Monday, March 21, 2011

உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட் தேர்தல் கமிஷன் முன்பு ஆஜராக உத்தரவு

கரூர் : தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட்டை டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13 ம் தேதி சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், மற்றும் சிறு சிறு அமைப்பகள் ஒரு பக்கமாகவும் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் தி.மு.க. அரசுக்கு சாதகமாக தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட், உளவுத்துறை எஸ்.பி. சந்திரசேகர் ஆகியோர் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது .இதே கோரிக்கைய தமிழகத்தின் பல்வேறு சமூக அமைப்புகளும் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி இருந்தன.

இந்த நிலையில், நேற்று சனிக்கிழமை டி.ஜி.பி. லத்திகா சரண், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், தென் மண்டல ஐ.ஜி. பாலசுப்பிரமணியன், மதுரை போலீஸ் கமிஷனர் பாரி, மதுரை எஸ்.பி. சின்னச்சாமி, திருவண்ணாமலை எஸ்.பி. பாபு, திண்டுக்கல் டி.ஐ.ஜி., ஜான் நிக்கல்சன் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன், தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரன் , மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜ், ஈரோடு மாவட்ட கலெக்டர் சவுண்டையா ஆகியோரை தேர்தல் கமிஷன் அதிரடியாக மாற்றியது.

இந்த நிலையில், தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட்டுக்கு தேர்தல் கமிஷன் சம்மன் அனுப்பியதாகவும், அதில் மார்ச் 21 ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனில் விசாரணைக்கு ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய தேர்தல் வரலாற்றில், இது வரை ஒரு மாநில உளவுத்துறை அதிகாரியை தேர்தல் கமிஷன் டெல்லிக்கு அழைத்து விசாரிப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment