ஒருவேளை அவர் சொல்லிய விதம் கருத்து மாறுபாட்டுக்கு இடம் தரலாமேயொழிய, அந்தக் கருத்து சிந்தனைக்கு உரியது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி-யும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குகிறது என்றாலும்கூட, இதன் தரம் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கான தனி நுழைவுத் தேர்வுகள் உள்ளன. அதேபோன்றுதான் ஐஐஎம் கல்லூரிகளில் மேலாண்மைக் கல்வி தொடர்பான படிப்புக்கும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை இரண்டு படிப்புகளிலும் சேருபவர்கள் இந்தியாவில் மிக உயர்ந்த அறிவுத்திறன் (ஐ.கியு) உள்ளவர்கள் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் செலவிடப்படுகிறது.
இவையன்றி, ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றுக்கு இணையான கல்வியைத் தருவதாகக் கூறும் தனியார் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. இந்தக் கல்வி நிறுவனங்கள் அண்மைக்காலமாக வெறுமனே ஆண்டுக்கு ரூ. 18 லட்சம் முதல் ரூ. 25 லட்சம்வரை சம்பளம் வாங்கும் பட்டதாரிகளை உற்பத்தி செய்து அனுப்புகின்றனவே தவிர, இவை ஆராய்ச்சிகளில் ஈடுபடவில்லை என்பதும், இவற்றின் சிறந்த மாணவர்கள் இதே கல்வி நிறுவனங்களில் கல்வி பயிற்றுவிக்கும் பணிக்குத் திரும்புவதில்லை என்பதும் மாபெரும் உண்மை. இதற்கு மிகப்பெரும் காரணமாக இருப்பது, இந்த ஆய்வுகளிலும், கல்விப் பணியிலும் பன்னாட்டு நிறுவனங்களில் இவர்களுக்குச் சம்பளமாகக் கிடைக்கும் பெருந்தொகை இதில் கிடைப்பதில்லை என்பதுதான்.
மிகப் பெரும்பான்மையான ஆய்வுக் கட்டுரைகள் ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றிலிருந்துதான் வெளியாகியுள்ளன என்று அமைச்சர் கபில் சிபல் கூறினாலும், இந்த ஆய்வுகள் எவை குறித்தவை, யாருக்காகச் செய்யப்பட்டவை என்பதை நுட்பமாகப் பார்த்தோமேயானால், இவை பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களின் நிதிநல்கையுடன், அவர்களது குறிக்கோளையெட்டுதற்கான களம் அமைத்துக் கொடுக்கும் ஆய்வுகளாகத்தான் இருக்கின்றன என்பது தெரியவரும்.
இன்றைய விவசாயத்தின் சிக்கல் என்ன, இன்றைய விவசாயியின் தேவை என்ன, இதை எவ்வாறு அரசும் தனி நபர்களும் செய்ய முடியும் என்பது பற்றிய ஆய்வுகள் நடந்திருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது என்று சொல்லிவிடலாம். அதேபோன்று, இன்றைய நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் தேவை, அவர்களது வாங்குதிறன் குறித்த பொருளாதார ஆய்வுகளும் மிகக் குறைவு. இன்றைய அரிய கண்டுபிடிப்புகளை எவ்வாறு எளிமைப்படுத்தி, மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய கருவிகளை உருவாக்க முடியும் என்கிற அறிவியல் ஆய்வுகளும் மிகக் குறைவு.
அப்படியே, அறிவியலில் ஆய்வுகள் செய்தால், அவை பன்னாட்டு நிறுவனத்தின் இயந்திரங்களை மேலும் நுட்பமானதாக மாற்றி, அவற்றை நம் தலைமேல் கட்டுவதற்காகத்தான் இருக்கும். அதேபோன்று இந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆய்வுகள் பெரும்பாலும், இந்தியர்களை மேலும் மோசமான நுகர்வோராக மாற்றுவது எப்படி என்பதாகத்தான் இருக்கின்றன.
இவர்களது தொழில்நுட்ப ஆய்வுகள் இந்தியாவின் தொழிற்கருவிகளின் விலையைக் குறைக்க உதவவில்லை என்பது குறிப்பிட்ட இயந்திரத் தயாரிப்பில் எந்த நிறுவனங்கள் பயனடைகின்றன என்பதைப் பார்த்தாலே தெரியும். இவர்கள் ஆய்வுகளால் பன்னாட்டு நிறுவனங்கள் நம் மீது திணித்து வரும் பொருள்களின் பட்டியல் நீளமானது.
இந்த நிலைமையை மாற்றி, இந்திய மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறிப்பாக இந்தியாவின் தேவைகளை முன்னிறுத்திய ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதேபோன்று இவர்களது மேலாண்மைப் படிப்புகளும் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல், வெறுமனே வெளிநாடுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியாவின் அதிபுத்திசாலிகளை அனுப்பி வைக்கும் வாசலாக இக்கல்லூரிகள் இருந்தால் அதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்?
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களை உயர்த்துவது பற்றிய ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படித்து முடிப்பதற்கு முன்பாகவே பல கார்ப்பரேட் நிறுவனங்களில் ஐந்து இலக்க ஊதியம் பெறவும், பன்னாட்டு நிறுவனங்களால் அடையாளம் காணப்பட்டு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெறவும் முடியும் என்கிற நிலையில் இப்படியொரு எதிர்ப்பு கிளம்புவதே வேடிக்கையாக இருக்கிறது. இங்கே படித்துப் பட்டம் பெற்றால், அடுத்த பத்தாண்டுகளுக்காவது இந்தியாவில்தான் பணியாற்றுவோம் என்று உறுதிமொழி கொடுப்பவர்களுக்கு வேண்டுமானால் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதை ஏற்கலாமே தவிர, மற்றவர்களுக்குக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தினால்கூட தவறே இல்லை. குறைந்த கட்டணத்தில் அரசு வரிப்பணத்தில் யாருக்கோ பயன்படப்போகும் இவர்களது படிப்பால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

No comments:

Post a Comment