மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தூதிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்
13 Mar 2011 மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் நமது தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்புப் பேட்டி.கேள்வி:மாற்று அரசியலுக்கான முன் முயற்சி என்ற அடிப்படையில் மனித நேய மக்கள் கட்சியை உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் கட்சியின் பொதுவான செயல்திட்டம் என்ன?
பதில்:மாற்று அரசியல் என்பது எல்லா வகையிலும் மாற்று அரசியல். அதாவது, ஆடம்பர அரசியல் நிறுத்தப்பட வேண்டும், கட்அவுட் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் நாங்கள் மாற்று அரசியலுக்கான முக்கிய விஷயங்களாக வைக்கிறோம். இதுமட்டுமல்லாமல் எங்கள் கட்சியின் வேட்பாளர்களை கூட தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கிறோம். குறைந்தது எங்கள் கட்சியில் மூன்று ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் சமுதாயத்திற்காக எத்தகைய தியாகங்களை செய்திருக்கிறார்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் போன்ற இந்த அளவுகோலின்படி நாங்கள் எங்கள் வேட்பாளர்களை தீர்மானிக்கிறோம்.
ஆனால் இன்றைய அரசியல் கட்சிகளெல்லாம் தங்கள் தொகுதிகளை பணக்கார வேட்பாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். பணமிருந்தால் ஒருவர் சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ உறுப்பினராக செல்லமுடியும் என்ற நிலைமை இன்றைய இந்திய அரசியலில் இருக்கிறது.
கேள்வி:அ.இ.அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்துள்ள நீங்கள் முஸ்லிம் சமூகம் சார்பாக என்னென்ன கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள்? அவற்றை நிறைவேற்றுவதாக அவர்கள் வாக்களித்துள்ளார்களா?
பதில்:அதாவது செல்வி.ஜெயலலிதா அவர்களை நாம் சந்தித்தபோது, முஸ்லிம்களின் இடஒதுக்கீடை 3.5% யிலிருந்து கூடுதலாக ஒதுக்கித் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
இரண்டாவதாக உருது முஸ்லிம்களுடைய பல்வேறு பிரச்னைகளை நாங்கள் கோடிட்டுக் காட்டி, அந்த உருது மொழியை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். அடுத்ததாக தமிழக அரசு கொண்டுவந்த திருமணப் பதிவுச்சட்டத்தில் பல விஷயங்கள் முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் தலையிடுகின்ற காரணத்தினால், அதையும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்கின்ற போது முஸ்லிம்களுடைய வேண்டுகோளுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
கேள்வி:வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். இத்தேர்தலில் பெரும்பாலும் முஸ்லிம் வாக்காளர்கள்தாம் உங்களது இலக்கு. பொதுவாகவே அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மீது தமிழக முஸ்லிம்களுக்கு வெறுப்பு உள்ளதே. காரணங்கள் உங்களுக்கு தெரிந்ததுதான். குஜராத் இனப்படுகொலை புகழ் மோடியை நேரில் சென்று வாழ்த்தியது, வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தது, முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை எனக் கூறியது, கோத்ரா ரெயில் எரிப்புக்கு சிறுபான்மை மக்கள் மீது பழி போட்டது, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலில் கரசேவைக்கு அனுமதியளிக்கக் கோரியது உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இரு திராவிடக் கட்சிகளுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தாலும்
கூட அ.இ.அ.தி.மு.க.விடம் கொஞ்சம் அதிகமாக ஹிந்துத்துவா சாயல் தென்படுகிறதே?
பதில்:செல்வி.ஜெயலலிதா அவர்களின் மீது கடந்த காலத்தில் நாங்கள் வைத்த எந்த விமர்சனத்தையும் வாபஸ் பெறவில்லை. அதே நேரம் ஜெயலலிதா அவர்களின் மீது எத்தகைய குற்றச்சாட்டை நீங்கள் அடுக்குகிறீர்களோ அதே குற்றச்சாட்டு கருணாநிதிக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். பாபர் மஸ்ஜித் விஷயத்தில். அவர்கள் வந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்று ஜெயலலிதாவை வலியுறுத்தினார்கள். ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டுத்தான் அங்கே கோயில் கட்டவேண்டும் என்று சொன்னார்களா என்று கேட்டோமென்றால் அதற்கு ஜெயலலிதா மறுப்பு தெரிவிக்கிறார். நான் அப்படிச் சொல்லவேயில்லை. தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பேசும் பொழுது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினேன், பாபர் மசூதியை இடித்துவிட்டுத்தான் கட்டவேண்டும் என்று நான் எப்போதும் சொல்லவில்லை என்று ஜெயலலிதா தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இரண்டாவது விசயம் அவங்க வந்து மோடிக்கு விருந்து கொடுத்தாங்க, பா.ஜ.க அரசோடு உறவு வைத்தாங்க என்றெல்லாம் சொல்றீங்க, அது சம்மந்தமாக எங்களுடைய தாய்கழகம் தமுமுக எத்தகைய விமர்சனங்களை ஜெயலலிதா மீது முன் வைத்ததோ அந்த விமர்சனங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. அதை நாங்கள் வாபஸ் பெறவில்லை.
ஆனால் கடந்த காலங்களில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததில் கலைஞர்தான் முன்னின்றார். அதிகமாக 13 மாதங்கள்தான் ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ஆனால் கலைஞர் அவர்கள் ஏறத்தாழ முழுமையான காலங்களில் பா.ஜ.க.வுடைய கூட்டணியில் நீடித்து எல்லா பதவி சுகங்களையும் பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஜெயலலிதா விருந்து வைத்தது குற்றம் என்று சொன்னால், கலைஞர் கருணாநிதி அவர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்த காலத்தில்தான் குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆக, விருந்து வைத்தது ஒரு குற்றம் என்பதை விமர்சிக்கின்ற நேரத்தில், அதை மட்டுமே குற்றமாகப் பார்க்கக்கூடியவர்கள் ஏன் பா.ஜ.க.வின் கூட்டணியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பங்காளியாக இருந்தபோது 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்பதைப் பற்றி யாருமே பேசுவதில்லை.
கலவரம் பற்றி எரிந்த அந்த நேரத்தில் மத்திய கூட்டணியில் கலைஞரோடு பங்காளியாக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குஜராத் கலவரத்தைக் கண்டித்து கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறினார். ஏன் கலைஞர் அதைப் போன்று செய்யவில்லை? இப்போது ஜெயலலிதாவை குற்றம் சுமத்துபவர்கள் அதே குற்றச்சாட்டை ஏன் கலைஞர் மீது வைக்கவில்லை?
கேள்வி:இந்தியாவில் அதிகாரத்திலிருந்து வெளியே நின்றுக்கொண்டிருக்கும் நிலைமைதான் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உருவாவதால் மனித வளம்,பொருளாதாரம், முயற்சிகள் எல்லாம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளதல்லவா? அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து அரசியல் களத்தில்
செயல்பட முடியாதா? அவ்வாறு உருவானால் உங்களுடைய பதில் எவ்வாறிருக்கும்?
பதில்:பதில்:அதாவது ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கூட்டுக் குடும்பத்தை உங்களால் நடத்த முடிகிறதா? 25 நபர் கொண்ட கூட்டுக் குடும்பத்தை உங்களால் ஒன்றுபட்டு வழிநடத்த முடியவில்லை. 5000 முஸ்லிம்கள் உள்ள ஒரு ஊரில் ஒரு ஐக்கிய ஜமாஅத்தை நிறுவுவதற்கு அந்த முஸ்லிம்கள் கஷ்டப்படுறாங்க. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இன்றைக்கு 60 லட்சம் முஸ்லிம்கள் இருக்கக்கூடிய தமிழகத்தில் எல்லாரும் ஒரே நிலையில் இருக்கிறார்களா என்பது சாத்தியக் குறைவு.
ஆனால் எங்களுடைய கனவுத் திட்டம் ஒன்று இருக்கிறது. எல்லாரும் வெவ்வேறு அமைப்புகளை நடத்துவதில் தவறில்லை. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு பணிகளைச் செய்வதும் தவறில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பொதுவான நிலைப்பாடுகளில் ஒரு கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்ற கனவுத் திட்டத்தில் எங்களுடைய தாய்கழகம் தமுமுக இருக்கிறது. அதை இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு முன்னால் ம.ம.க. எந்த முஸ்லிம் அமைப்புகளுடனோ, அரசியல் கட்சிகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதாவது ஒட்டுமொத்த முஸ்லிம் இயக்கங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கூட்டணி முடிவாகி சீட் ஒதுக்கப்பட்ட பிறகு நீங்கள் ஆதரவு கேட்பதாகக் கூறப்படுவது பற்றி?
பதில்:இந்தக் குற்றச்சாட்டு எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும், நாங்கள் தமிழகத்தில் இருக்கக்கின்ற முஸ்லிம் அமைப்புகளில் வலுவான ஒரு அமைப்பு என்பது சமுதாயம் ஏற்றுக்கொண்ட உண்மை. அப்படி இருக்கின்ற பொழுது எங்களுக்கு என்று ஒரு செயற்குழு இருக்கின்றது, ஒரு பொதுக்குழு இருக்கின்றது. அந்தச் செயற்குழுவும் பொதுக்குழுவும் எதைச் சொல்கிறதோ அதைத்தான் எங்களுடைய உயர்நிலைக்குழு தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் தொகுதிப் பேச்சுவார்த்தையை நாங்கள் சென்று நடத்துறோம்.
எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஏன் போகவில்லை என்று சொன்னால், நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லோரும் என்ன சொல்றாங்க என்று சொன்னால் நான் உம்மி கொண்டு வரேன், நீ அரிசி கொண்டுவா என்கிறார்கள். பத்து அமைப்புகள் சேர்ந்து போகும்போது பத்து அமைப்புகளுக்கும் என்ன பின்னணி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
கேள்வி:அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாய இயக்கங்களை ஒற்றுமைப்படுத்த நடந்த முயற்சிகள் பற்றி?
பதில்:திருவளச்சேரியில் கடந்த ரமலானில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 2 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில், தமிழகத்தில் 19 இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதில் தாய்க் கழகமான தமுமுகவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த அடிப்படையில் குஜராத் கலவரம் நடந்த நேரத்தில்கூட தமுமுகவும் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்து பல கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றினோம். கண்டன மாநாடுகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்துவதற்கு காரணமாக இருந்தோம்.
நான் ஏற்கனவே சொன்னது போல் அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பாற்பட்டு சமுதாய அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கலந்தாய்வு அடிக்கடி நடத்தப்பட வேண்டும், ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆர்வம் எங்களுக்கு இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக அதை செயல்படுத்துவோம்.
கேள்வி:தமிழக முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 3.5
சதவீதம் இடஒதுக்கீட்டை கலைஞர் கருணாநிதி அரசு வழங்கியுள்ளது. இதற்காக நீங்கள் நன்றி தெரிவித்து பாராட்டு விழா கூட நடத்தியுள்ளீர்கள். இதனை ஒரு சாதனையாக கலைஞர் கருணாநிதி அவர்கள் முஸ்லிம் சமூகத்திடம் பிரச்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு பாதிப்பு வராதா?
பதில்:நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஏனெனில் கலைஞர் விரும்பி அவராக இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. கேரளாவில் முஸ்லிம்கள் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், கர்நாடகாவில் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், ஆனால் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நெடிய போராட்டங்களை நடத்தியது, நம்மைப் போன்ற வேறு சில சமுதாய அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திய பிறகு, போராட்டத்தின் நெருக்கடி தாங்காமல்தான் கலைஞர் இடஒதுக்கீடு தந்தார் என்பது உண்மை. குறிப்பாக 2007ம் வருடம் ஆகஸ்ட் மாதம் நாங்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாஷா அவர்களின் கல்லூரியில் மாநிலப் பொதுக்குழுவை நடத்தினோம். அந்த பொதுக் குழுவில் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தபோது இறுதி எச்சரிக்கை கலைஞருக்கு விடுத்தோம். 2007 டிசம்பர் 31க்குள் நீங்கள் இடஒதுக்கீடு தரவில்லை என்று சொன்னால், டாக்டர் ராமதாஸ் எத்தகைய வீரியமிக்க போராட்டங்களை களத்தில் எடுத்தாரோ அதை விட பன்மடங்கு வீரியமிக்க போராட்டங்களை நாங்கள் களத்தில் முன்னெடுப்போம், சாலைகளை மறிப்போம், ரயில்கள் ஓடாது, விமான நிலையங்களை முற்றுகை இடுவோம், கேபிள் வயர்களைக் கூட அறுப்போம் என்ற இறுதி எச்சரிக்கையை அந்த பொதுக் குழுவில் விடுத்தோம். அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நாட்களில்தான் கலைஞர் இடஒதுக்கீட்டை தந்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆக ஒரு பெரிய நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திய பிறகுதான் கலைஞர் கொடுத்தாரே தவிர மனமுவந்து கொடுக்கவில்லை.
கேள்வி:வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு நியமித்த ஆணையம் அமைக்கும் முயற்சியில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா?
பதில்:ஏறத்தாழ கடந்த 10 வருடங்களாக எங்களுடைய மாநில பொதுக்குழுவில், செயற்குழுவில் இதனைத் தீர்மானமாக நிறைவேற்றி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், எங்களுடைய கூட்டணி வெற்றி பெறுகின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைக்கின்ற பொழுது, நிச்சயமாக மனிதநேய மக்கள் கட்சி இந்த வெளிநாட்டு தொழிலாளர்களுடைய வாரியத்தை தனி அமைச்சகமாக ஆக்கி, எப்படி மலையாளிகள் கேரளாவில் தனி அமைச்சகமாக வைத்திருக்கிறார்களோ அதேபோல் மாற்றி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கம்பெனிகள் இங்கேயே நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கு அதை சட்டமாக்குவதற்கு நாங்கள் முழுமையாக போராடுவோம்.
கேள்வி:ஒரு சமுதாய அமைப்பு தாங்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்போவதாகப் பற்றி?
பதில்:கலைஞர் கருணாநிதியாலும் நிராகரிக்கப்பட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக தாங்களும் அரசியல் களத்தில் உயிரோட்டமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்காக இத்தகைய முடிவுகளையெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே இந்தச் சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடந்து நிராகரிக்கப்படுவார்கள். அவர்களால் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பதை இன்ஷா அல்லாஹ் சட்டமன்றத் தேர்தலின் களம் நிரூபிக்கும்.
கேள்வி:எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறீர்கள்? அதனை இறுதி செய்து விட்டீர்களா?
பதில்: 15 தொகுதிகளை அடையாளம் காட்டி அதிலிருந்து 3 தொகுதிகளை இறுதி செய்திருக்கிறோம். அந்த தொகுதிகள் எது என்பதை ஊடகங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்ஷா அல்லாஹ் இருக்கிறது. விரைவில் அநேகமாக ஒரு வாரத்தில் அந்தச் செய்தி வெளிவரும்.
Tnks http://www.thoothuonline.com/
No comments:
Post a Comment