Friday, March 11, 2011

வெறும் கண்துடைப்பா?

வெறும் கண்துடைப்பா?

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011-ஐ வெளியிட்டது. இதன்படி புகையிலையின் வேறுவடிவங்களான குட்கா, பான்பராக், ஜர்தா போன்றவற்றை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டு, மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இவை அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிபதிகள் ஒரு பிடி பிடித்ததால்தான் இந்தச் சட்டத்தை உடனடியாக அறிவித்திருக்கிறார்கள்.

குட்கா, பான்பராக், ஜர்தா போன்ற புகையிலைப் பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது என்பது இந்தப் புதிய விதிமுறையில் மிகத் தெளிவாக உள்ளது. அப்படியானால், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்கள் எல்லாவற்றுக்கும் இந்த விதி பொருந்த வேண்டும் அல்லவா? ஏன், இந்தப் புகையிலைப் பொருள்களை மட்டுமே குறிப்பிட்டு அறிவித்திருக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை பதில் சொல்லவில்லை என்றாலும் அதிகாரிகள் சொல்கிறார்கள். "குட்கா, பான்பராக் போன்றவை அடைக்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் அலுமினிய உள்பூச்சு கொண்டவை (மெட்டலைஸ்டு பிளாஸ்டிக்). இவை, மறுசுழற்சிக்குத் தகுதியற்றவை. ஆகவேதான் குட்கா, பான்பராக் ஆகியன மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளன'.

அப்படியானால் சட்டத்திலேயே இதை மெட்டலைஸ்டு பிளாஸ்டிக் என்று குறிப்பிட்டிருக்கலாமே! ஏன் குறிப்பிடவில்லை? இரண்டாவதாக, இந்தச் சட்டத்திலேயே மிகத் தெளிவாக பலஅடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் (மல்டிலேயர்டு பிளாஸ்டிக்) என்பதற்கு அலுமினிய உள்பூச்சு அல்லது சில்வர்தாள், காகிதம் அல்லது அட்டைகளுடன் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில், பிளாஸ்டிக் அல்லது மல்டிலேயர்டு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கலாமே!

இந்தச் சட்டம் வெறுமனே குழப்பதை ஏற்படுத்தி, சட்டத்தின் ஓட்டைகளில் அனைவரும் வழக்கம்போல செயல்பட வழிவகுக்கிறதே தவிர, பிளாஸ்டிக் கழிவுகள் குறைக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணமோ, புகையிலைப் பொருள் விற்பனை குறைய வேண்டும் என்கிற விருப்பமோ மத்திய அரசுக்கு இருப்பதாக உணர்த்தவில்லை. இதனால் கிடைத்து வரும் வருவாயை இழக்க அரசு விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மெட்டலைஸ்டு பிளாஸ்டிக் என்பதைச் சட்டத்தின் வரிகளில் சேர்த்தால், இப்போது சந்தையில் உள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள், மூங்தால் போன்ற பருப்பு வகைகளைக் கொண்ட பாக்கெட்டுகள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் மற்றும் பழச்சாறு, குளிர்பான விற்பனையில் உள்ள டெட்ராபேக் எனப்படும் அட்டைப்பெட்டிகள் எல்லாமும் தடைசெய்யப்பட வேண்டியவை என்கிற வரம்புக்குள் வந்துவிடும். அரசுக்கு இதில் விருப்பம் இல்லை. இந்த உண்மையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். "எல்லாவற்றையும் தடை செய்வது இப்போதைக்கு இயலாது' என்று!

உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் குட்கா, பான்பராக் பற்றி வலியுறுத்திக் குறிப்பிட்டதால், இவர்களும் அதை மட்டுமே சட்டத்தில் சேர்த்துள்ளார்கள் என்றுதான் கருதத் தோன்றுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் அடிப்படையான கேள்வியே புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது பற்றியதுதான். இந்தியாவில் 90 விழுக்காட்டினர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படக் காரணம் புகையிலை என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் புகையிலை மெல்லுவோர் 75 விழுக்காடாகவும், சிகரெட் பிடிப்போர் 25 விழுக்காடாகவும் இருக்கிறார்கள். புகையிலை மெல்லுவோர் வகைப்பாட்டில்தான் குட்கா, பான்பராக், ஜர்தா போன்றவை 80 விழுக்காட்டு விற்பனையை ஆக்கிரமிக்கின்றன. புகையிலையால் ஏற்படும் வாய்ப் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் உச்ச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை அறிவுறுத்தியது. அதில் ஒன்றுதான் இவற்றை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து பட்டிதொட்டியெல்லாம் கிடைக்கச் செய்யும் வர்த்தக உத்தி. மத்திய அரசு வெறுமனே குட்கா, பான்பராக் ஆகியவற்றை மட்டுமே தனது சட்டத்தில் குறிப்பிட்டு, மற்றவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

எந்தவொரு உணவுப் பண்டமும், திரவப் பொருளாகவோ திடப்பொருளாகவோ, மறுசுழற்சியால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்படக்கூடாது என்றும் இந்தச் சட்டம் வரையறுத்துள்ளது. ஆனால், சாதாரண ஓட்டல்களில் பார்சல் கட்டித் தரப்படும் பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்டவையா என்பதை உறுதி செய்வது யார்?

சட்டத்தை அமல்படுத்தினாலும் இப்போதும்கூட பெட்டிக் கடைகளில் ஆங்காங்கே, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குட்கா, பான்பராக் விற்கப்படுகிறது. இதைத் தடைசெய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி நகராட்சி அமைப்புகளைச் சார்ந்தது. அவர்களாகிலும் இதில் கொஞ்சம் முனைப்புக் காட்டினால் புகையிலை பயன்பாடு ஓரளவு குறைவதற்கு உதவியாக அமையும்
 
 
Tnks Dinamani

No comments:

Post a Comment