Friday, March 11, 2011

ஜப்பானில் பூகம்பம்-சுனாமி: 22 பேர் பலி-தைவானையும் மினி சுனாமி தாக்கியதுஜப்பானில் பூகம்பம்-சுனாமி: 22 பேர் பலி-தைவானையும் மினி சுனாமி தாக்கியது

ஜப்பானில் பூகம்பம்-சுனாமி: 22 பேர் பலி-தைவானையும் மினி சுனாமி தாக்கியது

டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

சுனாமிக்கு லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஒனஹாமா மாகாணத்தில் மியாகி என்ற இடத்துக்கு அருகே பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.

ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து மியாகி கடலோரப் பகுதி உள்பட ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 13 அடி உயரமுள்ள மிக பயங்கர அலைகள் கடலோரப் பகுதிகளில் புகுந்தன.

கடலுக்குள் போன லட்சக்கணக்கான வாகனங்கள்:

தப்பியோடக் கூட முடியாத அளவுக்கு கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் அடுத்தடுத்துத் தாக்கி ஊர்களுக்குள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின. வீடுகளின் இடிபாடுகளையும் லட்சக்கணக்கான வாகனங்களையும் அந்த அலைகள் அடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றன.

தொடர்ந்து பயங்கர அலைகள் அடுத்தடுத்து வந்து தாக்கின. இதில் கடலிலிருந்து ஏராளமான கப்பல்கள், படகுகளும் நிலப் பகுதிகளுக்குள் அடித்து வரப்பட்டன.

முன்னதாக இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உள்பட ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதையடுத்து கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின.

மேலும் அலைகள் ஊருகளுக்குள் புகுந்தபோது பல எரிவாயு குழாய்கள் உடைந்து தீப் பிடித்துக் கொண்டு ஆங்காங்கே பயங்கர வெடி விபத்துகளும் ஏற்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 400 கி.மீ. தூரத்திலும் கூட எரிவாயுக் குழாய்கள் சேதமடைந்து வெடி விபத்துகள் ஏற்பட்டு தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பல பகுதிகளில் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானின் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஜப்பானை நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களும் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

விமான நிலையம் அழிந்தது:

சென்டெய் நகர் உள்பட வடக்கு ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சென்டாய் நகர விமான நிலையம் அழிந்தே போய்விட்டது.

இந்த பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளால் இதுவரை 88 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பெருமளவில் உயிரிழப்புகளும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நிவாரணப் பணியில் முப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். டோக்கியோவில் நாடாளுமன்றமும் பயங்கரமாக குலுங்கியதையடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அணு மின் நிலையத்தில் தீ:

இந்த நிலநடுக்கத்தால் கொயோடோவில் உள்ள தொஹோகு ஒனகாவா அணு மின் நிலையத்திலும், பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் செல்போன் தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன.

ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 மிக சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன.

டோக்கியோவிலும், புறநகரிலும் 40 லட்சத்துக்கும் மேலான கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜப்பான் இருளில் மூழ்கியுள்ளது.

ஜப்பானைத் தொடர்ந்து ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவுகள், தைவான், மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய கடரோலப் பகுதிகளை சுனாமி தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 பேர் பலி:

பூகம்பம் மற்றும் சுனாமிக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தைவானையும் சுனாமி தாக்கியது:

ஜப்பானை உலுக்கியெடுத்த சுனாமி அலைகள் இன்று மாலையில் தைவானையும் தாக்கியது. இருப்பினும் இவை மிகச் சிறிய அளவிலான அலைகளாகவே இருந்ததாகவும், சேதம் ஏதும் இல்லை என்றும் தைவான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Read:  In English 
தைவானின் கிழக்கு மற்றும் வட கிழக்குக் கடலோரங்களை இந்த மினி சுனாமி அலைகள் தாக்கின. அப்போது அலைகள் 4 இன்ச் உயரத்திற்கு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரிய அலைகள் வர வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி அபாய எச்சரிக்கை அறிவிப்பை விலக்கிக் கொண்ட பிறகே தாங்களும் எச்சரிக்கை அறிவிப்பை விலக்கிக் கொள்ளவுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.

இந்த மினி சுனாமி தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளிலிருந்து மக்களை தைவான் அரசு அப்புறப்படுத்தி விட்டது. முழு தயார் நிலையில் மீட்புப் படையினர் வைக்கப்பட்டனர்.
 
Tnks thatstamil

No comments:

Post a Comment