Saturday, March 12, 2011

கண் சிகிச்சை ஊழல்!!!

கண் சிகிச்சை ஊழல்!!!


இந்நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு ஊழல்தான். ஊழலை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதும் தெளிவான நிலைபாடு.சிறிய அளவில் நடைபெறும் ஊழல்களை கண்டு கொள்ளாமல் சமரசம் செய்து கொண்டு அனுமதிப்பதுதான் மிகப் பெரிய ஆபத்தில் சென்று விடுகிறது.ஆனால், நாம் அனைவருமே, ஊழலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், ஆண்டிமுத்து ராசாவின் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலை நினைத்துப் பார்த்தால், இப்போது எந்த ஊழலுமே சாதாரணமாகத் தான் தோன்றுகிறது. ஆனால், சிறியதோ, பெரியதோ, ஊழல் ஊழல் தான்.

தங்கள் கடமையைச் செய்ய வேண்டிய கஸ்டம்ஸ் அதிகாரிகள், மும்பையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு, வாகனத்தை சோதனை செய்யாமல் அனுப்பியதால் தானே 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கொண்டு வர முடிந்தது ?இது போல பல்வேறு சம்பவங்களை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம். இது போல ஒரு ஊழல் காரணமாக 66 ஏழை கிராம மக்கள் பார்வை இழந்தார்கள் என்பதை அறிந்தால் நெஞ்சு பதை பதைக்கவில்லை ?

மத்திய அரசு, தேசிய பார்வைக் குறைவு கட்டுப் பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான கோடிகளை மாநிலங்களுக்கு ஒதுக்குகிறது. அந்த நிதியை வைத்து மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள பார்வைக் குறைவு கட்டுப் பாட்டு அமைப்புகளின் மூலம், பல்வேறு கண் முகாம்களை அமைத்து, இலவச புரை நீக்கு அறுவை சிகிச்சை, இலவச கண்ணாடி போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். மத்திய அரசு இது போல வழங்கும் நிதிகளை மாநில அரசின் தமிழ்நாடு பார்வைக் குறைவு கட்டுப்பாட்டுச் சங்கத்தின் மூலம் செலவிட்டு வந்தது, தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த அமைப்பு, தனியார் மருத்துவமனைகளோடு இணைந்து பல்வேறு முகாம்களை நடத்தி மத்திய அரசின் நிதியை செலவிடுவது வழக்கம்.இதன் ஒரு பகுதியாக, 2008ம் ஆண்டு, திருச்சியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனையோடு இணைந்து, தமிழக பார்வைக் குறைவு கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்டத்தில் இலவச கண் சிசிக்சை முகாம் ஒன்றை நடத்த திட்டமிடுகிறது.

இந்த திட்டத்துக்காக, துண்டறிக்கைகள் மூலம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப் படுகிறது. இலவச கண் சிகிச்சை முகாம் என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன் யார் வருவார்கள் ? கிராமப்புரத்தில் உள்ள ஏழைகள் ஓடோடி வந்தார்கள். ஒரு 100 பேர் வருகிறார்கள். அந்த 100 பேரும், கண் புரை ஏற்பட்ட முதியவர்கள்.

இந்த 100 பேரையும், ஜோசப் கண் மருத்துவமனையின் மருத்துவர் அஷோக் பரிசோதனை செய்கிறார். பரிசோதித்து அந்த 100 பேரில் 66 பேரை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்.   உங்களுக்கெல்லாம் அறுவை சிகிச்சை, அனைவரும் வாருங்கள் என்று அழைக்கிறார்.   அந்த 66 பேரும் நைனார்பாளையம் மற்றும் கடுவனூர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.   ஜோசப் மருத்துவமனை நிர்வாகத்தார், அவர்களை ஒரு வண்டியில் ஏற்றி பெரம்பலூர் ஏற்றிச் செல்ல எத்தனிக்கிறார்கள். அப்போது அந்த கிராமத்தினர், ‘அய்யா, இங்கேயே அறுவை சிகிச்சை செய்வீர்கள் என்றுதான் நாங்கள் கிளம்பி வந்தோம். அறுவை சிகிச்சை செய்வதால் நாங்கள் எங்கள் உறவினர்களைக் கூட அழைத்து வரவில்லைஎன்று தங்கள் சிரமங்களைத் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், ஜோசப் மருத்துவமனையின் டாக்டர்கள், உடனடியாக பெரம்பலூர் வாருங்கள் (அது எப்படிமோசமான விஷயங்கள் அத்தனைக்கும் பெரம்பலூர் மையமாக இருக்கிறது ?) அங்கே அறுவை சிசிக்சை முடிந்தவுடன், உங்களை பத்திரமாக இதே இடத்தில் இறக்கி விட்டு விடுகிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.

இதை நம்பி அந்த 66 அப்பாவி கிராம மக்கள், பெரம்பலூர் செல்கிறார்கள். பெரம்பலூர் சென்று அறுவை சிகிச்சை நடந்தவுடன் அத்தனை மக்களின் கண்களிலும் தாங்க முடியாத எரிச்சல். அலறுகிறார்கள்….. அலற்றுகிறார்கள்…… வலி தாங்க முடியாமல் ஓலமிடுகிறார்கள்…. 
அந்த ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?   அத்தனை பேருக்கும், சொட்டு மருந்து கொடுத்து, ஓடிப் போங்கள் பிரச்சினை செய்யாதீர்கள் என்று துரத்துகிறார்கள். அவர்களை சொந்த கிராமத்தில் கூட இறக்கி விடாமல் கள்ளக் குறிச்சி என்ற ஊரில் இறக்கி விடுகிறார்கள். 15 நாட்கள் கழித்து வாருங்கள் அது வரை வராதீர்கள் என்ற மிரட்டல் வேறு….இரண்டு நாள், மூன்று நாள் கழித்து, வலி பொறுக்க முடியாமல், பாதிக்கப்பட்ட கிராமத்தினர் ஒரு சிலர், மற்றொரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கையில் தான், தங்கள் பார்வை போய் விட்டது என்ற விபரம் தெரிய வருகிறது.   உலகமே இருண்டு விட்டதாக உணர்கிறார்கள். இருண்டு தானே போய் விட்டது ?

இந்தச் செய்தி எந்தப் பத்திரிக்கைகளிலும் வரவில்லை. ஒருமாதம் கழித்து இந்தச் செய்தி வெளிவருகிறது. செய்தி வந்ததும், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து, உடனடியாக சம்பந்தப் பட்ட மருத்துவமனையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 
இதற்கு பிறகு, அக்டோபர் 2008ல் கர்ண மகாராஜா கருணாநிதி, பாதிக்கப் பட்ட அனைவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணமாக பிச்சை போடுகிறார். ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவறான சிகிச்சை அளித்த மருத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்த நிலையில் தான், மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கிறது. இந்த வழக்கு, வழக்கமான நீதிமன்ற வழக்குகளைப் போல அல்லாமல் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது

இந்த வழக்கு பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு, தலைமை நீதிபதி இக்பால் மற்றும், டி.எஸ்.சிவஞானம் அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி இக்பால், இச்சமூகத்தில் உள்ள சாதாரண மனிதனுக்கு உள்ள கோபத்தை பிரதிபலித்தார். சிறப்பாக ஒரு விஷயத்தைச் செய்தார். அது என்னவென்றால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தை தேசிய பார்வை குறைபாடு கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப் படும் விதம், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது, தமிழ்நாட்டில் எப்படி செயல்படுத்தப் பட்டது என்பது போன்ற விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஜோசப் மருத்துவமனைக்கு ஒரு கோடியே, பதினைந்து லட்சத்து இருபத்தைந்தாயிரத்து இருநூற்று எண்பது ரூபாய் 2008-2009ம் ஆண்டுக்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளது. 
மத்திய அரசு தாக்கல் செய்த அத்தனை ஆவணங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், தங்கள் தீர்ப்பை வியாழனன்று அளித்தனர். தங்களது தீர்ப்பில்
பூர்வாங்கமாக பார்க்கும் போது, இலவச கண் மருத்துவ முகாம் என்ற பெயரில், அறுவை சிகிக்கை என்று கோரி, பல கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.   மத்திய அரசு மாநில அரசுக்காக ஒதுக்கிய மொத்த நிதியில் பாதிக்கும் மேல் ஜோசப் மருத்துவமனைக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பது எப்படி கண்காணிக்கப் படுகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை.

நிபுணர்கள் குழு, தங்களது அறிக்கையில் ஜோசப் மருத்துவமனைக்கு கண் புரை நீக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லை என்று தெரிவித்த பிறகும், எந்த அடிப்படையில் பார்வைக் குறைவு கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ஜோசப் மருத்துவமனை கண் சிகிச்சை முகாம் நடத்த எப்படி அனுமதி அளித்தார் என்பது எந்தச் சூழலில் என்பது எங்களுக்கு புரியவில்லை.என்று பதிவு செய்த நீதிபதிகள், உடனடியாக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். சிபிஐ தனது விசாரணையில், இந்த 66 கிராமத்தினர் கண் பார்வை இழந்த இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் பொறுப்பு என்ன, மற்றவர்களின் பொறுப்பு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு வழங்கிய மொத்த நிதியில் பெரும் பகுதி, ஜோசப் மருத்துவமனைக்கு எப்படி ஒதுக்கப் பட்டது என்றும், அந்த நிதி எப்படி செலவிடப் பட்டது என்றும் ஆறு வார காலங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.இதையடுத்து சிபிஐ விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், ஏதாவதொரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்களா ? ஸ்பெக்ட்ரத்தில் பணத்தை அடிப்பதை விடுங்கள்.   பார்வைக் குறைவை தடுக்க உருவாக்கப் படும் சங்கத்தில் கூடவா ஊழல் புரிவது ?

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியில் இருந்த காலத்தில், 1996ம் ஆண்டில், பி.ஆர்.பிந்து மாதவன் என்ற ஐஏஎஸ் அதிகாரி, Tamil Nadu Blindness Control Society மற்றும், Tamil Nadu AIDS Control Society ஆகிய இரண்டு அமைப்புகளின் நிதியையும் கையாடல் செய்ததும், அந்த சங்கங்கள் தயாரிக்கும் விளம்பரப் படங்களுக்கான ஒப்பந்தம் செய்வதில் அப்போது பல லட்ச ரூபாய் ஊழல் புரிந்ததும் தெரிய வந்தது. வழக்கமாக நடப்பதைப் போல, அந்த வழக்குகளிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், ஒருவரும் தண்டிக்கப் படாமல் மூடப் பட்டது. அந்த வழக்கில், பி.ஆர்.பிந்துமாதவன் ஐஏஎஸ் சிறைக்கு அனுப்பப் பட்டிருந்தால், இந்தத் தவறு ஒரு வேளை நடந்திருக்காது அல்லவா ?

யோசித்துப் பாருங்கள் தோழர்களே….. ! நமது தாய்க்கும் தந்தைக்கும் அரசாங்கத்தின் அயோக்கியத்தனத்தின் காரணமாக கண்பார்வை போனால் என்ன கோபம் வரும் ?

கண்பார்வை இழந்த கிராமவாசிகளுக்கு, ஒரு லட்ச ரூபாயை பிச்சையாக வீசி விட்டு, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் கருணாநிதி, தனது மகளுக்கோ, மனைவிக்கோ, ஒரு சிறிய நகரம் அளவுக்கு இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கோ, இப்படி கண்பார்வை போனால், ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, அமைதியாக இருப்பாரா ?
சம்பவம் நடந்த பொழுது பெரம்பலூர் கலெக்டராக இருந்தவர் அனில் மேஷராம்.   இவர் ஆண்டிமுத்து ராசாவின் நெருங்கிய கூட்டாளி என்பதும், பெரம்பலூர் விவசாயிகளின் நிலங்களை சாதிக் பாட்சாவின் க்ரீன் ஹவுஸ் ப்ரமொட்டர்ஸூக்காக, பறித்து எம்ஆர்எஃப் ஆலைக்கு வழங்கியவர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. 

நீதிமன்றம் இந்த நேர்வில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் என்ன நடந்திருக்கும் ?

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், கண் பார்வை இழப்பை சரி செய்ய முடியுமா ?

No comments:

Post a Comment